ஆனந்த விகடன் விருதுகள் 2015
சிறந்த படம்
காக்கா முட்டை
உச்சா போய்விட்டு அதை நாசூக்காக மறைக்கிற சின்ன காக்கா முட்டையின் பிரமாதமான சேட்டையோடு தொடங்கும்போதே, `இது வேற படம் பாஸ்' என நிமிர்ந்து உட்காரவைத்த `காக்கா முட்டை', தமிழ் சினிமாவின் தங்க முட்டை. அழகான, அற்புதமான, அர்த்தமுள்ள படைப்பு. ஒரு மாநகரம், இரண்டு அழுக்குப் பையன்கள், 300 ரூபாய் பீட்சா... என சின்னப் படம்தான். ஆனால், படம் பார்த்த ஒவ்வொருவருக் குள்ளும் உண்டாக்கிய மனமலர்ச்சி, ரொம்பப் பெரிது. ஒரு சிறிய படம், எளிய கலைஞர்களுடன், தமிழ் சினிமா இலக்கணத்தில் அடங்கும் எதுவுமே இல்லாமலும்கூட, அத்தனை நிறைவான ஒரு திரைப்படமாக மலர்ந்திருந்தது. அன்றாடம் நாம் கடக்கிற ஆயிரமாயிரம் சிறுவர்களின் இயல்பான ஆசைகளை, புன்னகையோடு ஆவணப்படுத்திய `காக்கா முட்டை' தமிழ் சினிமாவுக்கான ராஜபாட்டை!
சிறந்த இயக்குநர்
எம்.மணிகண்டன்
`காக்கா முட்டை’
மூன்று காக்கா முட்டைகளை எடுக்கும் பெரியவன், ஒன்றை அவனுக்கும் ஒன்றை தம்பிக்கும் கொடுத்துவிட்டு, மூன்றாவதை கூட்டிலேயே அம்மா காக்கைக்கு விட்டுவிடுவான். தாராளமாகச் சொல்லலாம்... தமிழ் சினிமாவின் கவித்துவக் காட்சிகளில் இது அரிதான தரிசனம். ஒரு கிராமத்து இளைஞன் தன் முதல் படத்திலேயே விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலைப் படமாக்க முடிவெடுத்ததும், அதை நிகழ்த்திக்காட்டியதும் மணிகண்டனின் தைரியத்துக்கு சாட்சி. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவ்வளவு அக்கறை. எங்குமே ஏழைகளின் சோகங்களை வியாபாரமாக்கும் தந்திரங்கள் இல்லை. பாலித்தீன் பையில் தண்ணீர் பிடித்துவந்து பாத்திரங்களில் நிரப்புகிற சின்ன காக்கா முட்டையைப் போலவேதான் மணிகண்டனும். தனக்குக் கிடைத்த சிறிய வாய்ப்பின் மூலம், நம் மனதில் அவர் நிரப்பியது நெகிழ்ச்சிக் கடல்!
சிறந்த நடிகர்
ஜெயம் ரவி
`பூலோகம்’
ஜெயம் ரவிக்கு இது இரண்டாவது இன்னிங்ஸ். சாஃப்ட் வாய்ஸ் சாக்லேட் ஹீரோ இமேஜை உடைத்து, ஆக்ஷன் அவதாரம் எடுத்தார். உடம்பை முறுக்கேற்றி, முரட்டு பாக்ஸர் பூலோகமாக புத்திமதி சொல்லி நாக்அவுட் செய்தது மரண மாஸ். `தனி ஒருவன்' முழுக்க கோபக்கார இளைஞனாகப் புருவம் சுருக்கி மிரட்டியெடுத்து 100 டிகிரியில் கொதித்தார். `ரோமியோ ஜூலியட்'டில் `தூவானம் தூவத் தூவ...' மயங்கி மயங்கிப் பண்ணிய ரொமான்ஸுக்கு பெண்கள் பக்கம் புயலடித்தது. கதைத் தேர்வில் கவனம் காட்டுகிற அதே நேரம், தன் உடல்மொழியில் ரவி காட்டும் அக்கறை, அபாரம். 2015-ம் ஆண்டில் தான் நடித்த நான்கில் மூன்று படங்களை ஹிட் லிஸ்ட்டில் ஏற்றிய ஜெயம் ரவிக்கு இது சக்சஸ் ஆண்டு. `அண்ணன் மேல் சவாரி செய்கிறார்' என்ற இமேஜையும் தள்ளி, தனி ஒருவனாக தலை நிமிர்ந்திருக்கும் ஜெயம் ரவிக்கு தம்ஸ்அப்!
சிறந்த நடிகை
நயன்தாரா
`நானும் ரௌடிதான்’
`நானும் ரௌடிதான்' காதும்மாவைக் காதலிக்காத ஆளே இங்கு இல்லை. `தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே...' என விஜய் சேதுபதியோடு சேர்ந்து ரசிகர்களும் நயனைத் தேடினார்கள். `எனக்கு காது கேக்காது. யார்கிட்டயும் சொல்லிடாதீங்க, ப்ளீஸ்' என்ற நயன்தாராவின் உதட்டுச் சுழிப்புக்கு ஏழு கோடி லைக்ஸ். தந்தை இறந்ததை ராதிகா சொல்லிவிட, காவல் நிலையத்தில் இருந்து இறங்கி, தடதடவென அழுதுகொண்டே நடக்கிற அந்த ஒற்றை ஷாட்டில் கொடுத்தது ஓராயிரம் எக்ஸ்பிரஷன்ஸ். காதும்மா... தமிழன் லவ்ஸ் யூ பேபி!
சிறந்த வில்லன்
அர்விந்த் சுவாமி
`தனி ஒருவன்’
அழகன்... அபாரன்... இனியன்... இப்போ மிரட்டல் வில்லன். இருட்டிலேயே வாழ்ந்த ஆண்ட்ராய்டு காலத்து அதிசயன். டெக்கி கொடூரன். தொழிலதிபன், கொலையும் செய்யும் குரூர மனம்கொண்டவன் என்ற வித்தியாச காக்டெயிலுக்கு அர்விந்த் சுவாமி அபார செலக்ஷன். கடைசி வரை முகம் சுளிக்காமல் மர்டர்கள் செய்யும் ஜென்டில்மேன் வில்லனாக, பிரமாத ஸ்மைலில் விஷம் கக்கியது விர்ச்சுவல் வில்லத்தனம். கோட்-சூட்டோடு கச்சிதமான உடற்கட்டில் ஜீனியஸ் சித்தார்த் அபிமன்யூ கொடுத்த ஒவ்வோர் அசைவும் வாவ்... வாவ்! இது அர்விந்த் சுவாமி 2.0!
சிறந்த வில்லி
ஆஷா சரத்
`பாபநாசம்’
`பாபநாசம்’ வேட்டைக்காரி. இப்படி ஒரு முரட்டுப் பெண்ணை தமிழ் சினிமா கண்டது இல்லை. கண்பார்வையில், உடல்மொழியில் ஆஷா சரத்தின் அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் ஆல் ஷோஸ் அப்ளாஸ் கேட்டன. `ரொம்ப ரொம்பக் கெட்டிக்காரத்தனமா எல்லாத்தையும் இணைச்சு கதை ரெடி பண்ணியிருக்காங்க' என்ற அவருடைய ஆண்மை கலந்த மலையாளத் தமிழ் மாடுலேஷனுக்கு எக்கச்சக்க ஃபேன்ஸ். நிமிர்ந்து நின்று, புருவம் குவித்து, கூர்மையாக முறைத்துப் பார்க்கும் முகத்தில் அத்தனை ஆணவம். கருணை இல்லாத காவல் துறை அதிகாரியாகவும் தன் மகனை இழந்த பரிதாபத் தாயாகவும், இரட்டை முகங்கள் காட்டி மிரளவைத்தார் இந்த அழகு சேச்சி!
சிறந்த குணச்சித்திர நடிகர்
சத்யராஜ்
`பாகுபலி’
`பாகுபலி’யின் சிங்க கர்ஜனை கட்டப்பாவுடையது. எம்.ஜி.ஆர் ரசிகனுக்கு கிடைத்த பிரமாண்ட கதாபாத்திரம். கிடைத்த கேப்பில் எல்லாம் செம ஸ்கோர் செய்த சிம்பிள் ஸ்கிரீன் ப்ரசென்ஸ். சிவாஜிக்குப் பிறகு தன் குரலாலும் உடலாலும் மிரளவைக்கிறார் சத்யராஜ். பல்வாள் தேவனுக்கு அடங்கிப் போகும் அடிமை, அஸ்லம் கானை தன் வாள் வீச்சால் மிரளவைக்கும் வீரன், பாகுபலி உருவத்தில் இன்னொருவனைக் கண்டதும் மிரண்டு வணங்கும் விசுவாசி... என சத்யராஜ் செய்தது தன் வாழ்நாளுக்குமான பாத்திரம்... வெளிப்படுத்திய நடிப்பில் அத்தனை காத்திரம்!
