ஐ.எஸ்.அமைப்பில் இலங்கையர்கள் - புலனாய்வு தகவலுக்கு அமைய விசாரணை
இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் நபர்கள் 36 பேர் ஐ.எஸ். அமைப்பில் சென்று இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் விவகாரம் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு அமைய சரியான வகை யில் விசாரணைகளை முன்னெடுப்போம்.
எவ்வாறு இருப்பினும் உறுதியான வகையில் இந்த தகவல்கள் கிடைக்காத நிலையில் அவை தொடர்பில் ஆராய்ந்தே தீர்மானம் எடுக்க முடியும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்த்தன தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மேலும் தகவல் தருகையில்
கடந்த வாரமும் இந்த முறைப்பாடுகள் எமக்கு கிடைத்திருந்தன. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான வகையில் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அலட்சியமாக செயற்பட முடியாது. மேலும் கடந்த காலத்திலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கூட்டணியில் இலங்கையை சேர்ந்த நபர்கள் உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
இப்போதும் புலனாய்வு பிரிவின் தகவல்கள் அவ்வாறு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் நாட்டில் புலனாய்வு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு அமைய சரியான வகையில் விசாரணைகளை முன்னெடுப்போம். எவ்வாறு இருப்பினும் உறுதியான வகையில் இந்த தகவல்கள் கிடைக்காத நிலையில் அவை தொடர்பில் ஆராய்ந்தே தீர்மானம் எடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிராச்சி குறிப்பிடுகையில்,
இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக சர்வதேச நாடுகளின் புலனாய்வு தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அதற்கமைய நாமும் ஆராய்ந்து வருகின்றோம். எனினும் அண்மையில் இலங்கையை சேர்ந்த 36 முஸ்லிம் நபர்கள் இரகசியமாக சிரியாவை சென்றடைந்துள்ளனர். அவர்களில் பலர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன. அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இஸ்லாமிய புனித பயணம் மேற்கொண்டு செல்வதாக கூறிக் சிறுவர்களும், பெண்களும், வயதானவர்களும் இவ்வாறு பயங்கரவாத குழுக்களை சென்றடைவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எனினும் இவர்கள் அனைவரும் ஒன்றாக பயனித்தார்களா, அல்லது தனித்தனியாக பயணித்தார்களா என்பது தொடர்பில் எமக்கு தெளிவான தகவல் கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.
எவ்வாறு இருப்பினும் கடந்த காலங்களில் சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு இலங்கையை தளமாக இலங்கையில் 9 குடும்பங்களை சேர்ந்த 45 நபர்கள் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் கிழக்கில் மட்டுமில்லாது குருநாகல், கண்டி, கொலன்னாவை, தெகிவளை பகுதிகளை சேர்ந்த நபர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத குழுவில் தொடர்புகொண்டுள்ளதாகவும் கடந்த வாரம் புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டதாக தெரிவிக்கப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது.








