Breaking News

சம்பூரில் நீண்ட கால நோக்கில் குடியிருக்க முடியாத சூழல்!

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்படுமாயின், மக்கள் அந்தப் பிரதேசத்தில் நீண்ட கால நோக்கில் குடியிருக்க முடியாத சூழல் ஏற்படும் என சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அனல் மின் நிலையமாது, பிரதேசத்தின் வளங்களை சிதைவடையச்செய்யும் என சுட்டிக்காட்டிய சூழலியலாளர்கள், மக்கள் குடியிருக்காத காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பான சுற்றுச்சூழல் அறிக்கையை, தற்போது செல்லுபடியானதாகக் கருத முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

சம்பூரில் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அப்பகுதி மக்களினால் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் அது நிராகரிக்கப்பட்டதுடன், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு பாதுகாப்பான முறையில் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என அண்மையில் சம்பூருக்கு விஜயம் செய்திருந்த மின் சக்தி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அனல்மின் நிலையம் நிர்மாணிக்கப்படும் பகுதி, மக்கள் குடியிருப்பை அண்மித்துக் காணப்படுவதால், நேரடித்தாக்கம் ஏற்படக்கூடும் என சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அத்துடன், அனல் மின் நிலையத்தால் பிரதேசத்தின் கடல் வளம், விவசாய நிலம் என்பன பாதிப்படைவதுடன், மக்களின் அடிப்படைப் பொருளாதார வலு சிதைவடையும் எனவும் தெரிவித்துள்ளனர்.