சிறந்த குணச்சித்திர நடிகை
ரம்யாகிருஷ்ணன்
`பாகுபலி’
மரகதவள்ளி அலைஸ் மேகியின் இன்னொரு விஸ்வரூபம் `பாகுபலி’யின் `சிவகாமி'. கையில் வாளுடன் ஒட்டுமொத்த அரசவையையும் தன் ஒற்றைக்குரலால் அடக்கும் துணிவு, ஆளுமையின் கம்பீரம். இரண்டு மார்புகளிலும் இரண்டு குழந்தைகளுக்கு பால்கொடுக்கும் தாய்மை, கருணையின் கம்பீரம். `வயசானாலும் ஸ்டைலும் அழகும் மாறவே இல்லை' என தைரியமாக ஸ்டேட்டஸ் போடலாம். ரம்யாகிருஷ்ணனின் ஒவ்வோர் அசைவிலும்... அவ்வளவு மிடுக்கு, அவ்வளவு நேர்த்தி!
சிறந்த நகைச்சுவை நடிகர்
கருணாகரன்
`இன்று நேற்று நாளை’
வடிவேலுவும் சந்தானமும் ஹீரோவாகிவிட, கலகலப்பு குறைந்த காமெடி டிராக்கில் கருணாகரன் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ஓடவிட்டார். `கொள்கையைத் தளர்த்திக்கலாம்னு இருக்கேன்' என ஹீரோ சொல்லும்போது, `அது என்ன லுங்கியா?' என கவுன்ட்டர் கொடுத்து தியேட்டரை அதிரவைக்கும் சீரியஸ் காமெடிதான் கருணாகரனின் பலம். மிஸ் ஆகாத டைமிங், போகிறபோக்கில் வெடிச்சிரிப்பைத் தரும் அசால்ட் ஒன்லைனர்கள், உருட்டி உருட்டிப் பார்க்கும் திருட்டு முழி... என கருணாகரனின் உடல்மொழி, காமெடிக்கு டபுள் ஓ.கே. காந்தியுடன் செல்ஃபி, தொலைந்த விமானத்தைக் கண்டுபிடிப்பது என, `இன்று நேற்று நாளை' சயின்ஸ் ஃபிக்ஷன் ஏரியாவிலும் கருணாகரனின் அலப்பறை அத்தனையும் ஆஹா அசத்தல்!
சிறந்த நகைச்சுவை நடிகை
கோவை சரளா
`காஞ்சனா-2’
இன்னமும் இவர் இடத்தை இவரால்தான் நிரப்ப முடிகிறது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விகடன் விருதை வெல்லும் காமெடி சுனாமிகா. தமிழ் சினிமா நகைச்சுவைப் பகுதிகளின் `ஒன் வுமன் ஆர்மி'.
`காஞ்சானா-2’ வின் கதை நாயகியே இவர்தான். `தம்பி ராகவாஆஆஆஆஆஆ' என்ற சரளாவின் அலறலுக்கு நண்டு சிண்டுகள் மத்தியில் ரணகள லைக்ஸ். `மொட மொடவென' பாடலில் ராகவா லாரன்ஸோடு சேர்ந்து, பயந்து பயந்து அவர் ஆடிய நடன அசைவுகளில் அதிர்வேட்டுச் சிரிப்பு. ஏற்கெனவே பண்ணியதுதான், அதே பேய்கள்தான், அதே பயம்தான்... ஆனாலும் எந்த எக்ஸ்பிரஷனும் ரிப்பீட் இல்லை. கொஞ்சம் அசந்தாலும் ஓவர் ஆக்ட்டிங் ஆகிவிடக்கூடிய காட்சிகளிலும் பெர்ஃபெக்ட் டைமிங்கில் பிசிறின்றி பிச்சு உதறியது கோவை எக்ஸ்பிரஸ்!
சிறந்த புதுமுக இயக்குநர்
ஆர்.ரவிக்குமார்
`இன்று நேற்று நாளை’
தமிழில் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன், அதுவும் லோ பட்ஜெட்டில்... `விளையாடாதீங்க பாஸ். சான்ஸே இல்ல' எனக் கைகூப்பி மறுத்த கோடம்பாக்கம் இயக்குநர்களுக்கு மத்தியில் விளையாடி ஜெயித்த இளம் இயக்குநர் ரவிக்குமார், ரொம்பவே ஸ்பெஷல். ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு ஷாட்டிலும் அத்தனை நேர்த்தி. குறைந்த செலவில், கிடைத்தவற்றைக் கொண்டு முழுமையான திரை அனுபவத்தைக் கொடுத்தது பாராட்டுக்கு உரியது. `கால இயந்திரத்தில் ஒரு ஜாலி ரைடு' என்றதுமே பேஜாரான தமிழனை செம ஜாலியாகச் சிரிக்கவைத்து சுளுக்கு எடுத்தார் இந்த திருப்பூர் இளைஞர். தமிழில் இல்லாத சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரை, தைரியமாகக் கையாண்ட ரவிக்குமாருக்குக் கட்டாயம் கொடுக்கலாம் ஓர் உற்சாக ஹைஃபை!
சிறந்த புதுமுக நடிகர்
சாய் ராஜ்குமார் - `குற்றம் கடிதல்’
நாயகியைச் சுற்றி இயங்குகிற ஒரு கதை, அதில் நாயகனுக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லை. இருந்தும் தனித்துத் தெரிந்தார் `குற்றம் கடிதல்’ நாயகன் சாய் ராஜ்குமார். பெரிய தாடியும் பரட்டைத் தலையுமாக அவருடைய பாத்திரம் உணர்ந்து நடித்திருந்தார். தன் அகல விழிகளால் அவர் கொடுத்த அத்தனை எக்ஸ்பிரஷனும் டிஸ்டிங்ஷன். மனைவி சிக்கலில் மாட்டிக்கொண்டதை உணர்ந்து, மருத்துவமனைக்கு வந்து, பாதிக்கப்பட்ட பையனின் பெற்றோரைச் சந்திக்க அடம்பிடிக்கும் காட்சியிலும், உருக்குலைந்து கிடக்கும் மனைவிக்கு ஆறுதல் தரும் லவ்வபிள் கணவனாகவும் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். தனக்கான பாத்திரங்களைத் தேடிக் கண்டடைந்து நடித்தால், நிச்சயம் காத்திருக்கிறது இந்தப் புதுமுக நடிகனுக்கான சக்சஸ்ஃபுல் எதிர்காலம்!
சிறந்த புதுமுக நடிகை
தீபா சன்னிதி
`எனக்குள் ஒருவன்’
அறிமுகப் படத்திலேயே ஸ்கோர் பண்ணிய அபார நடிகை, இந்தக் கன்னடத்துப் பைங்கிளி. ஐட்டம் சாங்கில் கவர்ச்சிகாட்டி ஆடும் நடிகையாகவும், அடக்க ஒடுக்க மிடில் கிளாஸ் பெண்ணாகவும் `எனக்குள் ஒருவன்' படத்தில் இவர் காட்டிய வித்தியாசம், வெரைட்டி வெடி. முகத்தில் எந்நேரமும் வெடிக்கக் காத்திருக்கும் கலவரத்தைத் தேக்கிவைத்துக்கொண்டு இவர் காட்டிய முகபாவனைகள் அழகோ அழகு. காமெடி முதல் கண்ணீர் வரை வேண்டிய அளவில் வெளிப்படுத்தி, தீபாவின் கண்கள் தீபாவளி காட்டின. ‘நடிக்கத் தெரிந்த நடிகை’ பட்டியலுக்கு 2015-ம் ஆண்டின் நல்வரவு, தீபா சன்னிதி!
சிறந்த குழந்தை நட்சத்திரம்
வி.ரமேஷ், ஜெ.விக்னேஷ்
`காக்கா முட்டை’
சிறகடித்துப் பறந்து, தீராத சேட்டைகள் செய்த இந்தச் சுள்ளான்கள், கண்டோர் மனங்களைக் களவாண்டார்கள். சின்ன காக்கா முட்டையாகவும் பெரிய காக்கா முட்டையாகவுமே மனதில் பதிந்துவிட்ட வடசென்னையின் வாண்டுகள் ரமேஷ், விக்னேஷ். இந்த அழுக்குப் பையன்களின் அழகில் ஆல் இந்தியாவே மயங்கியது. முதல் படம் என்ற பதற்றமோ, கேமரா அச்சமோ இல்லாமல், இயல்பான நடிப்பில் அசத்தினார்கள் இருவரும். சின்ன காக்கா முட்டை வெளிப்படுத்திய அப்பாவித்தனமும் அந்தக் குறும்புப்பார்வையும் அத்தனை அழகு. பெரிய காக்கா முட்டையின் கோபத்தில் தெறித்தது அவ்வளவு நேர்மை. ஒட்டுமொத்தப் படத்தையும் மாஸ் ஹீரோபோல நெஞ்சில் சுமந்த இந்தக் குட்டிப்பையன்கள் தமிழ் சினிமாவைத் தெறிக்கவிட்ட தேவதூதர்கள்!
சிறந்த இசையமைப்பாளர்
ஏ.ஆர்.ரஹ்மான்
`ஓ காதல் கண்மணி’
காதலால் நிரம்பிய ஒரு படத்துக்கு வானவில்லாக வண்ணம் கொடுத்தது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை.
