உறவுகளுக்கு உயிர் கொடுத்த மாமா? -மெய்யன் நடராஜ்
புதுக்கோட்டையிலிருந்து புறப்பட்டு ஆலங்குடி வழியே மறமடக்கி செல்லும் பேரூந்திலிருந்து வன்னியர்விடுதி சந்தியில் இறங்கியபோது திருச்சி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது சிறு மானை வேட்டையாட சூழும் சிங்கங்களாய் சூழ்ந்த வாடகை வாகனகாரர்களின் தொந்தரவின்றி அமைதியாய் இருந்தது.
மனதும் சூழலும் நான் பிறந்து வளர்ந்திருக்க வேண்டிய மண். சந்தர்ப்ப சூழ்நிலை என்னை கடல் தாண்டி பிறக்க வைத்து விட்டதால் தாய், தந்தை, பிறந்து வளர்ந்த ஊரை பார்த்துவிட்டு வர, பயணித்த என்னை தென்றல் வீசி வரவேற்றது. இயற்கை கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் நீண்டு உயர்ந்த மரங்களின் வனப்பு இதயத்தைக் கொள்ளைகொண்டது. இறங்கிய இடம் கிராமத்தின் நுழைவாயில் என்பதை பிரதான வீதியில் இருந்து பிரிந்த சிறு வீதி அறிமுகப்படுத்தியது.
இலங்கை கிராமப்புறங்களை ஒத்ததாக ஒரு பெட்டிக்கடை அறமுகமில்லாத ஒரு சில மனிதர்கள் சுற்றுவட்டத்தின் ரசனையில் மூழ்கியிருந்த என்னை 'வாங்கப்பா போவோம்' என்னும் மாமாவின் குரல் திசை திருப்பியது. அந்த மாமாவுக்கு எண்பதைத்தாண்டிய வயது. இலங்கை பெருந்தோட்டங்களில் பணிபுரியவென்று சென்றிருந்தவர்களை மீள இந்தியாவுக்கு எடுத்துக்கொண்ட போது அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குடும்பத்தோடு தமிழகம் வந்தவர்.
இன்னும் மாமாவின் சகோதரர்கள் மற்றும் உறவுக்காரர்களாகிய நாங்களும் இலங்கையில் இருக்க மாமா மட்டும் தமிழகம் வந்து குடியேறிவிட்டது இப்போதைக்கு பெரும் உதவியாக இருந்தது. மாமாவிற்குத்தான் இலங்கையிலும் தமிழகத்திலும் உள்ள உறவுகளின் வரலாறுகள் ஒரு மடிக் கணினியைபோல் ஞாபகத்தில் இருக்கிறது என்றால் அது மிகை இல்லை. மாமாவின் தொடர்பு மாத்திரம் இல்லாமல், இருக்குமானால் இந்த ஊரை கண்டு பிடிப்பதே எனக்கு பெரும்பாடாய் இருந்திருக்கும்.
விமான நிலையத்திலிருந்து முதல் நாள் அழைத்து வந்ததிலிருந்து இலங்கையில் இருக்கும் உறவுகள் ஒவ்வொருவரையும் ஞாபகமூட்டி நலம் விசாரித்து அவர்களுடன் வாழ்ந்த நாட்களின் பசுமையான நாட்களை நினைவுபடுத்தி மகிழ்ந்து கொண்டார் மாமா, பலர் மறைந்து போயிருந்தாலும் அவர்களின் வாரிசுகள் பற்றிக் கேட்டு தெரிந்து ஆனந்தப்பட்டார். கூட வந்திருந்த அண்ணன் மகனையும் அழைத்துக்கொண்டு மாமாவுடன் போவதற்கு ஆயத்தமானேன். ஒரு முக்கால் மைல் தூரம் நடக்கணும் என்றவரிடம் 'வாகனம் ஒன்றும் வராதா' என்று கேட்டேன் நான்,
'வரும் அது எப்போ வரும் என்று தெரியாது. கொஞ்சம் தூரம்தான் நடந்தே போயிடுவோம். நானே நடக்கிறேன் உங்களுக்கு முடியாதா' என்ற அவரின் உற்சாகம் எங்களையும் பற்றிக் கொள்ள பயணப் பொதிகளை சுமந்துகொண்டு அவரின் பின்னால் நடந்தோம்.
எழுத்துக்களை மிகத்தெளிவாய் மூக்குக் கண்ணாடி இல்லாமல் வாசிக்கும் அவருக்கு தூரத்துப்பார்வையில் சற்று கோளாறு. சட்டைப் பையில் இருந்த கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டவர் வெள்ளைச் சட்டையும் கைலியோடும் மிடுக்காய் நடந்தார்.
