Breaking News

வீட்டுத்திட்டத்தில் மோசடி - நிராகரிக்கும் அமைச்சர்

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தான் முழுமையாக நிராகரிப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

23/2 நிளையியற் கட்டளையின் கீழ் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் எந்த ஊழல் மோசடியும் இடம்பெறவில்லை. சிலர் திட்டமிட்டு பொய் தகவல்களை பரப்பி இந்த வீட்டுத் திட்டத்தை குழப்ப முயல்கின்றனர். அத்துடன் இந்த திட்டத்தில் எந்தவொரு ஒழிவுமறைவும் இல்லை.

அமைச்சுக்கான கட்டிடம் குத்தகைக்கு பெறுவதில் மோசடி இடம்பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் கட்டிடம் குத்தகைக்கு பெறும்போது, கேள்வி மனு அடிப்படையில் குறைந்த விலை தெரிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி எனது அமைச்சின் கீழ் வௌ;வேறு இடங்களில் காணப்பட்ட ஐந்து திணைக்களங்களையும் தற்போது ஒரே இடத்திற்கு கொண்டு வந்துள்ளதன் மூலம் 2 இலட்சம் ரூபா சேமிக்க முடிந்துள்ளது.

அதேவேளை இந்த திட்டம் தொடர்பான குழுவில் அமைச்சின் செயலாளர்கள், நிறுவன தலைவர்கள் உட்பட பல உயரதிகாரிகள் உள்ளனர். இந்த குழுவின் பரிந்துரை படியே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எனவே இதில் மோசடிகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இங்கு சுமார் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் வீடுகளுக்கான தேவை காணப்படுகின்ற நிலையில், இந்த திட்டத்தின் கீழ் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், முகாம்களில் உள்ளவர்கள் மற்றும் அங்கவீனமுற்றவர்கள் போன்றோருக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.