பொங்கலை புறக்கணியுங்கள் - தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை
தமிழர்களின் பாரம்பரிய தைப்பொங்கல் பண்டிகையைப் புறக்கணித்து தமது விடுதலைக்கான அழுத்தத்தை கொடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழக்கு விசாரணைக்காக நேற்று(திங்கட்கிழமை) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
நேற்று புதிதாக மூன்று கைதிகள் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பங்கரவாத தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை சமர்ப்பிக்கப்படாத நிலையில் அரசியல் கைதிகளை இம்மாதம் 13 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.








