காணாமல் போனோர் விவகாரம் - கூட்டமைப்பின் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக எச்சரிக்கை
காணாமல் போனவர்கள் பற்றி தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகைட்டு போராட் டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியா மாவட்ட காணாமல் போன உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கம் அறிவித்துள்ளது.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தி, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக குறித்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை செய்து முடிவை அறிவிப்பதாக கூறி தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தவர்கள், வாக்குகளை பெற்றுக்கொண்டு அதன் பின்னர் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லையென காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின், வவுனியா மாவட்ட தலைவி ஜெயவனிதா காசிப்பிள்ளை குற்றஞ்சாட்டியுள்ளார்.
காணாமல் போனவர்கள் முற்றுழுழுதாக இறந்திருக்கலாமென அண்மையில் யாழ் தேசிய பொங்கல் விழாவில் பிரதமர் ரணில் தெரிவித்த கருத்து, அன்றைய பொங்கல் விழாவில் கலந்துகொண்ட உறவுகள் மனதில் கனத்த வேதனையை ஏற்படுத்தியதாக குறிப்பிட்ட அவர், தமது உறவுகளின் உண்மையான நிலைப்பாட்டை அறியும் நோக்கில் இந்த முற்றுகை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதற்கு அனைத்து அமைப்புகளும் ஆதரவு வழங்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.








