Breaking News

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் அனந்தியின் சாட்சியம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற த்தில் அனந்தி அளித்துள்ள சாட்சியம், இறுதி நேர யுத்தத்தின் போது என்ன நடந்தது என்பதைப்பற்றி பலரையும் இப்போது திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றது. 

அப்போது நடந்தவைகள் பற்றி – குறிப்பாக அப்போதைய தமிழக அரசு எவ்வாறு நடந்து கொண்டிருந்தது என்பது பற்றி பலரையும் இப்போது பேசச் செய்திருக்கின்றது. இதன் காரணமாக தமிழக அரசியல் வானில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் அலையொன்று வீசத் தொடங்கியிருக்கின்றது.

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது கணவன் எழிலன் சற்லைட் தொலைபேசி வழியாக அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு உரையாடிய போது, அவர் அளித்த வாக்குறுதியையடுத்தே, தனது கணவனும், அவருடன் இருந்தவர்களும் இராணுவத்திடம் சரணடைந்ததாக அனந்தி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இறுதி யுத்தத்தின்போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர், எங்கு இருக்கின்றார்கள், என்ன ஆனார்கள் என்பது தெரியாத வகையில் பல முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் காணாமல் போயிருக்கின்றார்கள். அவர்களை அவர்களுடைய குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்களும் இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு சரணடைந்தவர்களில் பலர் கணவன், மனைவி, குழந்தைகள் என குடும்பங்களாக சரணடைந்திருந்தார்கள். 

அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், மற்றும் அங்கு அந்த வேளையில் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் நேரடியாகப் பார்த்திருக்கத் தக்கதாக இராணுவத்தினரிடம் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அந்த நேரம், இவ்வாறு விடுதலைப்புலிகள் சரணடைவதற்கு உதவியாக முன்னின்று இராணுவத்தினருடன் சிங்களத்திலும், தமிழில் சரணடைந்தவர்கள் தரப்பில் தமிழிலும் உரையாடி அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் உதவி செய்திருந்தார். 

அவர் தனது வெள்ளை நிற அங்கியை அணிந்த வண்ணம், அங்கு மக்கள் மத்தியிலும், இராணுவத்தினரிடையேயும் உலாவியதை, சரணடைவு நடவடிக்கையில் அங்குமிங்கும் ஓடிச் செயற்பட்டதைப் பலரும் கண்டுள்ளார்கள். அவ்வாறு செயற்பட்டிருந்த அவரும் காணாமல் போயிருப்பவர்களில் ஒருவராகியிருக்கின்றார்.

யுத்தம் முடிந்திருந்த அந்த பரபரப்பான பதட்டம் சூழ்ந்த அந்த நேரத்தில் தமது உறவுகளை சரணடையக் கொடுத்துவிட்டு, அவர்கள் பற்றிய தகவல்கள் எதனையும், இராணுவத்தினரிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ பெற முடியாமல் பலரும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் சிலர் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது, அவர்களை அரசாங்கம் எங்கே வைத்திருக்கின்றது, அவர்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தி, அவர்களை எங்களுக்குக் காட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். - உத்தரவிட வேண்டும் எனக் கோரி வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்திருக்கின்றார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்து இறுதி யுத்த காலத்தில் பெருமளவில் பேசப்பட்டிருந்தவராகிய எழிலன் சின்னத்துரை சசிதரன், அருட் தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட 14 பேருடைய ஆட்கொணர்வு மனுக்கள் பற்றிய விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்திலும், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

இந்த வழக்குகளில் முதல் தொகுதியாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த 5 மனுக்களை ஆய்வு செய்த வவுனியா மேல் நீதிமன்றம், இராணுவத்தினரிடம் சரணடைந்த நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் இடம்பெற்றிருந்தமையினால், அப்போது, அங்கு என்ன நடந்தது, எப்படி நடந்தது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பது போன்ற விபரங்கள் குறித்து விசாரணைகள் நடத்தி அவை பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. இதனையடுத்து, அங்கு நடைபெற்று வருகின்ற விசாரணைகளின் போதே எழிலன் எவ்வாறு சரணடைந்தார் என்பது பற்றி அவருடைய மனைவியும் வடமாகாணசபை உறுப்பினருமாகிய அனந்தி சசிதரன் நீதிமன்றத்தில் விபரித்திருந்தார்.

