தமக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைப்பதில்லையாம் – கோத்தா கவலை
தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக தம்மால் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்றும், தமக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைப்பதில்லை என்றும் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை பாதுக்க, உடுமுல்ல ஆலயத்துக்குச் சென்றிருந்த கோத்தாபய ராஜபக்சவிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ்வதை தாம் உறுதி செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, அரசியலுக்கு வருவீர்களா என்று எழுப்பிய கேள்விக்கு, கோத்தாபய ராஜபக்ச, தாம் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
வடக்கில், 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை மாத்தறையில் நடந்த மகிந்த ஆதரவு அணியின் கூட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அனுப்பி வைத்திருந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையிலேயே, மறுநாள் பாதுகாப்புத் தொடர்பான புலனாய்வு அறிக்கைகள் தமக்கு கிடைப்பதில்லை என்றும், எனவே தேசிய பாதுகாப்பு குறித்து கருத்துக் கூற முடியாது என்றும் கோத்தாபய ராஜபக்ச கூறியிருக்கிறார்.