அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் -ஜேவிபி கோரிக்கை
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேசிப்பேசி காலத்தை கடத்தாது அவர்களின் விடுதலையை உறுதிப் படுத்த வேண்டும். புலிகளின் தலைவர்கள் சுதந்திரமாக நடமாடும் போது அப்பாவி தமிழர்கள் சிறைகளில் இருப்பது நியாயமற்றதாகும் என மக்கள் விடுதலை முன்னணி சாடியுள்ளது.
புலம்பெயர் இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும் அக்கட்சி தெரிவித்தது. அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்கக்கோரி எதிர்க்கட்சி தலைவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டைதெரிவிக்கும்போதே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
யுத்தம் முடிவடைந்த கால கட்டத்தில் இருந்து அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல்வேறு தரப்புகளினால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் தான் அதிகளவிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் கையாளப்பட்டது. இது ஒரு கட்டத்தில் நாட்டை பாதுகாக்கும் வகையில் இருந்தாலும் யுத்தம் முடிவடைந்தும் தொடர்ச்சியாக இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆட்சியை தக்கவைக்க முயற்சித்தனர். அதேபோல் யுத்த காலகட்டத்தில் சந்தேகத்தின் பேரிலும் பலர் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாம் அப்போதும் அழுத்தம் கொடுத்தோம்.
அதேபோல் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் புதிய ஆட்சியில் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி அழுத்தம் கொடுக்கப்பபட்டு வந்துள்ளது. அவர்களது விடுதலை தொடர்பில் தொடர்ச்சியாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. நாமும் பல சந்தர்ப்பங்களில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அழுத்தம் கொடுத்துள்ளோம். அதேபோல் சிவில் அமைப்புகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஒருசில கட்சிகளும் இந்த விடயங்கள் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்டு வந்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனும் இந்த விடயங்களை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இவர்களின் விடுதலை தொடர்பில் இன்றுவரையில் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தெரியவில்லை.
இலங்கை தொடர்பில் எழுந்த சர்வதேச அழுத்தங்களில் முக்கியமாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச அழுத்தங்கள் பலமடையும் சந்தர்ப்பத்திலும், இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகள் பலமடையும் சந்தர்ப்பங்களில் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக தெரிவிப்பவர்கள் அதன் பின்னர் அவை தொடர்பில் கதைப்பதையே மறந்துவிடுகின்றனர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள், முக்கிய உறுப்பினர்கள் என தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இன்று அரசியல் பலத்துடனும் அதிகார பலத்துடனும் சுதந்திரமாக வாழ்கின்றனர். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு உணவு கொடுத்தவர்கள், தண்ணீர் கொடுத்தவர்கள் என சாதாரண அப்பாவி மக்களை கைதுசெய்து இன்றுவரை தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். கடந்த ஆட்சியின் போது பாதுகாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை இந்த அரசாங்கத்திலும் பாதுகாக்கின்றமை வெட்கப்படவேண்டிய விடயமாகும். ஆகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தொடர்ந்தும் பேசிக்கொண்டு இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. உடனடியாக இவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
அதேபோல் புலம்பெயர் இலங்கையர்கள் தொடர்பிலும் அரசாங்கம் அதிக அக்கறை செலுத்த வேண்டும். யுத்த காலகட்டத்தில் மட்டும் அல்லாது யுத்தத்துக்கு பின்னரான ஐந்து ஆண்டுகளிலும் இலங்கையில் இருந்து பலர் வெளியேறினர். அவர்களை மீண்டும் நாட்டுக்குள் அனுமதிப்பது அவசியமான ஒன்றாகும். இனியும் புலிக் கதைகளை கூறிக்கொண்டு இருப்பதனால் எந்தவித மாற்றங்களும் நடக்கப்போவதில்லை என்றார்.








