ஈ.பி.டி.பியை விட்டு ஏன் விலகினேன்! - மனம் திறக்கும் சந்திரகுமார்!
நீங்கள் ஈ.பி.டி.பி யிலிருந்து விலகுவதாக நீண்ட நாளின் முன்னரிருந்து ஒரு பேச்சு அடிபட்டுக்கொண்டிருந்தது. ஆனால், நீங்களோ, ஈ.பி.டி.பி தரப்போ இதை ஏற்கவுமில்லை மறுக்கவுமில்லை. இப்பொழுது என்ன நிலையில் உள்ளது? நீங்கள் ஈ.பி.டி.பி கட்சியில் இருக்கிறீர்களா? இல்லையா?
மு.சந்திரகுமார் :- நான் இப்பொழுது அந்தக் கட்சியில் இல்லை. காலமும் சூழலும் தனக்குரியவாறு ஒரு புதிய வழியைத் திறந்திருக்கிறது என்று எண்ணுகிறேன்.
மிக தெளிவாக சொல்கிறீர்களா? நீங்கள் இப்பொழுது ஈ.பி.டி.பி கட்சியில் இல்லையா?
மு.சந்திரகுமார் ::- இல்லை.
நீங்கள் மிக நீண்டகாலப் போராளி. ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பில் தொடங்கி, அதிலிருந்து டக்ளஸ் தேவானந்தா பிரிந்து சென்றபோது அவருடன் நீண்டகாலம் இணைந்திருந்தவர். உங்கள் இருவருக்குமிடையில் அப்படியென்ன பிரச்சினை?
மு.சந்திரகுமார் :- அரசியலின் காரணமாகவே இணைந்து செயற்பட்டிருக்கிறோம். இப்பொழுது அரசியல் வேறுபாடுகளின் காரணமாக விலகிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை.
ஈ.பி.டி.பியுடன் என்ன அரசியல் வேறுபாடு? அப்படியாயின் அந்தக் கட்சியின் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் பிழை என்கிறீர்களா?
மு.சந்திரகுமார் - நாங்கள் இந்த மக்கள் மத்தியில் அவர்களுக்காகக் கடுமையாக உழைத்திருக்கிறோம். ஆனாலும், மக்கள் எம்முடன் சுமுகமான உறவைக் கொண்டிருந்தபோதும், தேர்தல்களில் அவர்களுடைய தெரிவுகள் என்பது வேறுவிதமாகவே அமைந்திருக்கிறது. இவற்றைப் பரிசீலனை செய்கின்றபோது மக்கள் அபிவிருத்தியும், அதிகாரப் பகிர்வும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தலுக்குப் பின்னர் நான் கிராமங்களுக்குச் செல்லும்போதெல்லாம் இது தொடர்பாக என்னோடு பேசியவர்கள், தமிழ் மக்களுடைய அரசியற் தீர்வு தொடர்பாக ஈ.பி.டி.பியின் நிலைப்பாடு நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினர். இந்த நிலையில்தான் நான் புதிய அரசியல் நிலைப்பாடொன்றை வேறாக எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சரி. அடுத்ததாக என்ன திட்டம்? எந்த கட்சியிலாவது இணையப் போகிறீர்களா? அல்லது தனித்து நிற்கப் போகிறீர்களா?
மு.சந்திரகுமார் :- இலங்கை அரசியல் இப்பொழுது ஒரு புதிய சூழலில் உள்ளது என்பதை நீங்களும் அறிவீர்கள். இதை அவதானித்து வருகிறேன். அதன்படியே தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதேவேளை என்னுடைய பணிகள் வழமையைப்போல தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறேன். மக்களுடைய பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளைக் காண்பதற்கு உதவிக்கொண்டிருக்கிறேன். அவர்களுடைய நெருக்கடிகளைத் தீர்த்து வைப்பதில் சாத்தியமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இந்த உலகம் பெரியது. உலகமெங்கும் நம்மைச் சுற்றி நல்ல மனிதர்கள், நல்ல மனமுடையவர்கள் ஏராளம்பேர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் என்னோடு இணைந்து பாதிக்கப்பட்டிருக்கும் எமது மக்களுக்கான வேலைகளைச் செய்வதற்கு முன்வந்திருக்கிறார்கள். அவர்களை இணைத்து பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.
வானம் எல்லோருக்கும் பொதுவாகவே உள்ளது. ஆகவே நாம் நேர்மையாக எங்களை அர்ப்பணித்துச் செயற்பட்டால் உலகெங்கும் இருந்தும் நல்ல மனிதர்களின் உதவிகள் கிட்டும்.
மற்றது, என்னுடைய எதிர்கால அரசியலைப் பொறுத்தவரை காலமும் சூழலும் மக்களின் உணர்வுகளும் அவர்களுடைய தேவைகளும் எதைநோக்கியதாக அமையுமோ அதன்படியே முடிவெடுக்க வேண்டியேற்படும்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் நீங்கள் இணையப் போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே?
மு.சந்திரகுமார் :- அதைப் பற்றிச் சிந்திக்கவில்லை.
இப்பொழுது நீங்கள் ஈ.பி.டி.பி உறுப்பினர் இல்லை. வெளியில் வந்தபின்னரான அவதூறு வகைக்குள் அல்லாமல், ஒரு சுய விமர்சனமாக கேட்கிறோம். ஈ.பி.டி.பி காலம் பற்றிய இன்றைய சந்திரகுமாரின் மீள்பார்வை என்ன?
மு.சந்திரகுமார் :- வரலாறு ஒரு கண்டிப்பானது என்று சொல்லப்படுவதுண்டு. அது தனக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளும். தேவையில்லாததை விட்டு விடும். அல்லது தனக்கு உரிய விதமாக உருமாற்றமோ குணமாற்றமோ செய்யும். இதை வரலாற்றின் விதி என்று சொல்லுவார்கள். நெருக்கடியான நிலையில் இருந்து கொண்டே மிகக் கடினமான காலங்களில் மக்களுக்கான பணிகளைச் செய்திருக்கிறோம். தமிழ் மக்களுடைய இருப்பை உறுதிப்படுத்துவதிலும் பலமாக்குவதிலும் எமது கடந்த காலப் பணிகள் மிகவும் சக்திமிக்கதாக இருந்தன. அதில் வெற்றிகளும் உண்டு. தோல்விகளும் உண்டு.
ஆனால், வரலாற்றில் எல்லாவற்றுக்கும் மறுபார்வைகளும் விமர்சனங்களும் இருக்கும். என்னுடைய சுய விமர்சனத்தின் பாற்பட்ட நிலைப்பாடே புதிய அரசியலை நோக்கி நான் நகர்வதாகும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் வெற்றியடையவில்லை. முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அடிக்கடி பத்திரிகைகளில் செய்தியாக வந்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது என்ன செய்கிறீர்கள்? எப்படியிருக்கிறது வாழ்க்கை?
மு.சந்திரகுமார் :- முன்னரும் நான் மேற்கொண்ட பணிகளில் காற்பங்கு கூட ஊடகங்களிலும் பொதுப்பரப்பிலும் வெளியிடப்பட்டதல்ல. ஆனாலும் அன்று கூடுதலான செய்திகள் வந்து கொண்டிருந்தது என்பது உண்மையே. சார்பு எதிர்ப்பு என்றில்லாமல் மக்களுக்கான பணிகளைப் பற்றியும் மக்களின் குறைபாடுகளைப் பற்றியும் அரசியல் விமர்சனங்களைச் சரியாக ஊடகங்கள் முன்வைக்க வேண்டும். அப்படியான ஒரு ஊடகப் பண்பாடு தமிழில் வளர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நிச்சயமாக அது மலரும் என்று நம்புகிறேன்.
இப்பொழுது மக்களுடன் இருந்து சாத்தியப்படக் கூடிய வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன். கல்வியிலும் தொழில் துறைகளிலும் சுற்றுச் சூழலிலும் எமது மக்களும் பிரதேசங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்பது என்னுடைய நோக்கமாகும். அத்துடன், எமது அரசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான – நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கருதுகிறேன்.
சுய நிர்ணய அடிப்படையில் அமையும் தீர்வை மக்கள் விரும்புகிறார்கள். இதற்கான கள யதார்த்தத்தை நாம் உருவாக்க வேண்டியுள்ளது. மாற்றுக் கருத்துகளுடைய சக்திகள் அவற்றின் தனித்துவத்துடன் பரஸ்பர நல்லெண்ண அடிப்படையில் மக்களுக்காக ஒன்றிணைய வேண்டிய காலகட்டம் இது. வழமையான ஒற்றுமைக் காட்சிகளைப்போல இல்லாமல், அர்த்தமான முறையில் ஒரு ஒருங்கிணைவு தேவை என்று மக்கள் உணருகிறார்கள். இதைச் சாத்தியப்படுத்துவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.
- தீபம்