புலம்பெயர் தமிழருக்கு ஓர் எச்சரிக்கை! (காணொளி இணைப்பு)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகளைப் பேணியவர்கள் இலங்கைக்கு திரும்பிச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மைத்திரி - ரணில் நிர்வாகத்தின் கீழும், வெள்ளைவான் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் சித்திரவதைகள் தொடர்வதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் மூவர் அடங்கிய நிபுணர் குழுவின் உறுப்பினராக கடமையாற்றிய தென்னாபிரிக்க மனித உரிமைச் சட்ட நிபுணர் யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச நீதிக்கும், உண்மைக்குமான திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடையும் நிலையிலும் அரச படையினரால் மேற்கொள்ளப்படும் வெள்ளைவான் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் இன்னமும் தொடர்வதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டவர்கள் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால் அவர்கள் இவ்வாறான சித்திரவதைகளுக்கு ஆளாகலாம் என்று அந்த அமைப்பின் ஆய்வாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹெரிசன் புலம்பெயர் தமிழ் ஊடகமொன்று வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் சிலவற்றையும் radiogagana என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது.