தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை சமர்ப்பிக்க பணிப்பு
சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களையும் அவர்களின் விசாரணை தொடர்பான நிலைமை குறித்த அறிக்கையையும் நாளை புதன்கிழமை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று அலரி மாளிகையில் விசேட கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான திலக் மாரப்பன, மனோ கணேசன், டி.எம்.சுவாமிநாதன், சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கையினை எடுக்கலாம் என்பது குறித்து ஆராயப்பட்டது. சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களையும் அவர்களின் வழக்கு விசாரணை தொடர்பான நிலைமை குறித்தும் விரிவான அறிக்கையை நாளைய தினம் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் அமைச்சிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கைதிகளின் விபரங்களை பெற்ற பின்னர் நாளை மீண்டும் இந்தக் குழு கூடி அதுகுறித்து ஆராய்வது என்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தம்மை விடுவிக்கக் கோரி தமிழ் அரசியல் கைதிகள் கடந்த ஐந்து தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசாங்கத்தின் உறுதிமொழியை அடுத்து இவர்கள் தமது போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர். கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கைதிகளின் போராட்டம் குறித்து அமைச்சர் மனோ கணேசன் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். இதனையடுத்து பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் ஒன்றிணைந்து விசேட கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுக் கூட்டமே நேற்று நடைபெற்றிருக்கிறது.








