Breaking News

13 இன் அடிப்படையில் ஆறு மாதங்களில் தீர்வு! ஐ.ம.சு.மு.வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு

அர­சி­ய­ல­மைப்பின்13 ஆவது திருத்­தத்­திற்கு உட்­பட்டு மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை மேலும் பலப்­ப­டுத்தும் 


வகையில் அர­சியல் தீர்­வுத்­திட்டம் ஒன்றைக் காண்­ப­தற்கு ஆறு மாதங்­களில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் அர­சியல் தீர்வைக் காணும் நோக்கில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்கள், அர­சியல் கட்­சிகள் உள்­ளிட்ட அனைத்துத் தரப்­பி­னரும் உள்­ள­டங்கும் வகையில் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்டு தீர்­வு­கா­ணப்­படும். புதிய அர­சாங்கம் அமைந்து ஒரு மாதத்­தினுள் இந்தப் பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­பிக்­கப்­படும் என்றும் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அனைத்துப் பிர­ஜை­க­ளுக்கும் நியா­யத்­தையும் சமத்­து­வத்­தையும் உறு­தி­செய்­வ­தற்­காக அதி­கா­ரங்களுடன் மாவட்ட ரீதி­யான பொறி­முறை ஒன்­றுடன் கூடிய தேசிய நல்­லி­ணக்க ஆணைக்­குழு அமைக்­கப்­படும் என்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும் கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் ஒரு வருட காலத்­திற்குள் அமுல்­ப­டுத்­தப்­படும் என்றும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­பனம் நேற்று கொழும்பில் வெ ளியி­டப்­பட்­டது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி உள்­ளிட்ட ஐ.ம.சு.மு.வின் பங்­காளிக் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களும் பல முக்­கி­யஸ்­தர்­களும் கலந்­து­கொண்­டனர். எதிர்காலத்திற்கு உத்தரவாதம் என்ற பெயரில் 12 அம்­சங்­களை தொனிப்­பொ­ரு­ளாகக் கொண்டு இந்த தேர்தல் விஞ்­ஞா­பனம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

பாதுகாப்பு

தேசியப் பாது­காப்பை ஒரு­போதும் காட்­டிக்­கொ­டுக்­காத சமூக சமத்­து­வத்தை உறு­திப்­ப­டுத்தும் அனை­வ­ருக்கும் சம­மான நீதி­யுடன் கூடிய எந்த நாட்­டுக்கும் கட்­டுப்­ப­டாத பெருமை மிக தேசம் ஒன்றைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதே எமது நோக்கம்.

தேசிய ஒற்றுமை புரிந்­து­ணர்வு

இலங்கை சிங்கள பௌத்­தர்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட பல்­லி­னங்கள் மற்றும் பல் மதத்­தினர் வாழு­கின்ற நாடு என்­பதை ஏற்­றுக்­கொள்­ளு­கின்றோம். மக்கள் சுதந்­தி­ர­மாக தமது மதத்தைப் பின்­பற்­றவும் தமது மத அடிப்­ப­டையில் செயற்­ப­டவும் தேவை­யான சூழலைக் கட்­டி­யெ­ழுப்­புவோம். குறு­கிய மத­வாத சிந்­த­னையின் அடிப்­ப­டையில் நிகழும் மதத் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைப்போம்.

அர­சியல் தீர்வு

அர­சி­ய­ல­மைப்பின் 13ஆவது திருத்­தத்­திற்கு உட்­பட்டு மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை மேலும் பலப்­ப­டுத்தும் வகையில் அர­சியல் தீர்­வுத்­திட்டம் ஒன்றைக் காண்­ப­தற்கு ஆறு மாதங்­களில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

அத்­துடன் அர­சியல் தீர்வைக் காணும் நோக்கில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்கள், அர­சியல் கட்­சிகள் உள்­ளிட்ட அனைத்துத் தரப்­பி­னரும் உள்­ள­டங்கும் வகையில் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்டு தீர்­வு­கா­ணப்­படும். புதிய அர­சாங்கம் அமைந்து ஒரு மாதத்­தினுள் இந்தப் பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­பிக்­கப்­படும். அனைத்துப் பிர­ஜை­க­ளுக்கும் நியா­யத்­தையும் சமத்­து­வத்­தையும் உறு­தி­செய்­வ­தற்­காக அதி­கா­ரங்கள் மற்றும் மாவட்ட ரீதி­யான பொறி­முறை ஒன்­றுடன் கூடிய தேசிய நல்­லி­ணக்க ஆணைக்­குழு ஒன்று அமைக்­கப்­படும் என்றும் அதற்குத் தேவை­யான சட்ட ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும்.

