Breaking News

வவுனியா கலாபோகஸ்வெவ மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

வவுனியா கலாபோகஸ்வெவ கிராமத்திற்கான பிரதான வீதியை புனரமைப்புசெய்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் வீதி மறியல் போராட்டத்தையும் நடத்தினர்.

வவுனியா தெற்கு பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட கலாபோகஸ்வெவ கிராமமானது சுமார் 800 குடும்ங்கள் குடியேற்றப்பட்ட கிராமமாக உள்ள நிலையில், இக் கிராமத்திற்கான பிரதான வீதியை திருத்தம் செய்து தருமாறுகோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

மாமடு சந்தியில் இட்ம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர், சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் ஹொரவப்பத்தான வீதி வழியாக ஊர்வலமாக சென்றதுடன் வவுனியா மணிக்கூட்டுக் கோபுரப்பகுதி மற்றும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 5 மணிநேரமாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை அவ்விடத்திற்கு வருகை தந்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் கந்துன்நெந்தி அம்மக்களிடம் கலந்துரையாடியிருந்தார்.