இந்த வயதிலும் சுறுசுறுப்பாய் இயங்கிய அவரின் நடையையும் பாதையின் இரு மருங்கிலும் செழிப்பாய் வளர்ந்திருந்த கரும்பு, சோளம், நெல், பயறு மற்றும் உபபயிர் வகைகள் அனைத்தையும் கண்டு மகிழ்ந்த நடையில் ஒரு பத்து நிமிடத்தில் அந்த ஊரின் மாரியம்மன் கோயில் வந்து விட்டது. கோயிலுக்கு முன்பாக முற்காலத்தில் கட்டப்பட்ட குளம் ஒன்று தண்ணீர் இன்றி தாகத்தோடு இருந்தது.
மூடியிருந்த கோயிலின் உட்புறத்தை தரிசிக்கும் நேரம் அதுவல்ல என்பதால் கையெடுத்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு நடந்த அடுத்த சில நிமிடத்தில் எனது தாய் - தந்தை வாழ்ந்த அந்த இடம் வந்துவிட்டது என்று மாமா சொல்ல மகிழ்ச்சியில் மண்ணைத்தொட்டு வணங்கினேன்.
பச்சை நெல்வயல், வகை வகையான மரங்கள், ஆங்காங்கே ஒருசில வேப்ப மரங்கள், நடுவே ஒரு சிறு கூட்டுத்தொகுதி வீடுகள், பார்ப்பதற்கே மனதுக்கு இதமாக இருந்தது. இப்படியோர் இடத்தை விட்டு விட்டு சென்ற நூற்றாண்டில் எதற்காக தந்தை கப்பல் மூலம் இலங்கைக்குப் போனார் என்று எனக்குள் கேட்டுக்கொண்டிருக்கும் போது மாமா அங்கிருந்த ஒரு வீட்டுக்குக் கூட்டிப்போனார்.
அங்கே ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் என முற்றிலும் புதிய முகங்கள் மாமாவை அடையாளம் கண்டு கொண்டவர்கள் 'வாங்க வாங்க' என்று மகிழ்ச்சிப்பொங்க வரவேற்று கூடவே புதுமுகங்களான எங்களை யாரென்று தெரியாத தடுமாற்றத்தோடு வீட்டுக்குள் அழைத்துச் சென்று நாற்காலி போட்டார்கள்.
சற்று நேரத்தில் மாமா எங்களை அறிமுகப்படுத்தினார். ஆனால் அங்கியிருந்த யாரும் எங்களை அவ்வளவு எளிதாய் யூகித்து அடையாளம் கண்டு கொள்ளவில்லை.இருந்தும் மனம் தளரா மாமா மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த எங்கள் முன்னோரின் வழித்தோன்றல்கள்தான் நாமெல்லாம் என்று தனது மனக்கணனியைத் தட்டி எங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவுகள் பற்றி விளக்கிக் காட்டியபோது நாங்களும் அவர்களும் மாமன் மச்சான் உறவுமுறை என்பது புலனானது. என்றாலும் திருப்தியடையாத அவர்கள் சரி அது கிடக்கட்டும். 'இப்போ எதற்கு வந்திருக்கிறார்கள்' என கேட்டார்கள். என்னடா இப்படிக் கேட்கிற இது இவரோட அப்பா அம்மா வாழ்ந்த பூமி பார்த்துட்டு போகலாமுன்னுதான் வந்திருக்காங்க. 'சரி சரி' என்றவர்கள் வழமையான உபசரிப்புகளுடன் எங்களுடன் கைகோர்த்துக் கொண்டதில் மகிழ்ச்சியாய் இருந்தது.
சில நிமிடங்களிற்குப்பின் வீட்டுக்கு வெளியே வந்து குலதெய்வ கோயில் என்று அவர்கள் கூட்டிச்சென்ற ஆலமரத்தடியில் பிரார்த்தனை செய்தோம்.அங்கிருந்து ஒரு சில யார் தூரத்தில் இருந்த ஒரு மரத்தைக்காட்டினார் மாமா. அது ஒரு வேப்பமரம் அந்த வேப்பமரத்தடியில் முன்பு ஒரு வீடு இருந்ததாம்.
அந்த வீடு இப்போது அங்கில்லை. அந்த வீடுதான் என் அப்பா பிறந்து வளர்ந்த வீடாம். இப்போது அந்த நிலமே வேறு ஒருவருக்குச் சொந்தமாகிப்போயிருப்பதால் தூர தரிசனம் செய்து கொண்டோம்.
மாமாவின் வயதொத்த அப்பா இப்போது உயிரோடு இருந்திருந்தால் அவருடைய ஊருக்கு வந்தததை எண்ணி எவ்வளவு சந்தோஷப்படுவார் என்று என் மனது ஒரு கணம் எண்ணிப்பார்த்தது.ஆனால் அந்த சந்தோஷம் அவர் நான் சிறுவயதாய் இருக்கும் போதே மறைந்து போன நினைவைக் கூட்டிவர நீர்க்குமிழிபோல் உடைந்துபோனது அவர் நினைவுகள்.
'என்ன தம்பி யோசனை உங்க அப்பா மட்டும் இலங்கைக்கு போகாமல் இருந்திருந்தால் அந்த வீடு பூமியெல்லாம் இப்போது உங்களுக்கு சொந்தமாக இருக்கும். அதெல்லாம் பழைய கதை உங்களுக்குத்தெரியாது' என்று கூறி அந்த காலத்து ஞாபகங்களை மீட்க தொடங்கினார்.
பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அவரே அதை நிறுத்திக் கொண்டு இன்னும் முக்கியமான ஒருத்தரை பார்க்க வேண்டும் என்று கூறிக்கொண்டே காலம் கடத்தாமல் ஒரு நூறு மீற்றர் தூரத்தில் இருந்த வேறொரு வீட்டுக்கு எங்களை அழைத்துக்கொண்டு போனார்.
அது ஒரு சாதாரண வீடு வீட்டின் முன்வாசலில் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் ஒரு முதியவர் உட்கார்ந்திருந்தார். மாமாவைவிட சற்று வயதில் குறைந்தவர் என்றாலும் உடல் தளர்ந்தவராய் காணப்பட்டார்.
'வேலாயுதம் நான் கந்தசாமி. என்னப்பா இப்படி வெளியே உட்கார்ந்திருக்க கேட்டவர், பதிலுக்கு காத்திராமல் ஒரு முக்கியமான விருந்தாளியைக்கூட்டி வந்திருக்கிறேன் என்றார். அவரும் எங்களை பார்த்தார்.நாங்கள் நமஸ்காரம் செய்தோம். புரியாத அவரோ 'யாரு யாரப்பா இவுங்க எல்லாம்' 'நமக்கு வேண்டியவுகத்தான்.
சொன்னா சந்தோஷப்படுவே சரி சரி வா உள்ளே போய் பேசுவோம்'. நால்வரும் உள்ளே சென்றோம்.அதற்குள் எங்கள் வருகையை அறிந்த குடும்பத்தவர்கள் எல்லோரும் கூடிவிட மாமா என் அப்பா பெயரைச் சொல்லி அவரோட பிள்ளையும் பேரனும் தான் இவங்க என்று சொல்ல இதை நீ முதலிலேயே சொல்ல வேண்டாமா என்று செல்லமாய் கோபித்த அந்த முதியவர் சட்டென்று எங்களை அருகில் வரும்படி அழைத்துக்கூட்டிக்கொண்டு ஆனந்தம் சொரிந்தார்.
அதன் பின்பு அவர் அவருடைய குடும்பத்தாருக்கு எங்களை யாரென்று தெரிவித்தப்போதே எனது சின்ன வயதில் எங்கள் வீட்டில் இந்தியாவில் இருக்கும் மூக்கையா மாமா என்று அவ்வப்போது பேசக்கேட்ட அந்த சொந்த மாமா இவரென்று புரிந்தது.
பல தசாப்தங்களுக்குப் பிறகு விட்டுப்பிரிந்த உறவுகள் மீண்டும் தொடர்கதையாவதற்கு சுழிபோட்ட எங்கள் தமிழக விஜயம் கால அவகாசம் காரணமாய் சாவகாசமாய் இருந்து விருந்துண்டு திரும்பும் அளவிற்கு போதுமானதாக இல்லாமல் இருந்தது. வந்ததற்காக வெறும் தேநீர் அருந்திவிட்டு அவசரமாக புறப்படும் எங்களை இதற்கு நீங்கள் வராமலேயே இருந்திருக்கலாம் என்று அவர்கள் எல்லோரும் கண்களால் பகர்வதை அவர்களின் கண்ணீர்த் துளிகள் பறைசாற்றின.
அவர்கள் எல்லோரைப் பார்க்கிலும் மூக்கையா மாமாவிற்குத்தான் மிகவும் வேதனை. இத்தனைக்காலத்துக்குக் பிறகு வந்த உங்களை கண்ணாரப்பார்ப்பதற்குத்தான் எனக்கு கொடுத்து வைக்கல என்று கண்கலங்கினார்.