கற்­றுக்­கொண்ட பாடங்கள் நல்­லி­ணக்கம் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை ஒரு வரு­டத்­திற்குள் நிறை­வேற்­றுவோம். அர­சியல் அழுத்­தங்­க­ளற்ற அனைத்துப் பிர­ஜை­க­ளி­னதும் ஜன­நா­யக உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­கின்ற நிலை­யான சமா­தா­னத்தைக் கட்­டி­யெ­ழுப்­புவோம்.

ஊழல்­களை ஒழித்தல்

நாட்டில் ஜன­நா­ய­கத்தைப் பாது­காக்­கவும் அனைத்துப் பிர­ஜை­க­ளி­னதும் கௌர­வத்­தையும் உரி­மை­யையும் பாது­காக்­கவும் வெ ளிப்­படைத் தன்­மை­யுடன் கூடிய ஆட்­சியை உரு­வாக்­குவோம். இதற்கு முன் ஆட்­சியில் இருந்த அனைத்து அர­சாங்­கங்­க­ளுக்கு எதி­ராக முன்வைக்கப்பட்டுள்ள குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் நடை­முறைச் சட்­டத்தின் கீழ் விசா­ரணை செய்வோம். இவற்றை மேற்­பார்வை செய்ய சர்­வ­தேச புத்­தி­ஜீ­விகள் குழாமை நிய­மிப்போம். குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமைய தண்­டனை வழங்­கப்­படும். மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் குற்­றச்­சாட்டுத் தொடர்­பான வெளிப்­படைத் தன்­மை­யுடன் விசா­ரணை நடத்­தப்­படும். அனைத்துக் குற்­ற­வா­ளி­க­ளுக்கும் எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

நீதித்­துறை

நீதித்­து­றையின் சுயா­தீ­னத்தை பாது­காப்போம். நீதி­மன்­றத்தின் செயற்­றி­றனை அதி­க­ரிப்­ப­தற்­காக மனித மற்றும் பௌதீக வளங்­களைப் பெற்­றுக்­கொ­டுப்போம். நீண்­ட­காலம் தாம­த­மாகும் வழக்­கு­களை விசா­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். நல்­லாட்சி என்றை போர்­வையில் நடை­பெறும் அடக்­கு­மு­றை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைப்போம்.

பொரு­ளா­தாரம்

2020 ஆம் ஆண்­ட­ளவில் மொத்த தேச உற்­பத்­தி­யினை நூறு பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாக அதி­க­ரிப்போம். தனி­நபர் வரு­மா­னத்தை 7ஆயிரம் அமெ­ரிக்க டொலர்­க­ளாக அதி­க­ரிப்போம். 15 இலட்சம் தொழில்­வாய்ப்­பு­களை உரு­வாக்­குவோம்.

நாட்டின் அபி­வி­ருத்­தியை தீர்­மா­னிப்­ப­தற்­காக அறி­வுசார் புத்­தி­ஜீ­களைக் கொண்ட தேசிய பொரு­ளா­தார ஆலோ­சனை சபை ஒன்றை நிறு­வுவோம். எட்டு வீத பொரு­ளா­தார வளர்ச்­சியை முன்­னெ­டுத்து 2020 ஆம் ஆண்டில் வறு­மையை ஒழிப்போம். நெல் ஒரு கிலோ­வுக்கு 50 ரூபா நியாய விலையை வழங்­குவோம். 10 வரு­டங்­க­ளுக்கு மேல் அரச காணி­களில் குத்­தகை அடிப்­ப­டையில் விவ­சா­யத்தில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு அக்­கா­ணி­களை உரித்­து­டை­ய­தாக்க நட­வ­டிக்கை எடுப்போம். 