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் சரணடைவு என்பது சர்வதேசத்தின் குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாக இந்த சாட்சியத்தின்போது அனந்தி தெரிவித்திருந்தார் என்று, அவருடைய சார்பில் இந்த வழக்கில் ஆஜராகியிருந்த மனித உரிமைகள் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் அனந்தி அளித்துள்ள சாட்சியம் பற்றி பி.பி.சி.யிடம், தெரிவித்திருந்தார்.

யுத்தம் முடிவடைந்ததையடுத்து, தமது ஆயுதங்கள் மௌனிக்கச் செய்யப்பட்டுவிட்டதாக விடுதலைப்புலிகள் அறிவித்த சூட்டோடு, அவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள். யுத்தத்தில் இராணுவம் வெற்றிபெற்றவுடன், தமக்கு எதிராக யுத்த மோதல்களில் ஈடுபட்டு எஞ்சியிருந்த விடுதலைப்புலிகளை நோக்கி, அரசாங்கம் சரணடையுமாறு அதிகாரபூர்வமாகக் கேட்டிருந்தது. சரணடைபவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும். அவர்கள் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்படுவார்கள் என்று அரசாங்கம் தனது அறிவித்தலில் தெரிவித்திருந்தது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து தம்மை நோக்கி வந்த இலட்சக் கணக்கான மக்கள் மத்தியில் இராணுவத்தினர் ஒலி பெருக்கிகளின் ஊடாக இந்த அறிவித்தலை விடுத்திருந்தார்கள்.

மோசமான ஒரு யுத்தத்தின் முடிவில் தோல்வியைத் தழுவிக் கொண்டவர்கள், வெற்றிபெற்றவர்களிடம் தாங்களாகவே சரணடைவது என்பது இலகுவில் நடைபெறுகின்ற ஒரு காரியமல்ல. எதிரியிடம் சரணடைவதற்கு முன்னதாகத் தமது பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது என்பதை இயல்பாகவே அவர்கள் சீர்தூக்கிப் பார்க்காமல் காரியத்தில் இறங்கமாட்டார்கள். 

இது மனித இயல்பு. விடுதலைப்புலிகள் தமது கழுத்தில் சைனைட் குப்பிகளைக் கட்டிக்கொண்டு போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள். எதிரியிடம் பிடிபட நேர்ந்தால், தமது இரகசியங்களைக் காப்பதற்காக தம்மைத்தாமே அழித்துக் கொள்ள வேண்டும் என்பது, அவர்களுடைய இயக்கத்தின் இறுக்கமான நடைமுறையாகப் பின்பற்றப்பட்டு வந்தது. தமது நோக்கத்திற்காக எந்த வேளையிலும், எத்தகைய சூழ்நிலையிலும் தமது இன்னுயிரைத் தியாகம் செய்வதற்கு அவர்கள் தயாராக இருக்கும் வகையிலும், அவ்வாறே செயற்படும் வகையிலும் நேர்த்தியாகப் பயிற்சியளிக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் சைனைட் குப்பி வழங்கப்பட்டிருந்தது. இதனைப் பின்பற்றி எத்தனையோ விடுதலைப்புலி உறுப்பினர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்திருந்தார்கள்.

