Breaking News

பிரதமர் பதவிக்கான போட்டியில் ரணிலிடம் தோற்கிறார் மகிந்த – கருத்துக் கணிப்பில் தகவல்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமராவதற்கு வாக்காளர்களிடம் போதிய ஆதரவு இல்லை என்றும், ரணில் விக்கிரமசிங்கவை விடவும் பின்தங்கிய நிலையிலேயே அவர் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.

எதிர்வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் நடத்திய கருத்துக் கணிப்பிலேயே இந்த தகவல் தெரியவந்துள்ளது. தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட, ஆய்வுகளின் அடிப்படையில், இலங்கையின் அடுத்த பிரதமராவதற்கு, ரணில் விக்கிரமசிங்கவுக்கு 39.8 வீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மகிந்த ராஜபக்ச பிரதமராவதற்குச் சாதகமாக, 27.5 வீதமானோரே விருப்பம் வெளியிட்டுள்ளனர். இலங்கையின் பிரதமராவதற்கு மிகவும் பொருத்தமானவர் யார் என்ற கேள்விக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழர்கள் 62.3 வீதமும், மலையக தமிழர்கள் 71.2 வீதமும், முஸ்லிம்கள் 62.3 வீதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச பிரதமராவதற்கு தமிழர்கள் 1.8 வீதமும், மலையகத் தமிழர்கள் 1.2 வீதமும், முஸ்லிம்கள் 1.6 வீதமும் மாத்திரமே ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இதேவேளை சிங்களவர்களில், 36 சதவீதமானோர் மகிந்த ராஜபக்சவே பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் எனக் கூறியுள்ள அதேவேளை, 31.9 வீதமான சிங்களவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எனினும், எல்லா சமூகத்தினருடன் ஒப்பிடுகையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கே கூடுதலாக- 39.8 வீதமானோரின் ஆதரவு உள்ளது. இலங்கையின் ஒன்பது மாகாணங்களில், மேல், மத்திய, வடக்கு, கிழக்கு, வட மேல், ஊவா மற்றும் சப்பரகமுவ ஆகிய ஏழு மாகாணங்களிலும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராவதற்கே அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தென் மற்றும் வட மத்திய மாகாணங்களில் மாத்திரமே, மகிந்த ராஜபக்சவுக்கு, கூடுதலான ஆதரவு உள்ளது. அதேவேளை, இந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடக் கூடாது என்று 42 வீதமானோரும், போட்டியிடலாம் என்று 40 வீதமானோரும் கருத்து வெளியிட்டுள்ளனர். மேலும், வாக்காளர்களில் 58.1 வீதமானோர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க போவது என்பதை, ஏற்கனவே தீர்மானித்துள்ளனர் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.