`ஓ காதல் கண்மணி'யின் ஒவ்வொரு நொடியிலும் இசை இறகாக வருடியது. `மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை' என உள்ளம் உருகவைத்தது. மென்டல் மனங்கள், `சினாமிகா சினாமிகா' என பித்தாகத் திரிந்தன. ஒவ்வொரு பாடலும் சொர்க்கவாசலுக்கான சாவியாக ஒலித்தது. `சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே' கஜலில் அவர் போட்டது, காதல் மனங்களின் ரகசிய ரங்கோலி. நவீன இளைஞர்களின் பல்ஸ் பிடித்து, வெரைட்டியும் ட்ரெண்டியும் கலந்து அடித்தது வைரல் ஹிட். ‘மன மன மென்டல் மனதில்' என்ற சிங்கிள் ட்ராக் வெளியானபோது பற்றிக்கொண்ட `ஓ காதல் கண்மணி' ஃபீவர், பல மாதங்கள் தொடர்ந்தது. இசையும் பாடல்களும் கதையை அழுத்தமாகச் சொல்லி படத்தை ஒரு மியூஸிக்கல் ஜர்னியாக மாற்றியது. 2015... இசைப்புயலின் ஆண்டு!
சிறந்த ஒளிப்பதிவு
பி.சி.ஸ்ரீராம் - `ஐ’
உலகமே டிஜிட்டலாக மாற, `இந்தக் கதைக்கு ஃபிலிம்தான் தேவை' என தீர்மானமாகச் சொன்னார் பி.சி.ஸ்ரீராம். சீனாவின் இயற்கை அழகு, வடசென்னையின் அழுக்குச் சந்துகள், அழகி ஏமி, அகோர விக்ரம் என ஏகப்பட்ட சவால்கள். அனைத்தையும் சுவாரஸ்யமாகப் படம்பிடித்தது பி.சி-யின் கேமரா. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட், மூன்று வருட உழைப்பு என எல்லாமே ஃப்ரேம் பை ஃப்ரேம் கவிதை. ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு கான்செப்ட். அதுவே ஒரு படத்துக்கு சமம் என கொண்டாடியது தமிழ் சினிமா. சின்ன கேன்வாஸில் சிகரம் தொட்டவருக்கு `ஐ' எவரெஸ்ட் உயரம்; அவர் மகுடத்தில் இன்னொரு வைரம்!
சிறந்த படத்தொகுப்பு
கிஷோர் - `காக்கா முட்டை’
கொஞ்சம் பிசகினாலும் உடைந்து விடக்கூடிய இத்தனை மெல்லியக் காட்சிகளையும், துல்லியமாக வெட்டி ஒட்டி ஓட்டியது கிஷோரின் திறமை. சேரிகளின் இண்டு இடுக்கிலும், சந்துபொந்துகளிலும் திரிந்த கேமராவை, இழுத்துக் கோத்து மாலை ஆக்கிய எக்ஸலென்ட் எடிட்டிங். விறுவிறு வேகக் காட்சிகள் கிடையாது. தாவிப் பறந்து, தவழ்ந்து மறையும் கோணங்கள் கிடையாது. ஆக்ஷன் அதிரடியோ ரொமான்டிக் தெறிப்புகளோ எதுவுமே இல்லாமல் ஏழை மக்களின் எளிமையான வாழ்க்கைச் சித்திரத்தை அதன் கவித்துவத்துடன் பரிமாறிய படையலில் அத்தனை ருசி. உன்னதமான சினிமாவில் எங்குமே பிசிறடிக்காத அந்த எடிட்டிங்கில் இருந்தது அத்தனை ஜீவன். மிஸ் யூ கிஷோர்!
சிறந்த கதை
மணிகண்டன்.எம்
`காக்கா முட்டை’
சென்னை நகரத்தின் விளிம்புநிலை மனிதர்களை, சென்னைக்காக உழைக்கும் மண்ணின் மைந்தர்களை அக்கறையுடன் அணுகிய படம் `காக்கா முட்டை'. நுகர்வுக் கலாசாரத்தின் விளைவுகளை சிரிக்கச் சிரிக்கச் சொல்லி வலிக்கவைத்த படைப்பு. ஒரு நல்ல கதை, ஒரு நல்ல சினிமாவை தானே உருவாக்கிக்கொள்ளும் என்பதற்கு இன்னொரு சான்று. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சினிமா அழுத்தமாகப் பதிவுசெய்வது அவசியம். அந்த வகையில் `காக்கா முட்டை'யும் சினிமா வரலாற்றின் இன்னொரு சிகரம். எளிய மக்களின் வாழ்வியலை பொறுப்புடன் கதையாக்கிய மணிகண்டனுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்!
சிறந்த திரைக்கதை
ஜீத்து ஜோசப் - `பாபநாசம்’
சினிமா பார்த்து வாழக் கற்றுக்கொண்ட ஒருவன், அதே சினிமாவைப் பயன்படுத்தி தன் குடும்பத்தை கொலைவழக்கில் இருந்து காப்பாற்றும் வித்தைதான் `பாபநாசம்’. சட்டத்துக்கு எதிரானது என்றாலும் அறத்துக்குப் புறம்பானது அல்ல என்பதை நம்பவைக்கும் மேஜிக் திரைக்கதை படத்தின் ப்ளஸ். மலையாளத்தில் ஹிட்டடித்த கதையை நேட்டிவிட்டி மாற்றங்களோடு தந்தது ஜீத்துவின் ஸ்பெஷல். கதை போகும் போக்கில் சில கண்ணிகளைப் புதைப்பது, அதன் மேல் ஹீரோவின் குடும்பம் கால் வைப்பது, அது வெடிக்காமல் ஹீரோவைக் காப்பது என திரைக்கதை காட்டியது எதிர்புதிர் அதிர்வுகள். ஒவ்வொரு நொடியும் விறுவிறுப்பான சுவாரஸ்யத்தை அள்ளி வழங்கியது அபாரமான திரைக்கதை உத்தி!
சிறந்த வசனம்
ஆனந்த் அண்ணாமலை,
ஆனந்த் குமரேசன் `காக்கா முட்டை’
இயல்பான, எளிமையான வசனங்களால் அழுத்தமான உணர்வுகளைக் கடத்தி கவனம் ஈர்த்தார்கள் ஆனந்த் அண்ணா மலையும் ஆனந்த் குமரேசனும். ‘சத்தியமா நம்மள உள்ளே விட மாட்டாங்கடா' என, சின்ன காக்கா முட்டை சிட்டி சென்டர் வாசலில் நின்று சொன்னபோது கலகலப்பானது அரங்கம். `எனக்கே விபூதி அடிக்கப் பார்த்தல்ல' என்ற யோகிபாபு பன்ச், வைரல் மீம் மெட்டீரியல் ஆனது. `இல்லாதவங்க இருக்கிற இடத்துல கடைபோட்டு ஏன் உசுப்பேத்தணும்?’ என சிறு வசனங்களில் பெருங்கதை சொல்லிய இருவருக்கும் லைக்ஸ்... லைக்ஸ்!
சிறந்த கலை இயக்கம்
சாபு சிரில் - `பாகுபலி’
வரலாற்றுப் படங்கள், கலை இயக்குநர்களுக்கான ஃப்ரீ ஹிட். வாய்ப்புகள் அதிகம்; அதேசமயம் ஸ்கோர் செய்தாகவேண்டிய நெருக்கடி. `பாகுபலி'யில் சாபு சிரில் அடித்ததோ ஸ்டேடியம் தாண்டிய சிக்ஸர். கையில் தாங்கும் வாளில் இருந்து அரண்மனையின் ஒரு மூலையில் இருக்கும் மேஜை வரை பார்த்துப் பார்த்து இழைத்ததில் இருந்த நேர்த்தி உலகத் தரம். பாதி உண்மை, பாதி கிராஃபிக்ஸ் என பல இடங்களில் பொருட்கள் இருப்பதாக நினைத்தே உருவாக்கவேண்டிய நிர்பந்தம். எந்தக் குறையும் இல்லாமல் உழைத்து முடித்த சாபு சிரிலின் கைகளுக்கு ராஜ வளையமே அணிவிக்கலாம்!
சிறந்த ஒப்பனை
நல்லா ஸ்ரீனு, சேனாபதி நாயுடு
`பாகுபலி’
`பாகுபலி’யில் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு மேக்கப். படத்தில் இருக்கும் எல்லோருமே வழக்கத்துக்கு மாறான தோற்றம். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் எக்ஸ்ட்ரா டீட்டெய்லிங் என `பாகுபலி’ எதிர்கொண்ட சவால் மிக மிகப் பெரியது. அதை சாதனையாக்கியது நல்லா ஸ்ரீனு, சேனாபதி நாயுடு கூட்டணி. கட்டப்பா முதல் காளகேயர்கள் வரை, வயதான அனுஷ்கா முதல் ராணி ரம்யாகிருஷ்ணன் வரை அனைவரின் ஒப்பனையும் கச்சித நேர்த்தி. ஒவ்வொரு பாத்திரமும் நெற்றிப்பொட்டில் தொடங்கி புருவநரை வரை அத்தனை துல்லியமான மேக்கப் கொடுத்தது ஹிஸ்டாரிக்கல் டச். மகிழ்மதியின் மனிதர்களை எல்லாம் அச்சு அசலாக மாற்றியதில் ஒப்பனைக் காரர்களின் உழைப்பு ஒப்பற்றது!
