'கவுசல்யாவின் அப்பா சொல்லித்தான் கொன்றோம்!'- 5 பேரின் அதிரவைக்கும் வாக்குமூலம்!
உடுமலை ஆணவக்கொலையில் தொடர்புடைய 5 பேரை கைது செய்துள்ள போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கவுசல்யாவின் தந்தை சொல்லியே இந்த கொலையை செய்ததாக 5 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சாதி மாறி காதலித்து, திருமணம் செய்த காரணத்துக்காக தலித் இளைஞர் சங்கர், அவரது மனைவி கவுசல்யா ஆகியோரை கடந்த 13-ம் தேதி பட்டப்பகலில் உடுமலை பஸ் நிலையம் அருகே மர்ம கும்பல் கொடூரமாக வெட்டியது. இதில் சங்கர் உயிரிழக்க, படுகாயமடைந்த கவுசல்யா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கவுசல்யா அளித்த புகாரில்,கொலைக்கு தனது தந்தை சின்னசாமி மற்றும் தாய், மாமா உள்ளிட்டோர்தான் காரணம் என தெரிவித்து இருந்தார். அதன்படி அவரது அப்பா, அம்மா, மாமா மற்றும் சிலர் மீது கொலை, கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த சம்பவம் பதிவான சி.சி.டிவி காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையின் அடிப்படையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக 5 பேர் கொண்ட கும்பலை திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி பகுதியில் போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசார் விசாரணையில், அவர்கள் பழனியைச் சேர்ந்த மணிகண்டன் (25), திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜெகதீசன் (31), மைக்கேல் என்கிற மதன் (24), செல்வக்குமார் (25), மணிகண்டன் (39) என்பது தெரியவந்தது. இவர்கள் கவுசல்யாவின் உறவினர்கள் என்பதும், கவுசல்யாவின் தந்தை சொல்லியே இந்த கொலையை அரங்கேற்றி இருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
மேலும், ''மகள் சாதி மாறி திருமணம் செய்ததால் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி அவமானத்தில் இருந்ததார். ஒரு திருமண நிகழ்வில் ஏற்பட்ட அவமானத்தில் ஆத்திரமடைந்து இவர்களை கொல்ல வேண்டும் என எங்களிடம் கூறினார். அதன் அடிப்படையிலே இந்த கொலையை நாங்கள் செய்தோம்'' என்று 5 பேரும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில், கவுசல்யாவின் உறவினர்கள் மேலும் சிலருக்கு தொடர்பிருப்பதாகவும் அவர்கள் அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.
கைதான ஜெகதீசன், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியின் டிராவல் ஏஜென்சியில் பணியாற்றி வருகிறார். மகளின் செயலால் ஏற்பட்ட அவமானத்தைச் சொல்லி, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி இருவரையும் கொன்றுவிடச் சொல்லி 50 ஆயிரம் ரூபாயை முன்பணமாக கொடுத்ததாக ஜெகதீசன் போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். மேலும், கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணம், இரு பைக் மற்றும் ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே இந்த சம்பவத்தில் ஏற்கனவே நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த சின்னசாமியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்