அமைச்சர் குணவர்த்தன காலமானார்
கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன காலமானார்.
இவருக்கு வயது 70 என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து, பொது வேட்பாளராக, அன்றைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன களமிறங்கினார்.
இதன்படி மைத்திரிபால சிறிசேன தனது முடிவை அறிவிக்கும் பொருட்டு நடத்திய முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் குணவர்த்தனவும் கலந்து கொண்டிருந்தார்.
இதனையடுத்து தேர்தலில் வெற்றியடைந்து மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும், புதிய அரசாங்கத்தில் முக்கிய இடம்பிடித்திருந்த இவர், பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர் காணி அமைச்சர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. எனினும் அண்மைக் காலமாக சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குணவர்த்தன இன்று இயற்கை எய்தியுள்ளார்.