சிறந்த நடன இயக்கம்
பாபா பாஸ்கர் - தர லோக்கல் `மாரி’
அரை விநாடிகூட ஓயாத ராக் ஸ்டார் அனிருத்தின் தரலோக்கல் இசைவெடிக்கு நடனம் வடிவமைப்பது நாட் ஈஸி. தனுஷ் மாதிரி ஒரு தாறுமாறு ஆட்டக்காரனை ஆட்டுவிப்பதற்கு ஸ்பெஷல் கவனம் தேவை. பாபா பாஸ்கர் இசையையும் தனுஷையும் ஸிங்க் செய்துபோட்ட தெறி டான்ஸுக்கு தமிழ்நாடே ஆடியது. ஒரே ஷாட்டில் வீட்டுக்குள் இருந்து கிளம்பி ரோட்டுக்கு வந்து கார்களின் டாப்பில் ஏறி எகிறி, ஜீப்பில் குதித்து, ஆட்டோவில் மிதந்து ஆடி கெட்ட ஆட்டம் போட்டார் தனுஷ். `மாரி' பட டீஸரிலேயே பாபா பாஸ்கர் அமைத்த 37 செகண்ட் நான்-ஸ்டாப் குத்து... கொண்டாட்டத்தின் கொலைவெறி!
சிறந்த சண்டைப் பயிற்சி
மிராக்கிள் மைக்கேல், லார்னெல் ஸ்டோவெல் ஜூனியர்
`பூலோகம்’
தமிழில் முதன்முதலாக ஒரு புரொஃபஷனல் பாக்ஸிங் படம். இதில் மிராக்கிள் மைக்கேல், லார்னெஸ் ஸ்டோவெல் ஜூனியர் ஆகிய இருவரும் உருவாக்கியது வழக்கமான சண்டைகள் அல்ல... உண்மையான குத்துச்சண்டைப் போட்டிகள். ஏழு அடி அரக்கன் ‘நேதன் ஜோன்ஸை’ ஆறு அடி ஜெயம் ரவி இடுப்பில் குத்தியே வீழ்த்துவது, வெறிகொண்ட பன்ச்சில் மாட்டாமல் எஸ்கேப் ஆவது என ரிங்குக்குள் நடக்கும் சர்க்கஸ், சுவாரஸ்யம். பாக்ஸிங்கில் இருக்கிற சொற்பமான முரட்டுக் குத்துகளுக்கு நடுவில் புத்திசாலித் தனத்தையும் சேர்த்து ஸ்கோர் செய்த இருவருக்கும் ஒரு நாக்அவுட் பூங்கொத்து!
சிறந்த ஆடை வடிவமைப்பு
ரமா ராஜமௌலி, பிரசாந்தி திப்ரினேனி `பாகுபலி’
சரித்திரக் கதைக்கு உடை வடிமைக்கும் சவால் பணியில் சபாஷ் வாங்கியது, ரமா ராஜமௌலி, பிரசாந்தி திப்ரினேனி அடங்கிய `பாகுபலி’ இருவர் அணி. தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் பயணிக்கும் கதைக்கு, ஆடை வடிவமைப்பில் இவர்கள் கையாண்டது புதுமை டெக்னிக். குட்டீஸுக்கு மிகப் பிடித்த அமர்சித்ரகதா காமிக்ஸில் வரும் உடை அலங்காரம்தான் இவர்களின் ரெஃபரென்ஸ். அதனால்தான் வல்லாள தேவனும் பாகுபலியும் பார்க்க அர்ஜுனனையும் துரியோதனனையும் நினைவூட்டினார்கள். எத்தனை ஆயிரம் பேருக்கு எத்தனை விதமான ஆடைகள், அணிகலன்கள்?! உறுதியான விசுவாசம் நிரம்பிய அடிமையான கட்டப்பாவுக்கான உடை முதல், நாடோடி அரக்கர் குல காகதீயர்களுக்கான கரிய ஆடைகள் வரை ஒவ்வொன்றும் ஓஹோ ரகம். பிரமாண்ட ஆராய்ச்சியும் உழைப்பும் நிரம்பிய இந்த டிசைன்கள், `பாகுபலி’ வெற்றியின் அசத்தல் அணிகலன்கள்!
சிறந்த அனிமேஷன்-
விஷுவல் எஃபெக்ட்ஸ்
வி.ஸ்ரீனிவாஸ் மோகன்
`பாகுபலி’
தெருக்கூத்தில் தொடங்கி, மேடை நாடகம் வழியே சினிமா பரிணாம வளர்ச்சி எடுத்திருக்கிறது. இதன் அடுத்த கட்டப் பாய்ச்சல்தான் அனிமேஷனும் கிராஃபிக்ஸும். இனிவரும் படங்களில் தவிர்க்கமுடியாத அம்சமாகிவிட்டது சி.ஜி தொழில்நுட்பம். அதில் சமீபத்தில் உச்சம் தொட்ட படம்தான் `பாகுபலி'. நினைத்துப்பார்க்கவே முடியாத போர்க்காட்சிகள், வானளாவிய சிலை, பனிப்புயல்... என்ற அதிரடி அனுபவத்துக்குக் காரணமே விஷுவல் எஃபெக்ட்ஸ்தான். மிக நேர்த்தியான சிறு தவறும் நேராத திட்டமிடல்தான் இதன் அடிப்படை. அந்த வகையில் விழிகள் விரிய ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஸ்ரீனிவாஸ் மோகன் அணிக்கு பாகுபலியின் சிலை உயர பொக்கே!
சிறந்த பாடலாசிரியர்
வைரமுத்து
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
`ஓ காதல் கண்மணி’
இளசுகளின் கதை என இயக்குநர் சொன்னதும் தன் பேனாவுக்கு `ஸ்லிம் ஃபிட்' ஜீன்ஸை மாட்டிவிட்டார் வைரமுத்து. `ஓ காதல் கண்மணி'யின் ஒவ்வொரு அசைவையும் டிஜிட்டல் நகல் எடுத்து வைரல் டிரெண்ட் ஆக்கினார். `நானே வருகிறேன்... கேளாமல் தருகிறேன்' என முதல் வரியிலேயே அதிரவைத்துக் கதை சொன்னது, `மலர்கள் கேட்டேன்... வனமே தந்தனை' என இசை வசமானது, `சரிந்து விழும் அழகென்று தெரியும் கண்ணா... என் சந்தோஷக் கலைகளை நான் நிறுத்த மாட்டேன்' என வாழ்வின் யதார்த்தம் வழியே காதல் பகிர்ந்தது... என `ஓ காதல் கண்மணி'க்கு வைரமுத்து இளமை கிரீடம் அணிவித்தார். இது கவிஞருக்கான கிரீடம்!
சிறந்த பின்னணிப் பாடகர்
ஏ.ஆர்.அமீன்
மௌலா வா சல்லிம்...
`ஓ காதல் கண்மணி’
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன். இந்தக் குட்டிப்புயல் ‘மௌலா வா சல்லிம்...’ என தன் பிஞ்சுக் குரலால் நம் உடலில் பாய்ச்சியது, உள்ளம் உறைய வைக்கும் ஆன்மிக மின்சாரம். பாரம்பர்ய இஸ்லாமிய அரபிக் பாடல் மூலம் `ஓ காதல் கண்மணி’யில் தன் இசை இன்னிங்ஸைத் தொடங்கினார் ஏ.ஆர்.அமீன். தந்தையைப் போலவே தமயனின் இசைப் பயணத்தைத் தொடங்கிவைத்தவர் மணிரத்னம். முதல் பாடலிலேயே தன் தேன்மிளகுக் குரலால் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஈர்த்து இழுத்தார். பொருள் புரியாவிட்டாலும், பல லட்சம் மனங்களைக் கசிந்துருகவைக்க முடியும் என்பதை நிகழ்த்திக்காட்டியது ஏ.ஆர்.அமீனின் வசியக் குரல். ஒவ்வொரு முறை கேட்கும்போதும், ஆன்மாவின் ஆழத்தை வருடும் ‘மௌலா வா சல்லிம்...’ தமிழ் இசையின் ஆன்மிகத் தாலாட்டு!
சிறந்த பின்னணிப் பாடகி
ஷாஷா த்ரிபாதி
நானே வருகிறேன் - `ஓ காதல் கண்மணி’
`பறந்து செல்ல வா...’ எனக் கேட்டவரை எல்லாம் விரல் பிடித்து விண்ணில் பறக்கவைத்த வாவ் வாய்ஸ் ஷாஷா த்ரிபாதி. ரஹ்மான், கோக் ஸ்டுடியோவில் கண்டெடுத்த கனடா பொண்ணு. `ஓ காதல் கண்மணி'யில் இவர் பாடிய மூன்று பாடல்களுமே இளசுகளைப் பித்துபிடிக்கவைத்தன. ஷாஷாவின் குரல், இப்போது இந்தியாவின் செல்லக்குரல். உருதும் இந்தியும் கொஞ்சம் இத்தாலியனும் தெரிந்த இந்தப் பெண்ணுக்குத் தமிழ் தெரியாது. ஆனாலும் வார்த்தைகளும் உச்சரிப்பும் அட்சர சுத்தமாக, அற்புதமாக ஒலித்தன. `புத்தம்புது வெளி, புத்தம்புது மொழி, திக்கியது விழி, தித்திக்குது வலி’ என ஷாஷா பாடினால், தித்திக்குது நம் மனம். நவீனத் தலைமுறையின் இசை ரசனைக்கு ஷாஷா ஒரு `மயில்’ ஸ்டோன்!
