புதிய அரசியலமைப்பு தொடர்பில் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை
புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பில் விரைவில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக, அண்மையில் முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி 9ம் திகதிக்குப் பின்னர் புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், ஏனைய அரசியல் கட்சிகளால் வழங்கப்படும் கருத்துக்கள் மற்றும் யோசனைகளையும் அரசியலமைப்பில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விஷேடமாக தற்போது தேசிய அரசாங்கத்தில் பங்கேற்றுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதோடு, முஸ்லிம் காங்கிரசுடன் இரண்டாவது தடவையாகவும் பேசவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும் இந்தக் கலந்துரையாடல்களின் நோக்கம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.








