நல்லாட்சியில் நடந்தது என்ன? சம்பந்தனிடம் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கேள்வி
அரசாங்கத்துடன் பேச்சு நடத்தாமல் காலத்தை கடத்துவதன் நோக்கம் என்ன என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரியவருகிறது.
நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால், வடக்கு கிழக்கு மாகாணத்தில் இராணுவ எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. கெடுபிடிகளும் தொடருவதாக சுட்டிக்காட்டியுள்ள அந்த உறுப்பினர்கள்,
எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் கூட சம்பந்தன் இந்த விடயங்கள் தொடர்பாக எதிர்த்து பேசவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது
சாவகச்சேரியில் தற்கொலை அங்கி கண்டுபிடிக்கப்பட்டதாக இராணுவம் வெளியிட்ட செய்தி பொய்யானது என்றும் அதற்கு எதிராக சம்பந்தன் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை என்றும் அந்த உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை மீட்டுத்தருமாறு நடத்திய போராட்டத்தைக் கூட சம்பந்தன் இடைநிறுத்திவிட்டார் என்றும் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் தாமாக முன்வந்து நடத்தும் எதிர்ப்பு நடவடிக்கைகளைக்கூட சம்பந்தன் தடுத்து நிறுத்துவதாகவும் அந்த உறுப்பினர்கள் காரசாரமாக குறைகூறியுள்ளனர்.
சம்பூர் பிரதேசத்தில் அமைக்கப்படும் அனல் மின்நிலைய வேலைத்திட்டத்தைக் கூட அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி தடுத்து நிறுத்த முடியவில்லை என்றும் யுத்தத்தின் பின்னரான காலகட்டத்தில் மிகவும் மோசமான அரசியல் பலவீனம் ஒன்றை தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டு வருவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த உறுப்பினர்கள் சிலர் கவலை வெளியிட்டதாக கூறினார்.
அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு மற்றும் யுத்தத்தின் பக்கவிளைவுகள் உள்ளிட்ட அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்காமல் காணாமல் போனோர், மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் விவகாரம், காணிப் பிரச்சினைகள் என்று தனித்தனியாக பேசி காலத்தைக் கடத்துவது ஏன் என்றும் அந்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
சம்பந்தனை சந்தித்து தமது கண்டத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கப் போவதாகவும் கூடிய விரைவில் அனைத்து தமிழ்க் கட்சிகளையும் ஒன்றினைத்து வடக்கு கிழக்கில் மக்களை சந்திக்கவுள்ளதாகவும் அந்த உறுப்பினர்கள் கூறியதாக மேலும் தெரியவருகிறது.