அத்தகைய இயல்பைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் எல்லாமே முடிந்துவிட்ட போது, யுத்தத்தில் அவர்கள் வெற்றிகொள்ள முடியாமல் போனபோது, சாதாரணமாக அவர்கள் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. அதன் பின்னணியில் பல விடயங்கள் இருந்தன. பல செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. பலர் சம்பந்தப்பட்டிருந்தார்கள். பலர் தொடர்புபட்டிருந்தார்கள். இவை பற்றிய விபரங்கள் யுத்தம் முடிந்தவுடன் பல்வேறு வழிகளிலும் பலராலும் பல சந்தர்ப்பங்களிலும் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால், யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னர், நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட ஒரு சாட்சியத்தில் இதுபற்றிய தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

விடுதலைப்புலிகளின் சரணடைவு என்பது சாதாரணமாக இடம்பெற்ற ஒன்றல்ல. அது சர்வதேசத்தின் பங்களிப்பில் இடம்பெற்றிருந்தது என்பதை அதில் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த சிலர் தாங்களாகவே முன்வந்து தெரிவித்திருந்தார்கள். ஆயினும் நீதிமன்றத்தின் சாட்சிக் கூண்டில் ஏறி, கண்கண்ட ஒரு சாட்சியாக, காணாமல் போயுள்ள எழிலனின் மனைவி அனந்தி இதுபற்றி சாட்சியமளித்துள்ளார் என்று சட்டத்தரணி ரட்னவேல் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரணமாக ஒரு விடயத்தை, தாங்களாகவே முன்வந்து தெரிவிப்பதற்கும் நீதிமன்றத்தில் சாட்சிக் கூண்டில் இருந்து ஒரு விடயத்தைத் தெரிவிப்பதற்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. முக்கியத்துவமும் இருக்கின்றது. அவ்வாறு தெரிவிக்கப்படுகின்ற விடயங்கள் அதி முக்கியத்துவம் பெற்று ஆவணமாக பதிவு செய்யப்படுகின்றது. மிகவும் முக்கியமான ஒரு விடயத்தைப் பற்றி எழுந்தமானத்தில் நீதிமன்றத்தில் வழங்கும் ஒரு சாட்சியத்தில் தெரிவித்துவிட்டு வர முடியாது. 

அவ்வாறு தெரிவிக்கப்படுகின்ற தகவலின் உண்மைத் தன்மை நம்பகத்தன்மை என்பவற்றை – சாட்சிகளை நெறிப்படுத்துகின்ற சாட்சியொருவரின் சார்பிலான சட்டத்தரணியும், அந்த சாட்சியம் உண்மையானதல்ல அல்லது குறித்த வழக்கு விசாரணைக்கு சம்பந்தப்பட்டதல்ல என்று வாதாடுவதற்காகத் தயார்ப்படுத்தலுடன் ஆஜராகியிருக்கின்ற எதிராளி தரப்பு சட்டத்தரணியும் பல்வேறு கேள்விகள், குறுக்குக் கேள்விகளின் மூலம் துளைத்து எடுத்துவிடுவார்கள். 

அத்தகைய ஒரு நிலையிலேயே – மிகவும் தீவிரமான ஒரு நிலையிலேயே விடுதலைப்புலிகளின் சரணடைவு என்பது இந்தியாவின் பங்களிப்புடன் இடம்பெற்றது என்பதை அனந்தி தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். தனது கணவன் இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு முதல் நாளன்று சற்லைட் தொலைபேசி வழியாக கனிமொழியுடன் பேசியதை, தான் அருகில் இருந்து கேட்டதாக அனந்தி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அப்போது, டிஸ்கோ என்றழைக்கப்படும், தமிழீழ காப்பகப் பொறுப்பாளரும் தங்களுடன் நின்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது கணவன் யாருடன் பேசுகின்றார் என்று கேட்டபோது,

அவர் கனிமொழியுடன் பேசிக்கொண்டிருப்பதாக டிஸ்கோ தன்னிடம் அப்போது தெரிவித்ததாகவும், பின்னர், தனது கணவனிடம் இதுபற்றி கேட்டு, அதனை அப்போது உறுதி செய்து கொண்டதாகவும் அனந்தி தனது சாட்சியம் பற்றி பி.பி.சி.யுடனான நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

