கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கின்றது
முல்லைத்தீவு – கேப்பாபுலவு மக்கள் தம்மை தமது சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று (சனிக்கிழமை) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
கேப்பாபிலவு மாதிரிக்கிராம பிள்ளையார் ஆலய முன்றலில் நேற்று முன்தினம், குறித்த பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை என்பவர் சொந்த இடத்தில் மீள்குடியமர்த்துமாறு கோரி மேற்கொள்ளும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஊர் மக்களும் சுழற்சிமுறையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்
இராணுவத்தினர் வேண்டுமானால் காடுகளில் இருக்கட்டும். தமது 520 ஏக்கர் காணிகளை தமக்கு கையளிக்க வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், தமக்கு ஜனாதிபதியினுடைய எழுத்துமூல உறுதிமொழி கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடருமென எச்சரித்துள்ளனர்.
எனினும், உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் நிலையில் இதுவரை தமக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் அங்கு சென்றிருந்தனர்.
சூரியபுரம், கேப்பாபுலவு, பிலவுகுடியிருப்பு ஆகிய மூன்று கிராமங்களிலுள்ள 520 ஏக்கர் காணி, இராணுவத்தினரின் கைவசம் உள்ள நிலையில், இக்கிராமங்களைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாதிரிக் கிராமங்களில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








