Breaking News

பாலியல் இலஞ்சம் கோரியோரை நாட்டிற்குள்ளேயே முடக்கவும் : சின்ஹா

இந்திய வீட்டுத் திட்டப் பணிக்காகப் பாலியல் லஞ்சம் கோரிய சம்பவம் குறித்தான விசாரணைகள் முடியும்வரையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் எவரையும், நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது என இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்திய வீட்டுத் திட்டப் பணியின் போது, பயனாளிகளிடம், திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பங்காளரான செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் பாலியல் இலஞ்சம் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் இது தொடர்பில் கிளிநொச்சியிலுள்ள செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளுக்கு எழுத்துமூலம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த விவகாரம் தொடர்பிலான அறிக்கை புதுடில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை எதிர்கொள்ளும் அதிகாரிகள் எவரையும், விசாரணைகள் முடியும் வரையில் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று, இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹா, வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளார்.