அதிகாரத்தை தக்கவைப்பதற்காகவே அமைச்சரவையை அதிகரித்துள்ளனர்! ஜே.வி.பி. குற்றச்சாட்டு
அரசியலமைப்பிற்கு முரணான வகையில் ஜனாதிபதியும் பிரதமரும் செயற்படுவதாகவும் புதிய அரசாங்கத்தில் அமையப்பெற்றிருக்கும் அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரித் துள்ளமைக்கு தாம் கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
தமது அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்ளும் ஒரே நோக்கத்திலேயே ஜனாதிபதியும், பிரதமரும் அமைச்சரவையின் எண்ணிகையை அதிகரித்துள்ளதாகவும் அக் கட்சி குற்றம் சுமத்தியது.
மக்கள் விடுதலை முன்னணியினரால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அனுரகுமார திசாநாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
இப்போது அமைந்திருக்கும் அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் என தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த அரசாங்கம் தேசிய அரசாங்கம் அல்ல. இது ஒரு கூட்டு அரசாங்கமாகும். பொதுத் தேர்தலின் போது அதிக ஆசனங்களை பெற்ற கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இரண்டாவது பெரும்பான்மையைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து அமையப்பெற்றுள்ள ஒரு கூட்டு ஆட்சி மட்டுமேயாகும். ஆகவே இதை தேசிய அரசாங்கம் என ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சுப்பதவிகளையும் சலுகைகளையும் எதிர்பார்க்கும் நபர்களை வைத்துக்கொண்டு ஆட்சி அமைப்பதை எம்மால் தேசிய அரசாங்கம் என தெரிவிக்க முடியாது.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பத்தில் இருந்தே தாம் தேசிய அரசாங்கத்தை அமைப்பதாகவும், கூட்டு ஆட்சியொன்றை உருவாக்குவதாகவும் தெரிவித்தது. ஆகவே அவர்களை எம்மால் விமர்சிக்க முடியாது. ஆயினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் இன்று அமைச்சர்களாக செயற்படவுள்ள நபர்கள் அவ்வாறு அல்ல. ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தனி ஆட்சியை அமைப்பதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு சந்தர்ப்பதிலேனும் கைகோர்க்க போவதில்லை எனவும் குறிப்பிட்டனர். ஆனால் அவர்கள் இன்று முகங்களுக்கு முகமூடிகளை மாட்டிக்கொண்டு அமைச்சுப்பதவிக்காக ஒன்று சேர்ந்துள்ளனர். மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிட்டு இன்று மக்களின் எதிர்பார்ப்க்புகளை முழுமையாக மிதிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயற்ப்பட்டு வருகின்றது.
அதேபோல் தேசிய அரசாங்கம் அமையும் பட்சத்தில் அதில் அமைச்சுப் பதவிகளை அதிகரிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. தேவைக்கேற்ப அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள முடியும். ஆனால் கூட்டு அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்ககை அதிகரிக்க முடியாது. அரசியலமைப்பின் விதிமுறைக்கு அமைய இது முரணான விடயமாகும்.
கடந்த ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டது வெறுமனே மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்த மட்டுமல்ல. அவரது ஆட்சியில் அமைக்கப்பட்ட அமைச்சரவை, அவர்களது கொள்கைகள் மற்றும் மஹிந்த ஆட்சியின் வேலைத்திட்டங்களையும் சேர்த்தே தோற்கடித்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் இரவு விடியும் போது புதிய அமைச்சுப்பதவி உருவாகிய நிலைமை இருந்தது. ஆகவே அவற்றையும் முழுமையாக தடுக்கும் வகையிலேயே மஹிந்த ராஜபக் ஷவின் தனி சாம்ராஜிய ஆட்சியை மக்கள் வீழ்த்தினர்.
எனினும் இப்போது அமையப்பெற்றிருக்கும் கூட்டு ஆட்சியில் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அதே அரசியல் கலாசாரம் பலமடைந்து வருகின்றது. ஆதிகாரத்தை தக்கவைக்கும் ஒரே நோக்கத்தில் மஹிந்த ராஜபக் ஷ எவ்வாறு அமைச்சுப்பதவிகளை அதிகரித்து அரசாங்கத்தை தக்கவைத்தாரோ அதே செயற்பாட்டை புதிய அரசாங்கமும் கையாள்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமது அதிகாரங்களை தக்கவைக்கும் ஒரே நோக்கத்தில் அமைச்சுப்பதவிகளை அதிகரித்து அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் செயற்படுகின்றனர். ஆகவே இதை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம். அதேபோல் பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சியின் சார்பில் எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றார்.