தேசிய அரசாங்கத்துக்கு சுதந்திரக் கட்சி இணக்கம்
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ள ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு நேற்று அங்கீகாரம் வழங்கியது.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவெடுக்க சுதந்திரக் கட்சியின் சார்பில் விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு நேற்று கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய அரசாங்கம் அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவது எவ்வாறு அமைச்சுப் பதவிகளை பெறுவது என்பது குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. .
அந்தக் குழுவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந்த, பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி. திசாநாயக்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா, ஜோன் செனவிரட்ன சமல் ராஜபக்ஷ குமார வெல்கம கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் செயலாளராக ரஞ்சித் சியம்பலா பிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழுவானது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடுவது குறித்த விடயங்களை ஆராயவுள்ளது. நேற்றைய தினமே குறித்த குழு தனது கலந்துரையாடல்களை ஆரம்பித்ததாக குழுவின் உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
குறைந்த பட்சம் இரண்டு வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து செயற்படவேண்டும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது பல்வேறு தலைவர்களும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். எனினும் தேசிய அரசாங்கம் அமைக்கவேண்டும் என்ற கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மத்திய குழுக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட டலஸ் அழகப்பெரும இது ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் என்பதால் அவரின் ஆதிக்கம் அதிகரிக்குமே என்று வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவ்வாறு சிந்திக்கவேண்டாம் என்றும் இனிவரும் காலங்களில் நாட்டில் மைத்திரி நிர்வாகமே இருக்கும் என்று சிந்திக்குமாறும் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சுக்களை பகிர்ந்து கொள்ளும் செயற்பாட்டிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. அதாவது நிதியமைச்சு வெளிவிவகார அமைச்சு துறைமுகங்கள் ஊடகத்துறை உள்ளிட்ட மிக முக்கிய அமைச்சுக்களை பகிர்ந்துகொள்ளவும் சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
அதாவது அமைச்சரவையை நான்கு துறைகளாக பிரித்து அவற்றின் அடிப்படையில் சதவீத பொறிமுறைக்க அமைய அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறுதியில் குறைந்த பட்சம் இரண்டு வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கலாம் என்ற முடிவுக்கு சுதந்திரக் கட்சியின் மத்திய குழு வந்ததுடன் அதற்கான அங்கீகாரத்தையும் வழங்கியது.அந்தவகையில் ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைக்கும் பட்சத்தில் இரண்டு தரப்பினருக்கும் தலா 15 அமைச்சுப் பதவிகள் வீதம் வழங்கப்படுவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தலா 25 பிரதியமைச்சுப் பதவிகளை வழங்குவது குறித்தும் ஆலோசிக்க்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு பார்க்குமிடத்து 30 அமைச்சுப் பதவிகளும் 50 பிரதியமைச்சுப் பதவிகளும் மொத்தமாக உருவாக்கப்படும் என கூறப்படுகின்றது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த மூன்று தினங்களாகவே இடம்பெற்றுவருகின்றன. எனினும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் மற்றும் பிரதியமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை ஐக்கிய தேசிய கட்சியினால் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது தன்னுடைய அரசாங்கம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளார். அடுத்த அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாகவும விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கவென புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள் குறித்து ஆராயவே சந்திரிக்கா தலைமையிலான குழு ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மிக முக்கியமாக எதிர்வரும் காலங்களில் ஜெனீவாவில் இருந்து இலங்கைக்கு விடுக்கப்படும் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கவே தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவதாகவும் நந்திமித்ர ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பொது கருத்தொருமைமிக்க அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் சகல அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பாராளுமன்றத்தில் அனைவரும் ஒன்றுபட்டு இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுப்போம் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதற்காக அரசாங்கத்துடன் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைய வேண்டுமென்றும் பகிரங்கமாக வேண்டுகொள் விடுத்தார்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 106 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. எனினும் ஆட்சியமைப்பதற்கு 113 ஆசனங்கள் தேவையாகவுள்ளது. எனினும் ஐக்கிய தேசிய கட்சி கூடுதல் ஆசனங்களை பெற்றமையினால் ஆட்சியமைப்பதற்கு 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக முடியும். அத்துடன் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஐக்கிய தேசிய கட்சிக்கே பிரதமர் பதவியை பெறுவதற்கும் ஆட்சியமைப்பதற்குமான உரிமை காணப்படுகின்றது.
பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 16 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 6 ஆசனங்களையும் பெற்றன. அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தலா ஆசனத்தை கைப்பற்றின.
தேர்தலுக்கு பின்னர் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறிவந்தார். அத்துடன் கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இவ்வாறு எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இரண்டாவது தடவையாக தேசிய அரசாங்கம் அமைக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் இவ்வருடம் பெப்ரவரி மாதம் ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்து அமைச்சுப் பதவிகளை பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