'கனிமொழியுடன் சற்லைட் தொலைபேசியில் எனது கணவர் தொடர்பு கொண்டு பேசியபோது, முதலமைச்சர் கருணாநிதியின் சார்பில் எனது கணவருடன் கதைத்த கனிமொழி, நீங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடையுங்கள். உங்களை விடுவிப்பது தொடர்பாக நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம். உங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கின்றோம். நீங்கள் சரணடையுங்கள் என்ற வாக்குறுதியை அளித்தார். ஆனால் ஆறு வருடங்கள் கழிந்த பின்பு கருணாநிதி, கனிமொழி ஆகிய இருவரும் மௌனம் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த மௌனத்தை உடைப்பதற்காகவே இதனைப் (சாட்சியத்தைப்) பதிவு செய்கிறேன் என்று அனந்தி கூறியுள்ளார்.

'தொலைபேசியில் பேசி முடித்த பின்னர் என்னுடைய கணவர் என்னிடம் சொன்னார் -கருணாநிதியின் சார்பில் அவருடைய மகள் கனிமொழியுடன் பேசியிருக்கிறேன். ஆயுதங்களைப் போட்டுவிட்டு எங்களை சரணடையுமாறும், எங்களுடைய விடுதலை தொடர்பாகத் தாங்கள் பேசியிருப்பதாகவும் கூறியிருக்கின்றார்கள். எனவே, நாங்கள் சரணடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்' என்று அனந்தி தனது நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி இரவு எட்டு மணியளவில் முள்ளிவாய்க்கால் அருகில் ஒரு கொட்டிலில் இருந்தபோது இந்த உரையாடல் நடைபெற்றிருந்தது. அதன் பின்னர் மறுநாள் பிற்பகல் 2 மணியளவில் சரமும் சேட்டும் அணிந்த வண்ணம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தனது உதவியாளர்களுடன் தனது கணவன் வந்ததாகவும், அப்போது தனது பிள்ளைகளுடன் தானும் தனது கணவனின் பெற்றோரும் பெரும் எண்ணிக்கையிலான ஏனையோரும் இருந்தபோது, அடுத்த நாள் காலை எட்டு மணியளவில் தங்களிடம் வந்த அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் எழிலன் வாங்கோ சரணடையப் போவோம் என்று அழைத்துச் சென்றதாகவும், அப்போது அருட் தந்தை பிரான்சிஸ் ஜோசப் தன்னுடைய கையில் ஒரு பெயர்ப்பட்டியலை வைத்திருந்ததைக் கண்டதாகவும் அனந்தி தெரிவித்துள்ளார்.

'இராணுவத்தினரிடம் சரணடைவதற்காக எனது கணவர் சென்றபோது, நானும் எனது மூன்று பிள்ளைகளையும் கொண்டு அவர் பின்னால் சென்றேன். அப்போது அங்கிருந்த இராணுவத்தினரிடம் எனது தொழில் அடையாள அட்டையைக் காட்டியபோது, அவர்கள் என்னையும் பிள்ளைகளையும் வரவேண்டாம் என்று தள்ளிவிட்டு, எனது கணவரை மாத்திரம் அழைத்துச் சென்றார்கள். 

அங்கிருந்த உயர் அதிகாரிகளாகத் தெரிந்த இராணுவத்தினரில் ஒருவர் எனது கணவரைக் கண்டதும், 'எழிலன்' என்று அழைத்து அவரைத் தோளில் தட்டி உள்ளே அழைத்துச் சென்றதைக் கண்டேன். அதன் பின்னர் அவருக்கு என்ன நடந்தது எங்கு அவர் வைக்கப்பட்டிருக்கின்றார் என்ற தகவல்கள் எதனையும் இராணுவத்தினரிடமிருநதோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ என்னால் பெற முடியவில்லை' என்று மிகுந்த கவலையோடு குறிப்பிட்டார்.

