பரணகம, உடலாகம அறிக்கைகள் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில்! 22,23 இல் ஐ.நா.பிரேரணை குறித்து விவாதம்
எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றக்கூட்டத் தொடரின்போது உடலாகம ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நேற்று வெள்ளிக்கிழமை சபை யில் தெரிவித்தார்.
இதன் பின்னர் மேற்படி அறிக்கைகள் தொடர்பிலும் ஐ.நா.வின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் விவாதம் நடத்தப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் நேற்று முற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகர் அறிவிப்பு மற்றும் பிரேரணைத் தாக்கல் ஆகியன முடிவடைந்த பின்னர். கட்சித் தலைவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக பிரதமர் சபையில் கருத்து வெளியிட்டார்.
சபையில் பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு திகதி வழங்குமாறு நேற்றுமுன்தினம் கோரிக்கை விடுக்கப்பட்டது. உதலாகம ஆணைக்குழு அறிக்கை, பரணாகம ஆணைக்குழுவின் அறிக்கை ஆகியவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம். இவற்றுடன் சேர்த்து ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் விவாதிக்க முடியும்.
மேற்படி அறிக்கைகள் அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க முடியும்.வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை இரு தினங்களில் விவாதத்திற்கு எடுக்க முடியும். இரு அறிக்கைகளும் ஜனாதிபதி செயலகத்தில் இருக்கின்றன. அவை ஆங்கில மொழியிலேயே உள்ளன. மொழிபெயர்க்கப்படவில்லை.
அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் ஆங்கில மொழியிலான அறிக்கை சமர்பிக்க கூடியதாக இருக்கும் என்றார்.








