Breaking News

அரசியலமைப்பு மாற்றமும் சிங்களக்குடியானவர்களும்


இம்மாதம் 11ஆந் திகதி கிளிநொச்சியில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. அரசியலமைப்பு மாற்றங்களில் குடியானவர்களின் பங்களிப்புத் தொடர்பானஇக்கலந்துரையாடல் தேசிய கிறிஸ்தவ மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கலந்துரையாடலின் போது தென்னிலங்கையைச் சேர்ந்த ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கலாநிதி றோகான் எதிரிசிங்க சுட்டிக் காட்டியிருந்த ஓர் உதாரணத்தை மேற்கோள் காட்டிப் பேசினார். 

அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக தென்னிலங்கையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு கலந்துரையாடலின்போது றோகான் எதிரிசிங்க கென்னிய நாட்டு உதாரணம் ஒன்றைச் சுட்டிக்காட்டியுள்ளார். கென்யா நாட்டில் அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக குடியானவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்ட போது ஒரு சந்திப்பில் ஒரு முதிய விவசாயி தனது ஆட்டுக்குப் போட புல் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவருடைய கருத்து கவனத்தில் எடுக்கப்பட்டு கென்யாவின் அரசியலமைப்பு மாற்றப்பட்டபொழுது மேய்ச்சல்தரைகளை உருவாக்குவது தொடர்பில் புதிய ஏற்பாடுகள் இணைக்கப்பட்டதாக கலாநிதி றோகான் எதிரிசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு ஏழை விவசாயியின் ஆட்டுக்கு புல் வேண்டும் என்று சிந்தித்து அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுமாக இருந்தால் அது அந்த நாட்டின் ஜனநாயகச் செழிப்பையே காட்டும். ஆயின் இலங்கைத்தீவின் நடைமுறை எவ்வாறு உள்ளது?

அரசாங்கத்தின் அரசியலமைப்பு நிபுணர்குழுவில் அங்கம் வகிக்கும் ஒரு சிங்கள புத்திஜீவி கடந்த ஆண்டின் இறுதியளவில் சில நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது தெரிவித்திருந்த கருத்துக்களை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அது ஓர் உத்தியோகபூர்வ உரையாடல் அல்ல. நட்புரீதியான இலேசான ஒரு உரையாடல். அதில் ஒரு தமிழ் அரசியல்வாதியும் இருந்திருக்கிறார். அவர் தமிழ்மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர். அங்கு பேரவை தொடர்பாகவும் கதை வந்திருக்கிறது. அதன்போது மேற்படி புத்திஜீவி சொல்லியிருக்கிறார் அரசியலமைப்புத் தொடர்பாக எல்லா முடிவுகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டன என்ற தொனிப்பட.

இது போலவே இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதாக ஓர் ஊகம் உண்டு. ஆட்சிமாற்றத்திற்கு முன்னர் சிங்கப்பூரில் நடந்த ஒரு திரைமறைவு சந்திப்பின் போது இது தொடர்பில் முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படுகிறது.

அப்படியானால் வழமைபோல மேலிருந்து ஏற்கனவே முடிவுகளை எடுத்துவிட்டு கீழிருந்து கருத்துக்களைப் பெற்று அரசிலமைப்பை மாற்றப்போவதாக கூறப்படுவது ஒரு நாடகமா? அல்லது கண்துடைப்பா? ‘நல்லாட்சியின் காட்சியறையாக’ இச்சிறு தீவைக் கட்டியெழுப்பும் மலிவான உத்திகளில் இதுவுமொன்றா?

இதுதொடர்பில் ஏற்கனவே ஒரு கட்டுரை ‘அரசியலமைப்பு மாற்றமும் தமிழ்க் குடியானவர்களும்’ என்ற தலைப்பில் இக்கட்டுரையாசிரியரால் சில வாரங்களுக்கு முன் எழுதப்பட்டிருக்கிறது.

இன்று, இந்த கட்டுரையானது முன்னைய கட்டுரையின் தொடர்ச்சியாகவும் அதேசமயம் இது தொடர்பில் மற்றொரு விடயப்பரப்பின் மீது கவனத்தைக் குவிப்பதாகவும் அமைகிறது.

இலங்கைத்தீவின் கடந்த பல தசாப்தகால அனுபவங்களின் அடிப்படையில் குறிப்பாக கடந்த சுமார் 7 ஆண்டுகால அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால் இவ்விடயப்பரப்பு அதிகம் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாயிருக்கும்.

