ஆட்சியைக் கவிழ்க்க சீனா செல்கிறாரா மகிந்த?
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வரும் 13ஆம் திகதி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே, மகிந்த ராஜபக்ச பீஜிங் செல்லவுள்ளதாகவும், வரும் 16 ஆம் திகதி வரை அவர் அங்கு தங்கியிருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்சவின் சீனப் பயணத்தை அவரது இணைப்பாளர் உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை, இது ஒரு மதம் சார்ந்த பயணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தப் பயணத்தின் போது, சீன அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை மகிந்த ராஜபக்ச சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், மகிந்த ராஜபக்ச வெளிநாடு ஒன்றுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
அதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர், சீனப் பயணம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதுகுறித்து தாம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.