வடக்கின் உயர்பாதுகாப்பு வலயங்களில் வழமைக்கு மாறாக படையினர் குவிப்பு
வடக்கின் உயர் பாதுகாப்பு வலயங்களாக காணப்படும் பிரதேசங்களில் வழமைக்கு மாறாக படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக பலாலி, வசாவிளான் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வழியில் கடந்த காலங்களில் ஒரு வீதித்தடை காணப்பட்ட நிலையில், தற்போது இரண்டு வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டு அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் குறித்த பிரதேசத்திற்குச் செல்லும் பொலிஸார், புலனாய்வாளர்கள் உட்பட அனைவரும் பதிவுசெய்யப்பட்ட பின்னரே செல்லவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது குறித்த பிரதேசங்களுக்குச் சென்று பார்வையிட்டதோடு, படையினரின் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படுமென உறுதியளித்திருந்தார்.
அவரது விஜயத்திற்கு பின்னர் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானித்துள்ள மக்கள், இது தொடர்பில் ஏதாவது தவறான சிந்தனைகள் இருக்குமோ என சந்தேகம் வெளியிடுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.