அது என்னவெனில், இப்பொழுது நாட்டுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது குடியானவர்களின் கருத்தைக் கேட்பதா? அல்லது குடியானவர்கள் மத்தியில் கருத்தை உருவாக்குவதா? என்பதே.

ஏனெனில் அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக, குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக கருத்துக்களைக் கேட்கப் போனால் நாடு இப்பொழுதும் இரண்டாகப் பிளவுண்டிருப்பதைக் காணலாம்.

தமிழ்மக்களில் பெரும்பாலானவர்கள் ஒற்றையாட்சி முறையை மாற்ற வேண்டும் என்றும், சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட சமஷ்ரியே வேண்டும் என்றும் கேட்டு வருகிறார்கள். மக்களுடைய ஆணையைப் பெற்ற கூட்டமைப்பும் ஏறக்குறைய அதைத்தான் கேட்கிறது. மக்கள் பேரவையும் அதைத்தான் கேட்கிறது. ஆனால் சிங்கள மக்கள்?

அவர்கள் சமஷ்ரியை ஒரு பூதமாகப் பார்க்கிறார்கள். அது பிரிவினைக்கு இட்டுச்செல்லும் என்று பார்க்கிறார்கள். இச்சிறுதீவில் முதன்முதலாக சமஷ்ரிக் கோரிக்கையை முன்வைத்தது சிங்களத் தலைவராகிய பண்டாரநாயக்கா தான் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

இத்தகையதோர் களயதார்த்தத்தின் பின்னணியில் தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் திருப்திப்படுத்தும் ஒரு தீர்வை எப்படிக் கண்டுபிடிப்பது?

சிங்கள மக்களுக்கு ஒற்றையாட்சி போலத் தோன்றுவதும் தமிழ் மக்களுக்கு சமஷ்ரி போலத் தோன்றுவதுமாகிய ஒரு தீர்வையே கண்டுபிடிக்க வேண்டும். அதாவது இருதரப்பு பொதுமக்களுக்கும் பொய் சொல்ல வேண்டும். வார்த்தைகளை வைத்து விளையாட வேண்டும்.

ஆனால் பொய்களிலிருந்து நல்லிணக்கம் ஊற்றெடுப்பதில்லை. பொய்களின் மீது நிலைமாறு காலகட்ட நீதியைக் கட்டியெழுப்ப முடியாது. பொய்களின் மீது கட்டியெழுப்பப்பட்ட எந்தவொரு தீர்வும் நின்று நிலைத்ததில்லை. எனவே சிங்கள மக்களுக்கும், தமிழ்மக்களுக்கும் உண்மை சொல்லப்பட வேண்டும். அந்த உண்மையை ஜீரணித்துக் கொள்ளத்தக்க ஒரு பொது உளவியலைக் கனியச்செய்ய வேண்டும்.

தமக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கும், கூட்டுக்காயங்களுக்கும், கூட்டு மனவடுக்களுக்கும் உரிய நீதியைக் கோரிவரும் தமிழ்மக்களுக்கு பொய்களைக் கொடுக்க முடியாது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகப் பிரிவினை கோரி ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு சமூகம் இப்பொழுது சமஸ்டித் தீர்வுக்குத் தயாரகக் காணப்படுகிறது. தமிழ் அரசியல் அரங்கில் ஆகப்பிந்திய வருகையாகிய பேரவைகூட அதன் தீர்வு முன்மொழிவுகளில் நெகிழ்ச்சியான ஒரு போக்கைக் கடைப்பிடித்திருக்கிறது. 

ஒரு தேசமாகச் சிந்திப்பது என்பதை அது ஒத்திவைத்திருக்கிறது. ஒரு தேசமாகச் சிந்திப்பது என்பது பேரவையின் முன்மொழிவுகளில் அடிக்குறிப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. பேரவையின் முன்மொழிவை ஒரு முழுநிறைவான சமஷ்ரி என்று கூறமுடியாது. அதேசமயம் அது புதிய சமரச வெளிகளைத் திறந்து வைத்திருக்கிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்மக்கள் தரப்பிலிருந்து காட்டப்பட்ட ஆகப்பிந்திய சமிக்ஞை அது.

தமது வன்சக்தி முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட பின் கடந்த சுமார் 7 ஆண்டு காலமாக தமிழ்மக்கள் தரப்பிலிருந்து இதுபோல பல சமரசத்துக்கான சமிக்ஞைகள் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றை தோல்வியின் விளைவாகக் கருதி மேலும் ஒரு தீர்வற்ற தீர்வின் மூலம் அவர்களை நிரந்தரமாகத் தோற்கடித்துவிட வேண்டும் என்று சிங்களத் தலைவர்கள் சிந்திப்பார்களாக இருந்தால் அது யுத்த வெற்றிவாதத்தின் பிந்திய வளர்ச்சிதான். 

