இன்று கூச்சலிடுவோர் அன்று எலிகளை விழுங்கிய பூனைகளைப் போல் இருந்தனர் - சபையில் மங்கள
கே.பி. தலைமையில் 22 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோத்தபாயவுடன் பேச்சு நடத்திய போது எலிகளை விழுங்கிய பூனைகளைப் போல் வாலை சுருட்டிக் கொண்டிருந்தவர்கள் இன்று வீரர்களாகி வாய் திறக்கின்றனர் என நேற்று சபையில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் எம்.பி. தேசிய பாதுகாப்பு தொடர்பாக முன்வைத்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோடு நான் பேச்சுவார்த்தைகளை நடத்தியதை பெரிதுபடு த்தி அதற்கெதிரான கருத்துக்களை அபேராம குழு வெளியிட்டு வருகிறது. விமல் வீரவன்ச இதில் முன்னணியில் உள்ளார். ஒரு சிலர் நீதிமன்றம் செல்லப் போவதாக கூறுகிறார்கள்.
ஆனால் இன்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோடு பேசுவதற்கு எதிராக கூச்சலிடுகின்றனர். அன்றைய ஆட்சியிலும் அமைச்சர்களாக இருந்தவர்கள். அப்போது கே.பி. தலைமையில் 22 புலம் பெயர் தமிழ் அமைப்புக்களை சேர்ந்தோர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர். அன் றைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ இவ் அமைப்புக்க ளோடு பேச்சு நடத்தியுள்ளார்.
அது மட்டுமல்ல புலிகளுக்கு சர்வதேச ரீதியில் நிதி சேகரித்த தர்மலிங்கம் யோகேஸ்வரன் என்பவரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து பேச்சு நடத்தினார். இன்று கூச்சலிடுவோர் அன்று எலிகளை விழுங்கிய பூனைகளைப் போல் வாலை சுருட்டிக் கொண்டு மெளனமாக இருந்தனர்.
வாலை சுருட்டிக் கொண்டிருந்தவர்கள் இன்று வீரர்களாகி விட்டனர். புலம்பெயர் அமைப்புக்களுடன் அரசியல் தீர்வு தொடர்பாகவோ யுத்தக் குற்ற விசாரணைகள் தொடர்பாகவோ பேசவில்லை. மாறாக இலங்கையின் அபிவிருத்தி புலம்பெயர்ந்தவர்களின் நிபுணத்துவத்தையும் பங்கு பற்றுதலையும் பெற்றுக் கொள்வது தொடர்பாகவே பேசினோம்.
யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள் ளக விசாரணைகளே நடத்தப்படும். இந்த தீர்மான த்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அதேவேளை உள்ளக விசாரணைக்கு சர்வ தேசத்தின் உதவிகள் மட்டுமே பெற்றுக் கொள் ளப்படும் என்றார்.