ஆனால் இந்த சாட்சியம் பற்றிய தகவல்கள் வெளியாகியவுடன் கனிமொழி அவ்வாறான உறுதிமொழி எதனையும் தான் வழங்க வில்லை என்று மறுத்துள்ளார். யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது யாராவது அத்தகைய வாக்குறுதிகளை வழங்குவார்களா என்றும் கனிமொழி வினா எழுப்பியிருந்தார்.

ஆயினும் அனந்தி தான் தெரிவித்த தகவல் சரியானதே – கனிமொழியுடன் தனது கணவன் பேசியது உண்மை. விடுதலைப்புலிகளை சரணடையுமாறு கூறியதும் உண்மை. சரணடைபவர்களை விடுவிப்போம் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம் என வாக்குறுதியளித்ததும் உண்மை என மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதற்கு முன்னதாக விடுதலைப்புலிகளின் சரணடைவு தொடர்பில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பில் கனிமொழியுடனான கலந்துரையாடல் பற்றி, அனந்தி 2013 ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஆனந்தவிகடனுக்கும், அதேபோன்று எழுத்தாளரும், இயக்குநருமாகிய புகழேந்தி தங்கராவுக்கும் பேட்டியளித்ததாகவும் அது அப்போது வெளிவந்திருந்ததாகவும், எனினும் கனிமொழியோ கருணாநிதியோ அது குறித்து வாயே திறக்கவில்லை என்றும் அனந்தி தெரிவித்தார்.

 அது மட்டுமல்லாமல் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்தவுடன் தமிழகத்திற்குச் சென்றிருந்தபோது நியூஸ் 7 என்ற தமிழகத் தொலைக்காட்சி சேவைக்கு, அவர்களுடைய கலையகத்திற்குச் சென்று நேரடியாக வழங்கிய நேர்காணல் ஒன்றிலும் தனது கணவன் கனிமொழியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டது, அவர் அவர்களை சரணடையுமாறு கூறி அதற்கான உறுதிமொழி வழங்கியது பற்றியும் தெரிவித்திருந்தார். 

இந்த நேர்காணல் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி ஒளிபரப்பாகியிருந்தது. இத்தகைய சந்தர்ப்பங்கள் எதிலுமே கனிமொழியோ அல்லது கருணாநிதியோ இதுபற்றி வாயே திறக்கவில்லை. ஆனால் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில் அவர் இதுபற்றி தெரிவித்ததன் பின்பே கனிமொழி அவசர அவசரமாக அதனை மறுத்துள்ளார். ஆயினும் அவருடைய மறுப்பை எதிர்த்தும் மறுத்தும் எதிர்க்கருத்துக்கள் தமிழகத்தில் பலராலும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அது மட்டுமல்லாமல், யுத்தம் மிகத் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, புதுடில்லி அரசு இலங்கை இராணுவ தலைமையகத்துடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருந்ததாகவும், அப்போது யுத்த நிலைமைகள் குறித்து முதல்வராக இருந்த கருணாநிதிக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்திருந்தது பற்றியும் இப்போது தகவல் வெளியாகியிருக்கின்றது.

கடந்த 2013 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற இலங்கையின் மூன்றாவது பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இந்தத் தகவலை சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார் என்று அந்தத் தகவலில் ஆதாரத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் முக்கிய உயரதிகாரிகள் அனைவரும் இந்த மாநாட்டில் சமூகமளித்திருந்தார்கள். பாதுகாப்பு அமைச்சின் முக்கிய உயரதிகாரிகளும் அங்கிருந்தார்கள். 