2009 மே மாதம் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின் அந்த வெற்றியை அடித்தளமாகக் கொண்டு ராஜபக்ச சகோதரர்களால் கட்டியெழுப்பப்பட்டதே வெற்றிவாதம். அதை மறுவளமாகச் சொன்னால் தமிழ்மக்களைத் தொடர்ந்தும் தோல்வியுற்ற ஒரு தரப்பாகவே பேணுவது என்று பொருள். அது இனவாதத்தின் 2009க்குப் பின்னரான வளர்ச்சியாகக் காணப்பட்டது. ஆனால் ராஜபக்சக்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் தமிழ்மக்களை அவர்களுடைய ஆகக்குறைந்த பட்சக் கோரிக்கைகளையும் கைவிடுமாறு கேட்பது என்பது அதே வெற்றிவாதத்தின் தொடர்ச்சிதான். எதிர்த்துப் போராடும் சக்தியை இழந்த ஒரு மக்கள் கூட்டத்தின் தலையில் ஒரு அடிமட்டத் தீர்வைக் கட்டியடித்துவிடும் ஒரு முயற்சியே இது.

சமஷ்ரி என்றால் அது பிரிவினைதான் என்று கூறுப்படுவதைப் பூமியிலுள்ள எந்தவொரு அரசறிவியல் நிபுணரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. சமஷ்ரி தொடர்பில் மனிதகுலத்தின் இதுவரையிலுமான திரட்டப்பட்ட அறிவுக்கு எதிராக சிங்கள மக்களும் அரசியல்வாதிகளும் சிந்திப்பதற்குக் காரணம் என்ன?

இது விடயத்தில் இரண்டு விளக்கங்களே உண்டு.

ஒன்று - சிங்கள மக்கள் சமஷ்ரியைப் பற்றி மிகப் பிழையான முற்கற்பிதங்களோடு காணப்படுகிறார்கள்.

இரண்டு - தமிழ் மக்களின் குறைந்தபட்சக் கோரிக்கையையும் நிராகரிப்பதன் மூலம் அவர்களுடைய கோரிக்கைகளை மேலும் கீழிறக்கலாம் என்ற ஓர் எதிர்பார்ப்பு.

குறிப்பாக தமிழ்மக்களுடைய ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில் தமிழ்மக்களை ஆகக்குறைந்தபட்ச ஒரு தீர்வுக்குள் முடக்குவதன் மூலம் அவர்களைத் தொடர்ந்தும் தோல்வியுற்ற ஒரு மக்கள் கூட்டமாகவே பேண முற்படும் ஒரு சிந்தனைப் போக்கு.

ஆனால், மெய்யான சமாதானத்தில் வென்றவரும் இல்லை தோற்றவரும் இல்லை. இரண்டு தரப்புமே வெற்றி பெற்றதாக உணர வேண்டும். எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதும் தமிழ்மக்களைத் தொடர்ந்தும் தோற்கடிக்கும் ஒரு முயற்சியாக அமையக்கூடாது. இந்த அடிப்படையில் சிந்தித்தால் தமிழ்மக்களின் ஆகக்குறைந்தபட்ச கோரிக்கையை நோக்கி சிங்கள பொது உளவியலை கனியச்செய்வதே இப்பொழுது தீர்வு யோசனைகளுக்கான ஒரே முன்நிபந்தனையாகும். நிலைமாறு காலகட்ட நீதியை அதன் மெய்யான பொருளில் கட்டியெழுப்புவதற்கும் அது ஒன்றுதான் பொருத்தமான முன்நிபந்தனையாகும். அந்த நீதியிலிருந்தே நல்லிணக்கம் ஊற்றெடுக்க முடியும்.

எனவே சிங்களப் பொது உளவியலை ஒரு தீர்வை நோக்கி கனிய வைக்க வேண்டும். அதாவது குடியானவர்களின் கருத்தைக் கேட்டால் மட்டும் போதாது. அவர்கள் மத்தியில் கருத்தை விதைக்க வேண்டும். கருத்தை உருவாக்க வேண்டும். அதைத் தனியே அரசியல்வாதிகள் மட்டும் செய்ய முடியாது. செயற்பாட்டாளர்களும், மகாசங்கத்தினரும், புத்திஜீவிகளும், ஊடகங்களும், படைப்பாளிகளும், ஏனைய கருத்துருவாக்கிகளும் தங்களுக்கே உரிய தளங்களில் அதை முன்னெடுக்க வேண்டும்.

