இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவே தேசிய அரசாங்கம்! ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகிறார் பிரதமர்
நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கே தேசிய அரசாங் கம் நிறுவப்பட்டுள்ளது. சர்வதேச சவால்களை வெற்றிகொள்வதற்கும் நாட்டை முழுமையாக மாற்றியமைப்பதற்கும் அனைத்து தரப்பின ரும் தேசிய அரசாங்கத்துடன் ஒன்றி ணைய வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார்.
முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றியமைக்கவுள் ளோம். இதற்காக குழுக்கள் நிறுவப்படவுள்ளன. இதனூடாகவே நிர்வாகம் முன்னெடுக்கப்படும் என் றும் அவர் குறிப்பிட்டார்.ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வரலாற்று சிறப்புமிக்க நாளில் நாம் இன்று காலடி எடுத்துவைத்துள்ளோம். நாட்டை கட்டியெழுப்புவற்கு இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றினைந்துள்ளன. இதுவரை காலமும் தீர்க்க முடியாத அடிப்படை பிரச்சினைகளை நாம் தீர்க்க வேண்டியுள்ளது. நாட்டின் தேசிய பிரச்சினைக்கு உரிய வகையில் தீர்வு காண்பதற்காகவே தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளது. 30 வருடகால யுத்ததின் பின்னரான காலப்பகுதியில் நாட்டு மக்களிடையே புரிந்துணர்வு ஏற்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் தற்போது சர்வதேச ரீதியாக இலங்கைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச பிரச்சினைகளுக்கு நாம் சரியான முறையில் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. தற்போது சர்வதேச நாடுகளிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு கிடைத்த வண்ணம் உள்ளன.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டின் முக்கிய பிரச்சினைக்கு தேசிய அரசாங்கத்தினால் தீர்வு காணமுடியும். ஆகவே நாட்டின் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதனை பிரதான குறிகோளாக வைத்து ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய அரசாங்கம் அமைக்க முன்வர வேண்டும்.
இதனை மையமாக கொண்டு முழு பாராளுமன்றத்தையும் நாம் அரசாங்கமாக்குவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். இதற்காக பாராளுமன்ற குழுக்களை நிறுவி அதனூடாக எமது நிர்வாகத்தை நாம் கொண்டு செல்லவுள்ளோம்.
இந்நிலையில் நாட்டை முழுமையாக நாம் மாற்றியமைக்க வேண்டும். இதனை சரியான முறையில் நேரத்தியாக முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினர்களும் எம்முடன் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும் என்றார்.