சிறந்த தயாரிப்பு
க்ரிஸ் பிக்சர்ஸ்,
ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்பரேஷன்
`குற்றம் கடிதல்’
பேய்களும் ஒன் லைன் பன்ச் காமெடி படங்களும் கல்லா கட்டிக்கொண்டிருக்கும் தமிழ்ச் சூழலில், குழந்தைகள் நலன் பற்றிய படம். அதுவும் கமர்ஷியல் கலர் இல்லாமல், உண்மையான சமூக அக்கறையுடன் ஒரு கதை சாத்தியமா? இயக்குநராக, நடிகராக தத்தமது கிராஃபை ஏற்றிக்கொள்ள ஒரு படம் பண்ணலாம். ஆனால், தயாரிப்பாளராக அதைச் செய்வது அத்திப்பூ தான். அந்த வகையில் `குற்றம் கடிதல்’ படத்தை குற்றமின்றி எடுத்த தயாரிப்பாளரை ஆரத்தழுவி வரவேற்கலாம். இதுபோன்ற முயற்சிகளே சினிமாவின் ஆக்ஸிஜன்!
சிறந்த டி.வி சேனல்
பாலிமர் நியூஸ்
2015-ன் இறுதியில் சென்னை மற்றும் கடலூரைப் புரட்டிப்போட்ட மழை வெள்ளத்தின் பாதிப்புகளை, களத்தில் இருந்து காணொலிக் காட்சிகளாக வழங்கியதில் பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி முன்னணி வகித்தது. முற்றாகத் துண்டிக்கப்பட்ட ஊரப்பாக்கம், கேளம்பாக்கம், முடிச்சூர் பகுதிகளில் இருந்தும் காட்சிகளைக் கொண்டுவந்து சேர்த்தது. தொலைத்தொடர்பு வசதிகள் முடங்கிய நிலையில், சென்னையின் நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்பிய தமிழ்நாட்டின் இதர பகுதி மக்களுக்கு உண்மை நிலவரத்தை மிகை இல்லாமல் வழங்கியது. சென்னையில் இருந்து வெளியூர் செல்ல விரும்புபவர்களுக்கான சரியான வழித்தடம் எது என, ரூட் மேப் தந்தது. மழை வெள்ளம் தவிர்த்த இதரச் செய்திகளிலும் ஆண்டு முழுவதும் முத்திரை பதித்தது. மக்களை நேரடியாகப் பாதிக்கும் உள்ளூர் செய்திகளுக்கு, கூடுதல் முக்கியத்துவம் தருவது, விவாத நிகழ்ச்சிகளைத் தவிர்த்து செய்திகளுக்கு முன்னுரிமை தருவது... என ஒரு செய்தி தொலைக்காட்சிக்கான உழைப்பும் முனைப்பும் பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியை முன்வரிசையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. பலே பாலிமர்!
சிறந்த டி.வி நிகழ்ச்சி
ரௌத்ரம் பழகு, புதிய தலைமுறை
`ரௌத்ரம் பழகு' ஒவ்வொரு எபிசோடும் ஒரு துல்லியமான ஆவணப்படம். அரியலூர் பகுதியில் சிமென்்ட் ஃபேக்டரியால் பாதிக்கப்படும் கிராமங்களின் நிலை, மூணாறு தேயிலைத் தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் நடத்திய எழுச்சிமிகுப் போராட்டம், திருநங்கைகளின் வாழ்க்கைச் சூழல் குறித்த அட்டகாசமான பதிவு... என இந்தச் சமூகம் காண விரும்பாத, காண மறுக்கிற இருண்ட பகுதிகளின் மீது காட்சி வெளிச்சம் பாய்ச்சுகிறது இந்த நிகழ்ச்சி. மெர்க்குரிக் கழிவுகள் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் நரம்பியல் பாதிப்புகள், ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலைகளால் உருவாகும் சூழல் சீர்கேடுகள்... என இவர்கள் தேர்வுசெய்யும் நிகழ்ச்சிகளுக்கான களம், லட்சக்கணக்கான மக்களை அன்றாடம் நேரடியாகப் பாதிக்கக்கூடியது. விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் முதியோர் கொலை பற்றிய நிகழ்ச்சி அதிரவைத்தது. வயது முதிர்ந்து, உடல்நலக் குறைவால் முடங்கிக்கிடக்கும் பெரியவர்களை, உறவினர்களே சேர்ந்து உயிரைப் போக்கும் அவலக் கொடுமையை உலகுக்கு உரத்துச் சொன்ன ரௌத்ரம் பழகு நிகழ்ச்சி, தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் அவசியமான கோபம்!
சிறந்த நெடுந்தொடர்
தெய்வமகள், சன் டி.வி
சத்யாவும் காயத்ரியும்தான் இந்த ஆண்டும் தமிழ்த் தொலைக்காட்சிகளை ஆக்கிரமித்த செல்லப்புயல்கள். வன்முறை எதுவும் இல்லாமல், சீரியல் குணங்கள் தவிர்த்து பெண்களுடைய அன்றாடப் பிரச்னைகளை மட்டுமே பேசுகிற எளிமைதான் `தெய்வமகள்’ நெடுந்தொடரை நம்பர் ஒன்னாக நிலைக்கவைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் திருப்புமுனை, ஒவ்வொரு பாத்திரத்துக்கும் பிரத்யேகக் குணாதியசங்கள், கவித்துவத் தருணங்கள், நினைத்துப்பார்க்கவைக்கும் வசனங்கள் என ஒவ்வொரு நாளும் உற்சாகம் கூட்டுகிறாள் `தெய்வமகள்’. எங்குமே எல்லை மீறாத இயல்பை தொடர்ந்து காக்கிற இயக்குநர் எஸ்.குமரன் பாராட்டுக்கு உரியவர். தமிழகக் குடும்பப் பெண்களின் தோழியாக வலம்வரும் வாணி, நடிப்பிலும் அபார ராணி!
சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்
குணசேகரன்
நேர்படப் பேசு, புதிய தலைமுறை
தமிழ்த் தொலைக்காட்சிகளின் பேச்சரங்க நிகழ்ச்சிகளில் நிதானத்தையும் கண்ணியத்தையும் கொண்டுவந்த நெறியாளர். மாற்றுக் கருத்தாளர்களை ஓர் இடத்தில் ஒன்றிணைத்து விவாதிக்கும் நிகழ்ச்சிகளில், கூச்சலும் குழப்பமும் மிகுவது இயல்பு. எனினும், பேசுபொருளின் வரம்பு மீறாமல், வரம்பு மீறுவோரை இடைமறித்து இழுத்துவரும் சவால் பணியைச் சரியாகச் செய்கிறார் குணசேகரன். தமிழக அரசியல் வரலாற்றின் கடந்தகால நிகழ்காலப் போக்குகளை ஆழ்ந்து கவனித்து, பங்கேற்பாளர்களிடம் குணசேகரன் கேட்கும் குறுக்குக் கேள்விகள், அரசியல் விவாத நிகழ்ச்சிகளின் தரத்தை அடுத்தக் கட்டத்துக்கு இட்டுச்செல்கிறது. ஊடகங்கள் குறித்த விமர்சனங்களையும் விவாதப் பொருளாக்கி கவனம் ஈர்த்த குணசேகரன், நேர்படப் பேசும் சீர்மிகு நெறியாளர்!
சிறந்த தொகுப்பாளினி
பிரியங்கா
சூப்பர் சிங்கர், விஜய் டி.வி
தமிழகத்தின் கலகல நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரியங்கா. விஜய் டி.வி-யின் `ஒல்லி பெல்லி’ நிகழ்ச்சி மூலம் என்ட்ரி கொடுத்தவர், இப்போது தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடலில் இருக்கிறார். பொதுவாக நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பங்கேற்பாளர்களைக் கலாய்ப்பார்கள். ஆனால், இங்கே பங்கேற்பாளர்கள்தான் பிரியங்காவைக் கலாய்ப்பார்கள். அவரும் எதையும் கண்டுகொள்ளாமல் தன்னைத்தானே கலாய்த்துக்கொண்டு, நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்துகிறார். சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டியை நேரலையில் தொகுத்து வழங்கியது பிரியங்காவின் சமீபத்திய சாதனைகளில் ஒன்று. ஏழு ஆண்டுகளாக டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கும் பிரியங்கா, இப்போது ‘கலக்கப்போவது யாரு?’ நிகழ்ச்சியின் நடுவரும்கூட. ஷாரூக் கான், தனுஷ் என கடந்த ஆண்டின் ஹிட் டி.ஆர்.பி பேட்டிகளையும் எடுத்து ‘குட் மார்க்’ வாங்கியிருக்கிறார் பிரியங்கா. நீ கலக்கு செல்லம்!
சிறந்த பண்பலை
ஹலோ எஃப்.எம்
பண்பலைகளில் குரல் அலைகள் மூலம் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது ஹலோ எஃப்.எம். ‘லெஸ் டாக் மோர் சாங்ஸ்’ என பல எஃப்.எம்-கள் பாடல்களை ஓடவிட்டு ஆர்.ஜே-க் களுக்கு ஓய்வுகொடுக்க, நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எப்போதுமே நேயர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறது ஹலோ எஃப்.எம். உள்ளூர் முதல் தேசிய செய்திகள் வரை அனைத்தையும் அலசி, ஆராயும் காலை நேரம் ‘ஹலோ தமிழா’ நிகழ்ச்சி, அறிவுக்கு விருந்து. ரேடியோவில் கிரிக்கெட் கமென்ட்ரிகளை இந்த 4-ஜி தலைமுறைக்கும் கடத்தி, டாப் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது `சொல்லியடி’ நிகழ்ச்சி. குடும்பத் தலைவிகளுக்கு டிப்ஸ் சொல்லும் ‘அஞ்சறைப்பெட்டி’, மாலை நேரத்தைக் கலகலப்பாக்கும் `நாலு மணி வாலு’ என டாப் நிகழ்ச்சிகளால் ட்ரெண்டிங்கில் இருக்கிறது ஹலோ எஃப்.எம்!
