பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஒன்றிணையும் ஆளும், எதிர்க்கட்சிகள்
உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனு ஒன்று கையளிக்கப்படவுள்ளது.
உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கோரி, மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மனுவொன்றை அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்பிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் இது தொடர்பான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தவாரம், இந்த மனுவில் 150இற்கும் அதிகமான உறுப்பினர்களின் கையெழுத்து பெறப்பட்டு சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள், நாடாளுமன்றத்தைக் கலைக்க வலியுறுத்தினாலும், 20வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டள்ள இழுபறியால், நாடாளுமன்றத்தைக் கலைப்பதை மைத்திரிபால சிறிசேன பிற்போட்டு வருகிறார்.
இந்த நிலையிலேயே நாடாளுமன்றத்தைக் கலைக்க வலியுறுத்தும் மனுவில், கையெழுத்திட ஐதேக உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த ஐதேக செயற்குழுக் கூட்டத்திலும், நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துமாறு சிறிலங்கா அதிபரிடம் அவசர கோரிக்கை விடுப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.