தேயிலை கிலோ ஒன்­றுக்கு 90 ரூபா நியாய விலையைப் பெற்­றுக்­கொ­டுப்போம். 2020 ஆம் ஆண்டில் இலங்கை வரும் சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை நான்கு மில்­லியன் வரை அதி­க­ரிப்போம். இதன் மூலம் 3 இலட்­சத்து 50 ஆயிரம் தொழில்­வாய்ப்­பு­களை உரு­வாக்­குவோம். ஆடைக் கைத்­தொ­ழிலில் சேவை­யாற்றும் பெண்­க­ளுக்­காக பத்து ஆலோ­சனை சபை­களை உரு­வாக்­குவோம். 5 வரு­டங்­க­ளுக்கு மேல் ஆடைக்­கைத்­தொழில் துறையில் பணி­யாற்­று­ப­வர்­க­ளுக்கு சலுகை வட்­டி­யுடன் வீட்­டுக்­கடன் மற்றும் காப்­பு­று­தி­களை வழங்­குவோம்.

வெளி­நாட்டுக் கொள்கை

சிறந்த வெ ளிநாட்டு தொடர்­பு­களைப் பேண அணி­சேரா வெ ளிநாட்டுக் கொள்கை அவ­சியம் என்­பதை ஏற்­கின்றோம். இந்­தியா மற்றும் ஆசிய நட்பு நாடு­க­ளுடன் எமது உறவு பலப்­ப­டுத்­தப்­படும். இலங்­கைக்கு எதி­ரான திரி­வு­ப­டுத்­தப்­பட்ட யுத்தக் குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து படை­வீ­ரர்­களைப் பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

வீட­மைப்பு, காணி

அனைத்துப் பிர­ஜை­க­ளுக்கும் வீடு­களைப் பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். வாடகை குடி­யி­ருப்­பா­ளர்கள் புதி­தாக திரு­ம­ண­மா­ன­வர்கள் உள்­ளிட்ட வீடு உரி­மை­யற்­ற­வர்­க­ளுக்கு வீடு­களை நிர்­மா­ணிக்க நான்கு மில்­லியன் ரூபா வரை கடன் பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். தோட்ட லயன் அறை­களில் உள்ளவர்களுக்கு அவர்­க­ளுக்கே உரித்­தான வீடு­களைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்கை தொடரும். வீடமைப்பு விட­யத்தில் படை வீரர்­க­ளுக்­கான சலுகை தொடரும். வெ ளிநா­டு­களில் தொழில்­பு­ரி­வோ­ருக்கு நான்கு மில்­லியன் ரூபா வரை விசேட சலுகை கடன் வழங்­கப்­படும். 30 வருட யுத்­தத்­தினால் இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளுக்கு தேவை­யான வச­தி­களை செய்­து­கொ­டுத்து முறை­யான இருப்­பி­டங்­களில் மீளக்­கு­டி­யேற்­றுவோம்.

கல்வி

நாட்டின் அனைத்து மாண­வர்­க­ளி­னதும் இல­வச கல்வி உரிமை உறு­திப்­ப­டுத்­தப்­படும். 18 வயது முதல் 25 வயது வரை­யான நாட்டின் அனைத்து இளைஞர், யுவ­தி­க­ளுக்கும் 50 ஆயிரம் ரூபா கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். இல­வச கல்வி மறு­வாழ்வு நிதி­யத்தை ஸ்தாபிப்போம். இரண்டு கிலோ­மீற்றர் தூரத்தை உள்­ள­டக்கும் வகையில் சிறுவர் தோழன் என்னும் பாலர் கல்வி மற்றும் குழந்தை காப்­பகம் அமைக்­கப்­படும். அனைத்து ஆரம்பப் பாட­சா­லை­க­ளுக்கும் வட்­டி­யற்ற 50 ஆயிரம் ரூபா கடன் வழங்­கப்­படும். ஆரம்பப் பாட­சாலை ஆசி­ரி­யர்­க­ளுக்கு 5 ஆயிரம் ரூபா மாதாந்தக் கொடுப்­ப­னவு வழங்­கப்­படும்.