சிறந்த பண்பலை தொகுப்பாளர்
ஆர்ஜே பாலாஜி - பிக் எஃப்.எம்
சென்னை வெள்ளத்தில் ஒலித்த நல்ல குரல் ஆர்.ஜே. பாலாஜியினுடையது. தன் குரலால் மட்டுமே ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒன்றுதிரட்டி மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தியது, மிராக்கிள் மேஜிக். தன் பிக் எஃப்.எம் அலுவலகத்தையே நிவாரணப் பணிக்கான தலைமையகமாக மாற்றி களத்தில் இறங்கி கைகொடுத்ததோடு, போகிறபோக்கில் தென் இந்தியாவைக் கண்டுகொள்ளாத வடஇந்திய ஊடகங்களுக்கும் இரண்டு பன்ச் கொடுத்தார் பாலாஜி. தன் `டேக் இட் ஈஸி’ நிகழ்ச்சியின் மூலம் பல ஆண்டுகளாக ஊரை எல்லாம் கலாய்த்துக் காலி பண்ணினாலும், எப்போதும் ஊடுபாவாக ஒலிக்கிறது சமூகத்தின் மீதான இவரது சுளீர் விமர்சனம். வானிலை ரமணனோடு பாலாஜியின் காமெடிப் பேட்டி இந்த ஆண்டின் வைரல் வாய்ஸ் மெசேஜ். தன் ஒன்லைன் பன்ச்களால் கோடிப் பேரின் உள்ளம் கவர்ந்த இந்த ஆர்ஜே-வுக்கு ஆன்லைனில் உண்டு ஆயிரம் ரசிகர் மன்றங்கள்!
சிறந்த பண்பலை தொகுப்பாளினி
சுலபா
ரேடியோ ஒன்
சென்னை ரேடியோ ஒன் எஃப்.எம்-மின் ஆர்.ஜே-வான சுலபா... அதிரடி, கலகல ஹோஸ்ட். `ஸ்மார்ட் டாக் வித் சுலபா' பட்டையைக் கிளப்பும் இன்ஃபோடெய்ன்மென்ட் புரோகிராம். எங்கெங்கும் காணக் கிடைக்கும் எளிய மனிதர்களோடு உரையாடுகிற நிகழ்ச்சியின் வெற்றி இவரின் முத்திரை. ஐ.டி வேலையை உதறிவிட்டு விவசாயம் பார்ப்பவர், மாரத்தான் முடித்து ட்ரையத்லான் செல்பவர், கார்ப்பரேட் நிறுவன ஹெச்.ஆர்., உடல் குறைபாட்டை வென்ற சாம்பியன்கள் என இவர் பேட்டி எடுக்கும் பெரும்பாலானோர் அதிகம் அறியப்படாத நாயகர்கள். ஸ்டைலிஷ் ஆங்கிலம் கலந்து செம எனர்ஜி குரலில் பேசும் சுலபா, ஆர்.ஜே ஆகும் கனவில் கார்ப்பரேட் நிறுவன வேலையைத் துறந்தவர். `படைப்பாற்றலுடன், சமூகப் பொறுப்புஉணர்வும் தொகுப்பாளர்களுக்கு அவசியம். அதுதான் நீண்டகாலத்துக்கு நிலைக்கவைக்கும்' என்கிற சுலபா, இளம் ஆர்.ஜே-க்களுக்கு எனர்ஜி இன்ஸ்பிரேஷன்!
சிறந்த நாவல்
BOX கதைப் புத்தகம் - ஷோபாசக்தி
கருப்புப் பிரதிகள்
ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றை, தொடர்ச்சியாகத் தன் படைப்புகளில் பதிவுசெய்துவரும் ஷோபாசக்தியின் ‘பாக்ஸ்’ நாவல், போருக்குப் பிறகான சூழலின் ‘புதிய’ துயரங்களைப் பேசுகிறது. இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போர், தமிழர்கள் ஒவ்வொருவரின் மனநிலையையும் எப்படிக் குலைத்திருக்கிறது என்பதை, தேர்ந்த மொழிநடையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஷோபாசக்தி. சொந்தக் கிராமங்களில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்படும் அவலம், முன்னாள் போராளிகளின் இன்றைய இருப்பு என வெவ்வேறுவிதமான உணர்வு நிலைகளை நாவல் பதிவுசெய்கிறது. கார்த்திகை என்னும் போராளியின் மரணத்தை, ஊரே ஒரு துயர விளையாட்டாக நடித்துக் காட்டும் இடம் நிச்சயம் நம் மனசாட்சிக்கான பரிசோதனை முயற்சிதான். பாக்ஸ் என்னும் போர் உத்தி எப்படி ஒரு கிராமத்தின் ஆழமான வடுவாக உறைந்திருக்கிறது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது நாவல். வரலாற்றில் தோற்கடிக்கப்பட்டவர்களின் வலியை உரக்கச் சொன்னவகையில், ‘பாக்ஸ்’ ஒரு முக்கியமான நாவல்!
சிறந்த சிறுகதைத் தொகுப்பு
மயான காண்டம்
லஷ்மி சரவணக்குமார், உயிர்மை பதிப்பகம்
‘எனது நேரடியான அனுபவங்களில் இருந்து எழுதப்பட்டவை அல்லது என் சம்பந்தமான மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்டவை’ என தனது சிறுகதைகளைப் பற்றி முன்னுரையில் குறிப்பிடுகிறார் லஷ்மி சரவணக்குமார். மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை வெகுநுட்பமாக அணுகுவதில் இருந்து இந்தக் கதைகள் உருப்பெற்றிருக்கின்றன. ‘மயான காண்டம்’-மச்சக்காளை, ‘அஜ்ஜி'-பாட்டி, ‘வள்ளி திருமணம்’-கலைமகள் என வாசித்து முடித்த பிறகும் நினைவில் இருந்து நீங்க மறுக்கின்றன கதாபாத்திரங்கள். கதாபாத்திரங்களுடன் நாம் உலவுவது போன்ற பிரமையை ஏற்படுத்துவது கதைகளின் தனிச்சிறப்பு. காசி மயானமோ, மருத்துவமனை பொது வார்டோ, மழை சூழ்ந்த நாடக மேடையோ சூழலோடு சேர்ந்து நாமும் பயணிக்கிறோம். மனித உணர்வுகளின் மகத்துவத்தை அழகியலோடு பேசும் சிறுகதைகளின் தொகுப்பு இது!
சிறந்த கட்டுரைத் தொகுப்பு
பழவேற்காடு முதல் நீரோடி வரை
வறீதையா கான்ஸ்தந்தின் - எதிர் வெளியீடு
கடலையும் கடல்சார்ந்த மக்களையும் குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் ஆய்வுகளில் ஈடுபட்டும்வருபவர் வறீதையா கான்ஸ்தந்தின். சுனாமிக்குப் பிறகு மீனவச் சமூகத்தில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களை, தொடரும் சிக்கல்களை, முன்னெடுக்கவேண்டிய மாற்றங்களை, சூழலியல் கவனத்துடன் அழுத்தமாக முன்வைக்கிறது இந்த நூல். இரண்டாம் உலகப் போரின்போது கடல் அடியில் போடப்பட்ட கண்ணிவெடிகளை அரித்தெடுக்கப் பயன்படுத்தப்பட்டது நார்வேயின் ‘இழுவை மடி’ தொழில்நுட்பம். அதை மீன்பிடித் தொழில்நுட்பம் என மீனவர்களின் கையில் கொடுத்த அரசின் மீது மீனவர்கள் எழுப்பும் கேள்விகள், கடல் வாழ்வில் இருப்பும் பிழைப்புமே பிரச்னையாகிவிட்ட நிலை என கோபமும் துயரமுமான கடல் மக்களின் குரலை உரக்கச் சொல்லும் நூல் இது. நாம் நிச்சயம் செவிசாய்க்கவேண்டிய குரல் இது!
சிறந்த கவிதைத் தொகுப்பு
திருச்சாழல் - கண்டராதித்தன்
புது எழுத்து பதிப்பகம்
நவீன வாழ்வின் அபத்தத் தருணங்களை, நம்பிக்கைகளை, அழகை கவிதைகளில் மிகையின்றி காட்சிப்படுத்துகின்றன கண்டராதித்தனின் கவிதைகள். திட்டமிடப்பட்ட மொழியோ வடிவமோ இன்றி விஷயத்தின் போக்குக்கு எழுதும் எளிமை, இவரது தனித்த அடையாளம். `எங்காவது கொடும்பாவி கட்டியிழுத்தால் கண்டிப்பாக உங்களை நினைப்பேன்!’ என கொந்தளிப்பான மனித உணர்வுகளை, எளிய வரிகளில் சிரமமின்றி நம் மீது கடத்துகிறார். காமம், குரூரம், கயமை போன்றவற்றோடு அன்பும் சுரக்கும் மனிதமனம் எவ்வளவு விசித்திரம்? இதை கண்டராதித்தனின் கவிதைகள் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. மிகக் குறைவாகவே எழுதும் இவரின் மூன்றாவது தொகுப்பு இது!
