எதிர்க்கட்சிப் பதவியை பயன்படுத்தி சர்வதேச விசாரணையை முன்னெடுக்க வேண்டும்! சிவாஜிலிங்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்றுள்ள எதிர்க்கட்சி பதவியைப் பயன்படுத்தி சர்வதேச விசாரணையை முன்னெடுக்கவேண்டுமென தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதன்மூலமே தமிழ் மக்களுடைய நீண்டகால இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைப்பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவாகியுள்ளதுடன் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பதவிகளின் மூலம் என்ன செய்யப்போகின்றார்கள் அதை எவ்வாறு பயன்படுத்தப் போகின்றார்கள் என்பது தொடர்பிலே அதன் முக்கியத்துவம் தங்கியுள்ளது.
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியினூடாக இலங்கையிலுள்ள பொதுவான பிரச்சினையை எடுத்துரைக்க அதிகாரம் உள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றைப்பெற்றுக்கொள்ளத்தக்க வகையில் அந்தப் பதவி பயன்படுத்தப்படவேண்டும்.
அதாவது பாராளுமன்றத்தேர் தலில் மக்கள் வழங்கிய ஆணை க்கு அமைய சர்வதேச மத்திய ஸ்தத்துடன் இடம்பெறும் சர்வதேச விசாரணயை மேற்கொண்டு தமிழ் மக்களுக்கு நீதியையும் நிரந்தரத் தீர்வையும் பெற்றுக் கொடுக்க எதிக்கட்சி தலைவர் பதவியை பயன்படுத்த வேண்டும்.
மேலும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவி என்பது ஆளும் கட்சிக்குரியதல்ல. அத்தகைய பதவியில் இருப்பவர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து உரையாற்றலாம். அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகள் தொடர்பில் எதிராகக் குரல் கொடுக்கலாம், வாக்களிக்கலாம்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளைப் பெற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனூடாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த தீர்வுத்திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களை எடுக்க வேண்டும். எனவே பதவிகளைப் பெற்றுக்கொள்வது முக்கியமல்ல, அவற்றை எவ்வாறு பயன்படுத்துகின் றோம் என்பதிலேயே அதன் முக்கியத்துவம் வெளிப் படும் என்றார்.