Breaking News

வடக்கு முதல்வரின் பிரதிநிதியாக சிவா பசுபதி

தமிழ் மக்கள் பேரவையால் நியமிக்கப்பட்டுள்ள உபகுழுவில் முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி உள்வாங்கப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்த விடயங்களை உள்வாங்குதல் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த யோசனைகளை முன்வைப்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள குறித்த உபகுழுவில் அங்கம் வகிப்பதற்கென, பேரவையின் உறுப்பினர்களால் இவர் அழைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து கொழும்பு வந்து நேற்று யாழ் சென்றுள்ளார்.

குறிப்பாக இவர் பேரவையின் இணைத்தலைவரும், வடக்கு முதல்வருமான சி.வி.விக்னேஸ்வரனின் இணைத் தலைவராக செயற்படுவாரென தெரிவிக்கப்படுகிறது.

1980களில் இலங்கையில் சட்டமா அதிபராக பணியாற்றிய சிவா பசுபதி, பின்னர் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பினை இவர் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.