Breaking News

மாவட்ட இணைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார் ஜனாதிபதி (படங்கள் இணைப்பு)

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இரகசியமாக மேற்கொள்ளப்படும் விடயமல்லவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற மாவட்ட இணைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கிவைக்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், ‘நாம் நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டுமே தவிர தனிப்பட்டவர்களின் எதிர்காலம் குறித்து அல்ல. தற்போது நாட்டின் எதிர்காலம் கருதி அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

மக்களின் ஒரே எதிர்பார்ப்பான புதிய அரசியலமைப்பு தயாரிப்பு விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதோடு அது குறித்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை.

எனினும், இதனை அடிப்படையாகக் கொண்டு சிலர் பொய்யான கருத்துக்களை பரப்புவதோடு, இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்கின்றனர். அரசியலமைப்பு மாற்றம் என்பது மக்களுக்கு தெரியாமல் ஒரு போதும் மேற்கொள்ளப்பட மாட்டாது.

அத்துடன், வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் அபிவிருத்திக்காக இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்துகொண்டுள்ள நிலையில், இவர்கள் மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகளில் பங்காளர்கள் போன்று செயற்பட வேண்டும்’ என குறிப்பிட்டார்.