சிறந்த சிறுவர் இலக்கியம்
பந்தயக் குதிரைகள் - பாலு சத்யா
அம்ருதா பதிப்பகம்
பள்ளி விடுமுறையில் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு வரும் சிறுமி கீதா, தன் அண்ணன் மற்றும் நண்பர்களுடன் சென்னையின் முக்கிய இடங்களைக் காணச் செல்கிறாள். பயண வழியில் அண்ணன் காணாமல்போய் விடுகிறான். தனது புத்திசாலித்தனத்தாலும் முயற்சியாலும் அண்ணனைக் கண்டுபிடிக்கிறாள் கீதா. விடுமுறை முடிந்து வீட்டுக்குச் செல்லும் சிறுமி, அப்பாவின் வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகளால் சந்தேகம்கொண்டு ஒரு பிரச்னையில் இருந்து அப்பாவை மீட்கிறாள். இந்த இரண்டு சம்பவங்களில் அவள் சந்திக்கும் மனிதர்கள், சூழல்கள், பிரச்னைகள் என விறுவிறுப்பாக நகர்கிறது இந்தச் சிறுவர் நாவல். வழக்கத்துக்கு மாறான களம். மாறிவரும் உலகில் சிறுவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல்களுக்கு அவர்களைத் தயார்ப்படுத்தும் நாவல். அதேசமயம் சிறுவர் இலக்கியம் என்ற வகையில் எல்லை தாண்டாமல் அளவாக, அழகாக தன் பந்தயக் குதிரையைப் பாயவிடுகிறார் பாலு சத்யா!
சிறந்த நாவல் - மொழிபெயர்ப்பு
கசாக்கின் இதிகாசம் - ஓ.வி.விஜயன்
தமிழில்: யூமா வாசுகி
காலச்சுவடு பதிப்பகம்
மலையாள இலக்கியத்தில் நவீனத்துவத்தைத் தொடங்கிவைத்த நாவல் `கசாக்கின் இதிகாசம்'. கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் உள்ள வறண்ட கிராமம் கசாக். இஸ்லாமியர்களும் இந்துக்களும், தத்தமது பாரம்பர்ய நம்பிக்கைகளோடும் விநோதமான சடங்குகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தக் கிராமத்துக்கு, அரசால் அனுப்பப்படுகிறான் ஓர் இளம் ஆசிரியன். படிப்புவாசனை தயங்கித் தயங்கி நுழையும் அந்தக் கிராம மக்களின் விநோதமான நம்பிக்கைகள், சடங்குகள், வாழ்க்கைமுறை, அவர்களுக்கு இடையே ஏற்படும் பிணக்குகள் அனைத்துக்கும் சாட்சிபூதமாக இருக்கிறான் அவன். கதாபாத்திரங்கள், வெயிலில் அலையும் தும்பிகள் போல நாவல் எங்கும் உலவிக்கொண்டிருக்கிறார்கள். ஓ.வி.விஜயனின் தமிழ் கலந்த மலையாளத்தை, மொழிபெயர்ப்பில் மிக லாகவமாகக் கையாண்டிருக்கிறார் யூமா வாசுகி. இரு மொழிகள் கலந்த மொழிநடை, வாசிப்பவர்களை ஒரு புதிய அனுபவத்துக்குக் கொண்டுசெல்கிறது!
சிறந்த சிறுகதைத் தொகுப்பு - மொழிபெயர்ப்பு
எருது - தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்
எதிர் வெளியீடு
தமிழ்க் கதைப் பரப்புக்குள் அதிகம் அறியப்படாத 10 உலகச் சிறுகதையாளர்களின் கதைகளைக்கொண்டிருக்கிறது ‘எருது’. இந்த நூலின் வழி அமெரிக்க, பொலிவிய, எகிப்திய சிறுகதைப் பரப்பின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள், தமிழ் கதைவெளிக்கு அறிமுகமாவது முக்கியமானது. வாய்மொழிக் கதை வடிவில் நிகழும் ரைஸ் ஹ்யூக்ஸ் எழுதிய `கல்லறை சாட்சியம்’ முதல், வறுமையும் விரகதாபமும் கலந்து நிற்கும் யூசுப் இதிரிஸின் `சதையாலான வீடு', ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய செவ்வியல் தன்மைகொண்ட `கவிஞன்’ வரை, அத்தனை கதைகளும் உலகப் பண்பாடுகளின் கலைடாஸ்கோப்பாக விரிகின்றன. எளிய மொழிநடையில் கதைகளைத் தொகுத்து மொழிபெயர்த்த கார்த்திகைப் பாண்டியன் ஒரு கவிஞர் என்பதால், தன் மொழிபெயர்ப்பின் வழியே உலகின் புதுப்புது பண்பாட்டுச் சித்திரங்களை லாகவமாக வரைவதோடு, வாசகர்களையும் அதற்குள் இழுத்துக்கொண்டுபோகிறார்!
சிறந்த கட்டுரைத் தொகுப்பு - மொழிபெயர்ப்பு
தவிர்க்கப்பட்டவர்கள்:
இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள் - பாஷாசிங்
தமிழில்: விஜயசாய், விடியல் பதிப்பகம்
சுதந்திர இந்தியாவின் 68 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். மனிதக் கழிவை, இன்னும் மனிதர்கள் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். நாம் முகம் சுளிக்கிறோம். உண்மையாக நாம் நமது சாதிய உணர்ச்சிகளில் இருந்து எழும் துர்நாற்றத்துக்குத்தான் முகம் சுளிக்க வேண்டும். பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமாகிய பாஷாசிங், வெவ்வேறு அரசியல் சூழலும் கலாசாரமும்கொண்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குப் பயணித்து, மலம் அள்ளும் மனிதர்களைச் சந்தித்து அவர்களின் குரலை ஆவணப்படுத்தியிருக்கிறார். நாம் இதுவரை அறிந்திராத அருவருப்புகளில் கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் தங்களது உணவுக்காக உழன்றுகொண்டிருக்கிறார்கள். இந்தத் துர்நாற்றத்தில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ளப் போராடும் மக்களின் அவலத்துக்கும் நம்பிக்கையுணர்ச்சிக்கும் காகிதச் சாட்சியம் இந்தப் புத்தகம். மிகுந்த அரசியல் நுட்பம்மிக்க எழுத்தின் மொழிபெயர்ப்புக்கு உழைத்த விஜயசாய் பாராட்டுக்குரியவர்!
சிறந்த கவிதைத் தொகுப்பு - மொழிபெயர்ப்பு
உறைநிலைக்குக் கீழே
தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர், தமிழில்: சபரிநாதன்
கொம்பு பதிப்பகம்
நோபல் பரிசுபெற்ற, ஸ்வீடன் கவிஞர் தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமரின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் மொழிபெயர்ப்பு இந்த நூல். பொதுவாக இவரின் கவிதைகள், தோற்றத்தில் மிகவும் எளிமையானவை. சிக்கலான படிமங்களோ, பூடகமான சொற்பிரயோகங்களோ ஏதுமற்ற பளிங்கு நீரைப் போன்றவை. மூல மொழியான ஸ்வீடிஷில், `சற்றே இசைத்தன்மை கொண்டவை' எனச் சொல்லப்படுபவை. இவரின் மெலிதான கதை சொல்லல் பாணி கவிதை முதல், தீவிர தத்துவ விசாரம் நிரம்பிய கவிதைகள் வரை பலதரப்பட்ட வகைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. தமிழில், இளம் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவரான சபரிநாதன், ட்ரான்ஸ்ட்ரோமருடைய கவிதைகளின் ஆன்மா சிதையாமல் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்!
சிறந்த சிறுவர் இலக்கியம் - மொழிபெயர்ப்பு
மாத்தன் மண்புழுவின் வழக்கு - பேராசிரியர் எஸ்.சிவதாஸ், தமிழில் - யூமா வாசுகி
புக்ஸ் ஃபார் சில்ரன்
`அன்புடையீர்.. எனக்கு வயதாகிவிட்டது. இத்தனை வருடங்கள் நிலத்தை உழுது களைத்துவிட்டேன். எனக்கு ஓய்வூதியம் கொடுங்கள்’ என ஒரு விவசாயி கேட்டால் நியாயம் இருக்கிறது. ஒரு மண்புழு கேட்டால்? `மாத்தன்’ என்ற மண்புழு இப்படியான ஒரு கோரிக்கையுடன் நீதிமன்றத்தை நாடுகிறது. அது, எப்படி எல்லாம் விவசாயிகளுக்கு உதவுகிறது, மண்புழுக்கள் விவசாயத்துக்கு எவ்வளவு அவசியம் என்பது எல்லாம் மாத்தனின் வாதத்தில் விவரிக்கப்படுகிறது. கூடவே இயற்கை வேளாண்மை, இயற்கையின் முக்கியத்துவம், விவசாய நிலத்தைப் பாழ்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் என பல உண்மைகள் சிறுவர்களுக்குப் புரியும்விதத்தில் கதையோடு கதையாகச் சொல்லப்படுகின்றன. எஸ்.சிவதாஸின் தேர்ந்த கதை சொல்லலை, எளிய தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் யூமா வாசுகி. இயற்கையின் இயங்கியலை, இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்துவைக்க மிகச் சிறந்த நூல்!