இறுதி யுத்தத்தில் நேரடியாகப் பங்குகொண்டிருந்த முக்கிய இராணுவ அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்குகொண்டிருந்தார்கள் பல நாடுகளின் பிரதிநிதிகளும் அங்கு வருகை தந்திருந்தார்கள். இத்தகைய ஒரு மாநாட்டிலேயே சுப்பிரமணிய சுவாமி இந்திய அரசு இலங்கையின் இறுதி யுத்தத்தில் மிகவும் நெருக்கமாக இருந்து செயற்பட்டிருந்தது என்றும், விடுதலைப்புலிகளின் தலைவர் கொல்லப்பட்டது பற்றிய தகவலையும் புதுடில்லியும் தமிழக முதல்வரும் உடனடியாகவே அறிந்திருந்தனர் என்றும் சுப்பிரமணிய சுவாமி அப்போது தெரிவித்திருந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த மாநாடு பற்றிய தகவல்கள் இரகசியமானவை அல்ல. அப்போது அதுபற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆயினும் இந்திய அரசோ அல்லது கருணாநிதியோ அப்போது வாயே திறக்கவில்லை. இப்போதுதான் கனிமொழி அதுபற்றி வாய்திறந்திருக்கின்றார் அதுவும் அவ்வாறு எதுவுமே நடைபெறவில்லை என்று. தமிழக மக்கள் உணர்வு பூர்வமாக இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்திலும், அவர்களுடைய அரசியல் மற்றும் வாழ்க்கை நலன்களிலும் அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்றார்கள். 

இது பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகவும் ஆழமாகவும் தீவிரமாகவும் வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதேநேரத்தில் அங்குள்ள அரசியல்வாதிகள் சிலர் ஈழத்தமிழர் விவகாரத்தை வெறுமனே தமது அரசியல் இலாபத்திற்காகவே பயன்படுத்தி வருகின்றார்கள் என்ற விமர்சனமும், குற்றச்சாட்டும் தொடர்ந்து முன்வைக்கப்படுவதும் தொடர்கின்றது.

இறுதி யுத்தம் நடைபெற்றபோது விடுதலைப்புலிகள் மட்டுமல்ல, அந்த யுத்தச் சூழலில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மரணத்தின் வாயிலில் சிக்குப்பட்டு மரண பயத்திற்கு உள்ளாகியிருந்த அப்பாவிகளான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்களும் தமிழகம் தங்களைப் பாதுகாப்பதற்கு முன்வரமாட்டாதா, இந்தியா ஏதாவது செய்யாதா என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தார்கள். 

வாய்ப்பு கிட்டியவர்கள் தமது தகுதிக்கேற்ற வகையில் தமிழகத்தில் இருந்த அரசியல்வாதிகள் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் சாதாரண உறவினர்கள் நண்பர்கள் போன்றோருடன் தொடர்பு கொண்டு அவலக்குரல் எழுப்பியிருந்தார்கள். ஆனால் அவர்களுடைய மரணஓலமும், உயிர்ப்பாதுகாப்புக்கான மன்றாட்டமும் செவிடன் காதில் ஊதிய சங்காகிப்போனது. முள்ளிவாய்க்காலின் மரண வாயிலில் இருந்து உயிர் தப்பி வந்த பலர் செட்டிகுளம் மனிக்பாம் முகாமில் இருந்தபோது, இதைப்பற்றி வாய் ஓயாமல் கூறி ஓய்ந்து போனார்கள்.

சரணடைந்தவர்களைப் பற்றி சரியான முறையில் பொறுப்பு கூறாமல் சாக்கு போக்குக் கூறி, அந்தப் பொறுப்பில் இருந்து இனிமேலும் நழுவிக் கொண்டிருக்க முடியாது என்று இலங்கை அரசுக்கு இடித்துக் கூறும் வகையில் அனந்தியின் சாட்சியம் வெளிப்பட்டிருக்கின்றது. இது அடுத்தடுத்து என்னென்ன திருப்பங்களை அல்லது விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-செல்வரட்னம் சிறிதரன்