இதுவிடயத்தில் சிங்கள அரசியல்வாதிகள் தமது அடிப்படை ஒழுக்கத்தையே மாற்றவேண்டி இருக்கும். வாக்குவேட்டை அரசியலுக்காக சமஷ்ரியை பிரிவினையாக்கி ஒரு பூதமாகச் சித்தரித்தது அவர்கள்தான். கடந்த பல தசாப்தங்களாக தமது வாக்காளர்களுக்கு அவர்கள் ஊட்டி வளர்த்த விசத்துக்கு முறிமருந்து கொடுக்க அவர்கள் தயாரா?

சிங்கள மக்களை ஒரு நீதியான தீர்வை நோக்கி கனியவைப்பது என்பது எல்லா விதத்திலும் சிங்கள இனவாதத்தைத் தோற்கடிப்பதுதான். சிங்கள இனவாதத்தைத் தோற்கடித்து விட்டால் தமிழ்த்தேசிய அரசியலும் கூடிய பட்சம் மிதத்தன்மை மிக்கதாக மாறிவிடும். எனவே, அரசியலமைப்பு மாற்றங்களுக்காக குடியானவர்களிடம் கருத்துக்களைக் கேட்கும் நாடு அதற்கும் முதலாவதாக குடியானவர்களின் மத்தியில் கருத்தை உருவாக்க வேண்டும். குடியானவர்கள் மத்தியில் நிலவும் பிழையான முற்கற்பிதங்களை அகற்ற வேண்டும். 

சமஷ்ரிக் கோரிக்கை எனப்படுவது பிரிவினைக்கானது அல்ல. அது பிரிவினையைத் தவிர்ப்பதற்கானது என்பதை சிங்களக் குடியானவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில் சிங்களத் தலைவர்கள் சமஷ்ரியை ஏற்றுக்கொள்ளத் தயாராக வேண்டும்.

இந்த இடத்தில் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட கிளிநொச்சிக் கலந்துரையாடலில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியைச் சுட்டிக்காட்ட வேண்டும்.’இப்போது உருவாக்கப்படும் அரசியலமைப்பை அடுத்த தேர்தலின் பின் வரும் அரசாங்கம் மாற்றாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? சில சமயம் ராஜபக்ச அணி மறுபடியும் ஆட்சியைக் கைப்பற்றினால் அவர்கள் அரசியலமைப்பை மாற்ற மாட்டார்களா?’ என்று அதில் கலந்து கொண்ட ஒருவர் வளவாளர்களை நோக்கிக் கேட்டார். இக்கேள்விக்கு ஒரு சிங்கள வழக்கறிஞர் பதில் கூறினார். ‘ராஜபக்சக்கள் மறுபடியும் வரமாட்டார்கள்… நீங்கள் அவர்களை வர விடமாட்டீர்கள். நீங்களும், நாங்களும் சேர்ந்து அவர்களைத் தோற்கடித்தோம். இனியும் தோற்கடிப்போம்’ என்ற தொனிப்பட.

ஆனால், ஒரு நீதியான தீர்வை நோக்கி சிங்களப் பொது உளவியலை கனிய வைப்பது என்பது ராஜபக்சகளைத் தோற்கடிப்பது மட்டுமல்ல. ராஜபக்சக்கள் மட்டும்தான் தமிழ்மக்களுடைய பிரச்சினைகள் என்பதல்ல. அவர்கள் ஒரு விளைவு மட்டுமே. ராஜபக்சக்களின் தோல்வி எனப்படுவது சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தின் தோல்வியும்தான் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு மைத்திரி – ரணில் அரசாங்கத்திற்கு உண்டு. 

ஆனால் கடந்த ஓராண்டுகால ஆட்சியின் கீழான தமிழ் மக்களின் அனுபவம் எவ்வாறுள்ளது? சிங்கள பௌத்த மேலாண்மை வாதத்தைத் தோற்கடித்தால் மட்டுமே சிங்களப் பொது உளவியலைக் கனிய வைக்கலாம். அவ்வாறு சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைத் தோற்கடிப்பதற்கு சிங்களத் தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும், மகாசங்கத்தவர்களும், ஊடகவியலாளர்களும், ஏனைய கருத்துருவாக்கிகளும் தயாரா? தமிழ் குடியானவர்களின் ஆடுகளுக்கு புற்களைக் கொடுப்பார்களோ இல்லையோ குடியானவர்களுக்குப் பொய்களைக் கொடுக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தைத் தர சிங்களத் தலைவர்கள் தயாரா? அல்லது இக்கட்டுரையை யாவும் கற்பனை என்று முடிக்க வேண்டியதுதானா?

- நிலாந்தன்