உயர்­தரப் பாட­சாலை மாண­வர்கள் மற்றும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் கணனி ஒன்றைக் கொள்­வ­னவு செய்­வ­தற்கு வட்­டி­யற்ற கடன் பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். சாதா­ரண தரப் பரீட்­சையில் சித்­தி­பெ­றாத ஒரு இலட்சம் மாண­வர்­க­ளுக்கு இரண்டு வரு­டங்­க­ளுக்குள் கணி­தத்தில் சித்­தி­பெறும் இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் உயர்­தரம் கற்க வாய்ப்­ப­ளிக்­கப்­படும். பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெறும் ஒவ்­வொரு மாண­வ­ருக்கும் புத்­தகம், கொப்பி, எழுத்து உப­க­ர­ணங்­களைப் பெற்­றுக்­கொள்ள 10 ஆயிரம் ரூபா நிதி­யு­தவி வழங்­கப்­படும். 

மகா­பொல புல­மைப்­ப­ரிசில் கொடுப்­ப­னவு 6 ஆயிரம் ரூபா­வாக உயர்த்­தப்­படும். பல்­க­லைக்­க­ழ­க மாணவர்களின் எண்­ணிக்கை 30 வீதத்தால் அதி­க­ரிக்­கப்­படும். ஐந்து வரு­டங்­க­ளுக்கு மேல் சேவை­யாற்­று­கின்ற அதி­பர்கள் மற்றும் ஆசி­ரியர் பணியை நிறை­வு­செய்­த­வர்­க­ளுக்கு தீர்வை வரி­யற்ற வாகனம் இறக்­கு­மதி பத்­திரம் வழங்­கப்­படும். அதிபர், ஆசி­ரியர் சம்­பளப் பிரச்­சினை உட­ன­டி­யாகத் தீர்க்­கப்­படும். பல்­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்­க­ளுக்கு ஓய்­வூ­திய முறை­மை­யொன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்.

சுகா­தாரம்

ஒவ்­வொரு மாவட்­டங்­க­ளுக்கும் சகல வச­தி­க­ளுடன் கூடிய வைத்­தி­ய­சாலை பெற்றுக்கொடுக்கப்படும். அத்துடன், ஒவ்­வொரு மாகா­ணத்­திற்கும் சர்­வ­தேச தரத்­தி­லான வைத்­தி­ய­சாலை ஒன்றும் அமைக்­கப்­படும். தனியார் வைத்­தி­ய­சா­லை­களும் நாடு முழு­வதும் விஸ்­த­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். சிறு­நீ­ரக நோயாளர் குடும்­பங்­க­ளுக்கு 7 ஆயி­ரத்து 500 ரூபா மாதாந்தக் கொடுப்­ப­னவும் வழங்­கப்­படும். 25 ஆயிரம் குடும்ப சுகா­தார தாதி­யர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வார்கள். 65 வய­துக்கு மேற்­பட்ட சிரேஷ்ட பிர­ஜை­க­ளுக்கு மருந்­து­களைப் பெற்­றுக்­கொள்ள 3 ஆயிரம் ரூபா வழங்­கப்­ப­டு­வ­துடன் பார­தூ­ர­மான சத்­தி­ர­சி­கிச்­சைக்­காக 5 இலட்சம் ரூபா காப்­பு­றுதி வழங்­கப்­படும்.

ஊடகம்

ஊடகம் தொடர்பில் நன்­நெறிக் கட்­ட­மைப்பை உரு­வாக்க அரச அனு­ச­ரணை பெற்­றுக்­கொ­டுப்போம். ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு தொழில் தேர்ச்­சியைப் பெற்­றுக்­கொள்ள அவ­சி­ய­மான கல்வி மற்றும் சட்டப் பின்­னணி உரு­வாக்­கப்­படும். கலைஞர் மற்றும் ஊட­க­வி­ய­லா­ள­ருக்கு ஓய்­வூ­திய மற்றும் மருத்­துவக் காப்­பு­றுதி வழங்­கப்­படும். சர்­வ­தேச தரத்­தி­லான திரைப்­பட விருது வழங்கும் விழா வரு­டந்­தோறும் நடத்­தப்­படும். கலை­ஞர்­க­ளுக்­காக வழங்­கப்­பட்ட வட்­டி­யற்ற 15 இலட்சம் ரூபா வாகனக் கடன் தொடர்ந்து வழங்­கப்­படும்.

