தமிழ்ப் பேரவையில் உள்ளவர்களை விமர்சிப்பது விசமத்தனம்!
மேடைக்கு மேடை அபிவிருத்தியை விட உரிமைகளை பற்றியே அதிகம் முழங்கிவிட்டு, இன்று மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் பதவிக்கு போட்டி போடுகின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இதன்மூலம் தமிழ் மக்களுக்கு என்ன செய்யப் போகின்றார்கள் என்று தனக்கு தெரியவில்லை எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியோருடன் சேர்ந்து ஒரு கதிரையில் முன்னால் இருந்து என்ன மக்களுக்கு செய்யப் போகின்றார்கள் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று தமிழ் மக்கள் பேரவையில் உள்ளவர்களை விமர்சிப்பது ஒரு அப்பட்டமான விசமத்தனமான பிரச்சாரம் எனக் குறிப்பிட்ட அவர்,
தமிழ் மக்கள் பேரவையில் உள்ள சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ மத தலைவர்களோ தேர்தலில் போட்டியிட்டவர்கள் அல்ல எனவும் அங்கு புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி இருப்பதாகவும், எனவே இது ஒரு போலித்தனமான பிரச்சாரம் எனவும் கூறினார்.கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனும் இதனைதான் சொல்கின்றார். அவரும் மூன்று தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் எனக் குறிப்பிட்ட அவர், சரியான வழியில் சில விடயங்கள் நடக்கிறது என்பதால் அவர்கள் அச்சப்படுகின்றார்கள் எனச் சுட்டிக்காட்டினார்.
இது அச்சப்படுவதற்குரிய விடயம் அல்ல எனவும் தமிழ் மக்கள் பேரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து இயங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.இதுவொரு அரசியல் கட்சி அல்லவெனவும் தமிழ் மக்கள் பேரவை ஒரு இயக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.