சிறந்த சிற்றிதழ்
புது விசை
ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல், கலை, பண்பாட்டை உலகளாவிய தளத்தில் பேசும் கலாசாரக் காலாண்டிதழ் `புது விசை'. சமீபமாக இந்தியாவுக்குள் கடும்நோயாகப் பரவிவரும் சகிப்பின்மை, சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து உரத்துப் பேசும் தலையங்கங்களில் இருந்தே ஆரம்பமாகிவிடுகிறது `புது விசை’யின் வீச்சான அரசியல். எரியும் பிரச்னைகளை கவிதைகளாக, கட்டுரைகளாகப் பேசுவதும், நடப்பு அரசியலை இடதுசாரிக் கண்ணோட்டத்தோடு அணுகுவதுமே `புது விசை’யின் தனித்தன்மை. இந்த இதழில் வெளியாகி இருக்கும் லத்தீன் அமெரிக்காவின் முக்கிய இசைக் கலைஞரான விக்டர் ஹாரா குறித்த கட்டுரை முக்கியமான பதிவு. உள்ளடக்கத்தில் மாற்றுச் சிந்தனை, இதழ் வடிவமைப்பில் எளிமை, எளியவர்களின் உரிமைகள் மீது காட்டும் அக்கறை, பாசிசக் கருத்துக்கள் மீதான எதிர்வினை போன்றவை `புது விசை’யை முக்கிய இதழாக முன்னிறுத்துகின்றன.
சிறந்த விளையாட்டு வீரர்
ரவிச்சந்திரன் அஷ்வின்
கிரிக்கெட்
அஷ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது பொற்காலம். ஐ.சி.சி ரேங்கிங்கில் உலகின் நம்பர் 1 பந்து வீச்சாளராக, நம்பர் 1 ஆல்ரவுண்டராக இடம்பிடித்திருக்கும் முதல் தமிழன். 42 வருடங்களுக்குப் பிறகு சிறந்த ஆல்ரவுண்டராக முதல் இடம் பிடித்திருக்கும் இந்தியன். 2015-ம் ஆண்டு விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் எடுத்த விக்கெட்டுகள் மொத்தம் 62. டெஸ்ட், ஒரு நாள், 20-20 என கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மேட்டிலும் இப்போது இந்தியாவின் சிறந்த வீரர் அஷ்வின். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் அஷ்வின் காட்டிய வேகம்தான், அவரை இந்திய அணிக்குள் அழைத்துச் சென்றது. பேட்ஸ்மேன்களைக் கண்டு பயம்கொள்ளாமல் பந்து வீசும் துணிச்சல், கையாளும் புதுப்புது உத்திகள், ஆட்டத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப பந்து வீசும் திறன்... இவையே அஷ்வினை உச்சம் தொட வைத்திருக்கின்றன. வெல்டன் அஷ்வின்!
சிறந்த விளையாட்டு வீராங்கனை
எம்.மகாலட்சுமி - செஸ்
சதுரங்கத் தமிழச்சி. 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த மகாலட்சுமிக்கு
வயது 17. ‘மகாலட்சுமி செஸ் ஆடும் விதம் என்னை வியக்கவைக்கிறது. செஸ் விளையாட்டில் எனது வாரிசு என இவரைச் சொல்லலாம்’ - ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்தின் பாராட்டு இது. ஏழு வயதில் இந்திய ஜூனியர் சாம்பியன் ஆன மகாலட்சுமியின் கிராஃப் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வேலை அப்பாவுக்கு. மூன்று சகோதரிகள். எளிய குடும்பத்தில் சகோதரிகளுடன் பொழுதுபோக்காகத் தொடங்கிய செஸ் விளையாட்டு, மகாலட்சுமியை சர்வதேச அரங்குகளில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. ப்ளஸ் டூ மாணவியான மகாலட்சுமிக்கு, சீனியர் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதே லட்சியம். வாழ்க... வளர்க... வெல்க!
சிறந்த பயிற்சியாளர்
ஸ்ரீதரன்ஸ்ரீராம்
கிரிக்கெட்
முன்னாள் இந்திய, தமிழக கிரிக்கெட் வீரரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் 20-20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். வழக்கமாக ஆஸ்திரேலிய வீரர்களைத்தான், உலக நாடுகள் தங்கள் பயிற்சியாளர்களாக நியமிக்கும். முதல்முறையாக இந்திய வீரர் ஒருவரை ஆஸ்திரேலிய நிர்வாகம் தங்கள் அணிக்கு ஆலோசகராக நியமித்திருக்கிறது. 39 வயதான ஸ்ரீராம், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் 32 சதங்களும் 36 அரை சதங்களும் அடித்தவர். ஆனால் அப்போது நிலவிய அரசியலால் இந்திய அணியில் இவருக்குச் சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை. சென்னையில் `கிரிக்கெட் ட்ரோம்' பயிற்சி மையத்தின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று, பல இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிவரும் ஸ்ரீராமை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடையாளம் கண்டு அங்கீகரித்திருப்பது தமிழனுக்குப் பெருமை!
சிறந்த விளம்பரம்
மோக்கா...மோக்கா...
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் பபுள்ராப் ஃபிலிம்ஸ்
2015-ம் ஆண்டின் வைரல் விளம்பரம் மோக்கா மோக்கா. `இந்தியாவை, உலகக் கோப்பையில் இந்த முறையேனும் பாகிஸ்தான் தோற்கடிக்குமா?’ என, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பட்டாசுகளுடன் காத்திருப்பது போன்ற விளம்பரம் உலகக்கோப்பை ஃபீவரை எகிறவைத்தது. விளம்பரத்துக்கான `பளிச்’ ஐடியா பிடித்தவர் கேட்டகி என்கிற பெண். இவர் நடத்திவரும் `பபுள்ராப்’ எனும் நிறுவனம்தான் இந்த விளம்பரத்தைத் தயாரித்தது. சுரேஷ் திரிவேணி, விளம்பரத்தின் இயக்குநர். இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்காகத் தயாரிக்கப்பட்ட விளம்பரம், அரை இறுதி வரை வெவ்வேறு கிரியேட்டிவ் ஐடியாக்களுடன் தொடர்ந்தது. 2015-ம் ஆண்டில் இந்தியாவை `மோக்கா மோக்கா' என முணுமுணுக்க வைத்த பெருமை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் பபுள்ராப் நிறுவனங்களையே சேரும்!
சிறந்த கார்
க்விட் ரெனோ
பட்ஜெட் கார்களில் மார்க்கெட் லீடராக தனி ஆட்சி நடத்திய மாருதி ஆல்ட்டோ 800 காருக்குப் போட்டியாகக் களமிறங்கி, மார்க்கெட் ஷேரைப் பிரித்த கார் ரெனோ க்விட். 800சிசி கார்களில் ஒரு எஸ்யூவி ஸ்டைலில் ஸ்டைலிஷ் என்ட்ரி கொடுத்திருக்கிறது க்விட். பட்ஜெட் கார் என்றாலே காருக்குள் எந்த வசதியும் இருக்காது என்பதுதான் இவ்வளவு காலமும் இருந்த வரையறை. ஆனால் டச் ஸ்கிரீன், ஜிபிஎஸ் வசதி, 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கி எனப் பெரிய கார்களுக்கே டஃப் ஃபைட் கொடுத்திருக்கிறது க்விட். 5 பேர் தாராளமாக உட்கார்ந்து பயணம் செய்யலாம் என்பதோடு, ரெனோவின் புதிய 800சிசி இன்ஜின் மைலேஜிலும் கில்லி. `3 - 5 லட்சத்துக்குள், தரமான கார் வேண்டும் என்றால் ரெனோ க்விட் நல்ல சாய்ஸ்' எனச் சொல்லும் அளவுக்கு, பட்ஜெட் கார்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றதில் வெற்றிபெற்றிருக்கிறது க்விட்!
சிறந்த பைக்
ஜிக்ஸர் SF
சுஸூகி
மார்க்கெட்டில் செம ஹிட் அடித்த ஒரு பைக்கை அடிப்படையாகக்கொண்டு புதிய மாடலைக் களமிறக்கும் போது, பழைய மாடலுக்கும் இதற்குமான ஒப்பீடுகள் தானாகவே ஆரம்பிக்கும். ‘இதுக்கு பழைய மாடலே பரவாயில்லை' என விமர்சனங்கள் எழும். ஆனால், பழைய பைக்கைவிட டிசைனிலும் பெர்ஃபாமென்ஸிலும் முன்னேறி, சுஸூகியின் விற்பனையை பல மடங்கு உயர்த்தியிருக்கும் பைக், சுஸூகி ஜிக்ஸர் SF. சுஸூகியின் நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான ஜிக்ஸரில், ஃபுல் ஃபேரிங் சேர்க்கப்பட்டு உருவான பைக்தான் ஜிக்ஸர் SF. கூடுதல் பாகங்கள் பயன்படுத்தப்படுவதால், பைக்கின் விலை மற்றும் எடை கட்டாயம் அதிகமாகும். இதனால் பைக்கின் செயல்திறன் பாதிக்கும். இருப்பினும், தரமான இன்ஜினீயரிங் மூலம் சிக்ஸர் அடித்திருக்கிறது சுஸூகி ஜிக்ஸர். 2015-ம் ஆண்டில் 1 லட்சம் ரூபாய்க்குள் விற்பனைக்கு வந்த இந்த மினி ஸ்போர்ட்ஸ் பைக், பல லட்சம் இளைஞர்களின் கனவு பைக்!