'அட நீ ஒன்னு, இதுக்குப் போய் கண்கலன்குற. இனி அடிக்கடி வருவாங்க, உன்னோட தங்கச்சி பிள்ளைங்க எல்லாம் வர ஆசையோடு இருக்காங்களாம். இவுங்க போய் தகவல் சொன்னதும் உன்னை வந்து பார்த்துவிட்டு போவாங்க நீ கவலைப்படாதே', என்று ஆறுதல்படுத்தினார்.
எங்களைக் கூட்டி வந்த மாமா அதுக்கு 'இல்லே கந்தசாமி' மறுபடியும் கவலை தொனித்த அவரின் குரலை இடைமறித்து 'இப்போ என்ன நீ இவங்கள கண்ணால பார்க்கணும் அவ்வளவுதானே' பதிலுக்குக் காத்திராமல் தன்னுடைய மூக்குக் கண்ணாடியை எடுத்துத் துடைத்து அவரின் கண்களில் மாட்டினார்.
'டேய் கந்தசாமி எனக்கு உன்னோட கண்ணாடியிலே பார்வை நல்லா தெரியுதடா என்றவாறே என்னைப் பார்த்தார். எங்க மச்சான் மாதிரியே இருக்கீங்க. இரண்டு பேரும் கொஞ்சம் கூட மாற்றமில்ல, கந்தசாமி உன்னோட கண்ணாடியாலே நான் மச்சானையே பார்த்துட்டேன்டா' என்று மறுபடியும் கட்டித்தழுவிக்கொண்டார்.
பார்வை குறைந்தவர்களுக்கு மூக்குக் கண்ணாடி என்பது இரண்டாவது கண் அல்லது தெய்வம் என்பதை இந்த மாமா அந்த மாமாவின் கண்ணாடியை அணிந்தபோது தோன்றிய பரவசத்தை கண்டு உணர்ந்தேன். சரி சரி நேரம் போகுது வண்டிய விட்டிட கூடாது.
புறப்பட ஆயத்தமானபோது அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றித்தருவதற்கு முயற்சித்தார் மூக்கையா மாமா. 'உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு இதை நீயே வச்சுக்கோ நான் வேறொன்று வாங்கிறேன்.' அவரிடம் கொடுத்துவிட்டு எங்களை அழைத்துக்கொண்டு வந்து விட்டார். மாமாவின் இந்த செயல் என்னை வெகுவாய் பாதித்தது.
திரும்பி வரும் வழியில் மாமா சற்றுத்தட்டுத்தடுமாறியே நடந்தார். அதற்கான காரணம் அவரின் கண்ணாடியே என்பது எங்களுக்கு தெளிவாக விளங்கியது.தனக்கே கண் பார்வை குறைவாய் இருக்கும்போது அவருக்கு தன்னுடைய கண்ணாடியை கொடுத்து உதவவேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது என்றக் கேள்வி என் மனதைக் குடைந்தது என்றாலும் அவரிடம் கேட்கவில்லை.நாங்கள் எதுவும் கேட்காமல் நடந்தது மாமாவின் மனதைக் குடைந்ததோ என்னவோ பாதணிகள் மட்டும் பேசிக்கொண்டு வந்த அந்த சாலையில் உதடுகள் பிரிந்து மாமா பேசினார்.
'பாவம்பா அவன் ரொம்ப நல்லா இருந்தான். எல்லாம் பெண் பிள்ளைகளாய் போனதால அதுகளை கரைசேர்க்க ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டான். எனையாவது பார்த்துக்க புள்ள பேரன் பேத்திங்க எல்லாம் இருக்காங்க. ஆனால் அவனுக்கு எல்லாம் இருந்தும் ஒருத்தரும் இல்லாதவனாய் இருக்கான். நான் கஷ்டப்பட்டக் காலத்திலேயே கைகொடுத்தவனுக்கு இந்த கண்ணாடி ஒன்னும் பெரிசில்ல. அதான் கொடுத்துட்டு வந்தேன்.
இல்லாத நேரத்தில தன்னைப்போல் இல்லாத ஒருத்தர்கிட்ட இருந்து கிடைக்கிற உதவி என்பது வெறும் பணத்தால் ஈடுகட்ட முடியாதது.' பேசிய மாமாவின் வார்த்தைகளின் உருக்கம் நெஞ்சில் பசைபோட்டு ஒட்டிக்கொண்டது.
அன்றே செய்ததை அன்றே மறக்கும் இன்றைய உலகில் என்றோ செய்ததை இன்றளவும் மறக்காதது மாமாவின் மனசு.








