வரையறையை மீறிச் செயற்படும் மனித உரிமை ஆணைக்குழு - நீதி அமைச்சர் கடும் விசனம்
எமது நாட்டின் நீதி கட்டமைப்பிலிருந்து மரண தண்டனையை நீக்குமாறு பரிந்துரை செய்வதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. நீதிக் கட்டமைப் பில் மாற்றம் செய்வது தொடர்பில் பரிந்துரை செய்வது ஆணைக்குழு வின் வரையறைகளை மீறிய செயலாகும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் இரு வருடங்களுக்கு மரணதண்டனை அமுல்படுத்தப்படாது. ஆனால் அந்தத் தண்டனையை நீதி புத்தக்கத்திலிருந்து முழுமையாக நீக்கும் எதிர்பார்ப்பும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மரண தண்டனை நீக்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மரண தண்டடனையை முற்றாக நீக்குதல் என்ற விடயத்தில் அரசாங்கத்திற்கு உடன்பாடில்லை. மரண தண்டனையை நீக்குமாறு பரிந்துரை செய்வது ஆணைக்குழுவுக்கான வரையறைகளை மீறும் செயற்பாடாகும். எமது நாட்டின் நீதி கட்டமைப்பில் மாற்றம் செய்யும் உரிமை பாராளுமன்றத்திற்கு மாத்திரமே உள்ளது.
அதேபோல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் இரு வருடங்களுக்கு மரண தண்டனை அமுல் படுத்தப்படாது. ஆனால் அதனை நீதி புத்தக்கதிலிருந்து முழுமையாக நீக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை. அவ்வாறு செய்ய அரசாங்கம் எத்தனிக்கும் போது நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிக்கும்.
ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது போன்று 60 நாடுகள் மரண தண்டனையை அமுல் படுத்தாதிருப்பது உண்மைதான். எனினும் எமது நாட்டிலும் மரண தண்டனை நீதி புத்கத்தில் உள்ளதே தவிர அமுலில் இல்லை என்பது தொடர்பில் ஆணைக்குழு அவதானம் செலுத்த வேண்டும்.
அரசியலமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் தமக்கான வரையறைகளை கருத்திற்கொண்டே செயற்படும். அது போன்று அரசியலமைப்பு விடயங்களில் தலையீடு செய்யும் அதிகாரங்களும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இல்லை என்றார்.








