Breaking News

வடக்கில் அரச கட்டிடங்கள் தமிழ் பெயர்களை கொண்டிருத்தல் வேண்டும்!

தமிழ் மொழி புறக்கணிப்பானது இன நல்லிணக்கத்துக்கு குந்தகமாகவே அமையும் எனவும் வடக்கில் திறந்து வைக்கப்படும் அரச கட்டிடங்கள் தூய தமிழ் பெயர்களை கொண்டிருத்தல் வேண்டும் என்ற பிரேரணை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாண சபையின் 48 ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போது குறித்த பிரேரணை பேரவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானத்தினால் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி சண்டிலிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுகளில் விதாதா வள நிலையம் என்ற பெயரில் அலுவலக கட்டிடங்கள், விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்களில் மட்டுமன்றி பெயர் பலகைகளிலும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலும் விதாதா என்ற சொல் மட்டுமே பாவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையம் என்ன நோக்கத்திற்காக திறந்து வைக்கப்படுகின்றது என்பதனை புரிந்து கொள்ள முடியாததாக உள்ளதுடன், இதுவொரு தமிழ் மொழி புறக்கணிப்பாகவே பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான முன்னைய செயற்பாடுகளே தமிழ் மக்கள் மத்தியில் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. 

இவை இன்னும் தொடர்வது இன நல்லிணக்கத்துக்கு குந்தகமானது என்பதனை தெரிவிப்பதுடன், அரசியலமைப்பு ஏற்பாடுகளை மீறும் இது போன்ற செயற்பாடுகள் மேலும் தொடராதிருப்பதற்கான பணிப்புரைகளை வழங்கி உதவுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினை கோருவதாக சிவஞானம் தனது பிரேரணையை முன்மொழிந்தார். 

இந்த பிரேரணை அனைவரது ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, பிரேரணையின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சு ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.