20 க்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஜனாதிபதியும் எஸ்.பி., ராஜிதவும் என்னைத் திட்டித்தீர்த்தனர்
சிறுபான்மை மக்களுக்கு பாதகமான தேர்தல் முறைமை அமைச்சரவைக்கு வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் இவ்விடயத்தை சீரழிக்க முற்படவேண்டாமென்று ஜனாதிபதியும், அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் என்னை திட்டித்தீர்த்தனர் என அமைச்சர் திகாம்பரம் நேற்று சபையில் தெரிவித்தார்.
நடைமுறையிலுள்ள தேர்தல் முறையே சிறந்தது, எனினும் புதிய முறைமை எமது மக்களுக்கு அநீதியாக இருக்கக்கூடாது, அவ்வாறு அநீதி இழைக்கப்பட்டால் முழுமையாக எதிர்ப்போம் என்றும் கூறினார். பாராளுமன்றத்தின் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற புதிய தேர்தல் முறைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
அமைச்சரவை பத்திரமொன்று இது தொடர்பில் முன்வைக்கப்படும்போது அதற்கு முழுமையான எதிர்ப்பை தெரிவித்தவன் நான் இவ்விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன. இந்த பேச்சுவார்த்தைகளின் போது சில சந்தர்ப்பங்களில் தொகுதிவாரி முறையில் 165 ஆசனங்கள் என்று கூறப்பட்டது. மேலும் ஒரு முறை 125 ஆசனங்கள் என்றும் கூறப்பட்டது, அத்துடன் 225 உறுப்பினர்களை கொண்டதாக சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இருந்தபோதிலும் தொகுதிவாரி முறை ஆசன எண்ணிக்கை ஒரேயடியாக 125 ஆக குறைந்தது.
இவ்விடயம் தொடர்பில் நான் அமைச்சரவை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தபோது ஜனாதிபதி எனக்கு ஏசினார். அத்துடன் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோரும் என்னை திட்டித்தீர்த்ததுடன் இவ்விடயத்தை சீரழிக்க முற்பட வேண்டாமென்றும் கூறினர்.
நான் இவ்விடயத்தை சீரழிப்பதற்கு ஒருபோதும் முற்படவில்லை இத்திருத்தம் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும். எனினும் 20 ஆவது திருத்தம் தொடர்பில் அச்சமொன்றும் உள்ளது. தொகுதி முறையில் 125 ஆசனங்களாக குறைக்கும் பட்சத்தில் எமது ஆசனங்களை அதிகரிப்பதில் சிக்கல் உள்ளது. எனினும் 165 ஆசனங்கள் எனும்போது எமக்கு சிக்கல் இருக்காது.
தொகுதி முறை தேர்தலுக்கு செல்லும் பட்சத்தில் நுவரெலியா, மஸ்கெலியா தொகுதிகளில் மட்டுமே எமக்கு ஆசனங்களை பெறும் சாத்தியமுள்ளது. ஆனால் பதுளை கொழும்பு, கண்டி போன்ற மாவட்டங்களில் நாம் எமது உறுப்பினர்களை தெரிவு செய்து கொள்வது முடியாத காரியமாகும்.
ஏனெனில் இப்பகுதிகளில் எமது மக்கள் சிங்கள மக்களுடனேயே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நுவரெலியா, மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் இருப்பதால் அத்தேர்தல் தொகுதியை நான்கு தொகுதிகளாக உருவாக்கும் படியே கோரினோம். அதுபோன்று அங்குரங்கெத்த மற்றும் வலப்பனை தொகுதியை பல்லின ஆசனத்தொகுதிகளாக பிரேரிக்குமாறும் கேட்டுக் கொண்டோம். அத்துடன் பதுளை, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலும் பல்லின ஆசனத்தொகுதியை ஏற்படுத்துமாறு கூறியிருந்தோம்.
உண்மையான விடயங்களை கூறுவதோ வெளிப்படுத்துவதோ கிடையாது மாறக எல்லாம் தர முடியும் என கூறுகின்றனர் அவ்வாறு கூறுவதை நாம் எவ்வாறு நம்பமுடியும். எமது மக்களின் தொகைக்கேற்ப பாராளுமன்றத்தில் 11 உறுப்பினர்கள் இருப்பது அவசியம். அவ்வாறான வகையில் இந்த தேர்தல் திருத்தம் வருமாக இருந்தால் இணைந்து செயற்பட முடியும் இல்லாதவிடத்து எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கப்படாவிட்டால் இத்திட்டத்திற்கு நாம் எதிராகவே செயற்படுவோம்.
அடுத்து அமையப்போவது ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியாக இருக்கலாம் இல்லாவிட்டால் சுதந்திரக்கட்சி ஆட்சியாக இருக்கலாம். எப்படியிருப்பினும் இதனை ஆறுதலாக அவசரமில்லாது நிறைவேற்றிக் கொள்ள முடியும். அவசர அவசரமாக கொண்டு வரப்படுகின்ற திருத்தம் எதிர்காலத்தில் விளைவுகளையே ஏற்படுத்தும்.
சிறுபான்மையினரும் சிறு மற்றும் சிறுபான்மை கட்சியினரும் இன்று அச்சத்திலேயே இருக்கின்றனர் தற்போது நடைமுறையிலிருக்கின்ற தேர்தல் முறைமையே ஜனநாயகம் அதிகரித்துள்ள முறையாகும். விருப்பு வாக்கு முறைமையே சிறந்ததாகும். இதனூடாகவே எமது உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடியதாக இருக்கும். அதனால் இந்த முறைமையே வேண்டுமென்றும் நாம் கூறவில்லை. புதிய தேர்தல் முறையை கொண்டு வருவதென்றால் எமது சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படாத வகையில் அமைய வேண்டும். அநீதி இழைக்கப்பட்டால் நாம் எமது முழுமையன எதிர்ப்பை வெளியிடுவோம்.