இளைஞர்

அர­சாங்கம் பத­வி­யேற்று ஆறு மாதங்­களில் அரச துறையில் 60 ஆயிரம் தொழில்­வாய்ப்­பு­களை இளை­ஞர்­க­ளுக்கு வழங்­குவோம். குறைந்த வரு­மா­ன­முள்ள குடும்­பங்­களில் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு 2 இலட்சம் ரூபா வட்­டி­யற்ற திரு­மணப் பரிசு கடன்­திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். அனைத்து இளைஞர், யுவ­தி­களும் தமது முத­லா­வது வாக­னத்தை கொள்­வ­னவு செய்ய அரச வங்­கிகள் ஊடாக சலுகை வட்­டியில் கடன் பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும்.

மகளிர்

24 மணி­நே­ரமும் பெண்கள் அச்­சமும் சந்­தே­க­மு­மின்றி நாட்டின் எப்­ப­கு­திக்கும் பய­ணிக்கக் கூடிய பாது­காப்­பான சூழலை ஏற்­ப­டுத்திக் கொடுத்தோம். ஒவ்­வொரு பிள்­ளைக்கும் க.பொ.த. சாதா­ரண தரம் வரை கல்வி வச­தியை வழங்­கு­வது கட்­டா­ய­மாக்­கப்­படும். அதனைப் பெற்­றுக்­கொ­டுக்க வச­தி­யில்­லாத பிள்­ளை­க­ளுக்கு வியா­பார முயற்­சி­களை ஆரம்­பிக்க விரும்பும் பெண்­க­ளுக்கு 50 ஆயிரம் முதல் இரண்டு இலட்சம் வரை சலுகை வட்­டியில் கடன் பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். குறைந்த வரு­மா­ன­முள்ள கர்ப்­பிணித் தாய்மார்களுக்கு 1500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படும்.

உட்கட்டமைப்பு வசதி

2020 ஆம் ஆண்டு இலங்கையை தெற்காசியாவின் அதிசிறந்த நவீன உட்கட்டமைப்பு வசதிகொண்ட தேசமாக உருவாக்குவோம். எதிர்வரும் 5 வருடங்களுக்குள் கொழும்பிலிருந்து கண்டி ஊடான வடக்கு அதிவேகப் பாதை நிறுவப்படும். யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயில், திருகோணமலை கோணேஸ்வரர் கோயில், சிலாபம் முன்னேஸ்வரம் கோயில், தெவிநுவர உப்புல் வத்த தேவாலயம் ஆகிய நாற்திசை கோவில் வழிபாட்டுக்கு வசதியாக கதிர்காம ரயில் பாதையை திருகோணமலை வரை நீடிப்போம். உங்கள் வீட்டிலிருந்து 6 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் எந்தவொரு பாகங்களுக்கும் பயணிக்கும் வகையில் நெடுஞ்சாலைக் கட்டமைப்பு உருவாக்கப்படும். இலங்கையின் ஒவ்வொரு வீட்டுக்கும் 2 வருடங்களுக்குள் குழாய் நீரைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியல் மறுசீரமைப்பு

நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை மறுசீரமைப்பு செய்வோம். பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்துவோம்.

அரச சேவை

அரச சேவையை அரசியல் தலையீடுகளில் இருந்து மீட்டுக்கொள்ள சுயாதீன ஆணைக்குழு நிறுவப்படும். அரசியலமைப்பு சபையை ஸ்தாபித்து பணிகளை ஆரம்பிப்போம். இரண்டு மாதங்களுக்குள் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்போம். மேலும் இரண்டு மாதங்களுக்குள் தகவல் அறியும் சட்டமூலத்தையும் கணக்காய்வு சட்டமூலத்தையும் நிறைவேற்றுவோம்.