Breaking News

கூட்டமைப்புத் தலைமை என்ன செய்யப் போகிறது?

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்வரைபு ஒன்றை தமிழ் மக்கள் பேரவை தயாரித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவை தீர்வுத்திட்ட வரைபை தயாரிப்பதைக் கண்ட வடக்கு மாகாண சபை தானும் ஒரு தீர்வுத்திட்டத்தை தயாரித்து முன் வைத்துள்ளது.

இத் தீர்வுத்திட்டத்தை எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம் பந்தரிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கேள்வி.

இதே சமயம் வடக்கு மாகாண சபை தயாரித்த தீர்வுத்திட்ட முன்வரைபை இலங்கை அரசு பரிசீலிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.ஆக, வடக்கு மாகாண சபை தயாரித்த தீர்வுத் திட்டத்தை அமுல்படுத்துவது எங்ஙனம்? இதை அமுல்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன?

வடக்கு மாகாண சபை தயாரித்த தீர்வுத்திட்டத்தை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டவுடன் அதை அரசு செய்யுமா? என்ற கேள்விகள் எழுகின்ற போது எதுவுமே நடக்காது என்பது பதிவாகிறது. அப்படியானால் வடக்கு மாகாண சபை தயாரித்த தீர்வுத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன என்பதே இன்றைய பேசுபடு பொருளாகும்.

வடக்கு மாகாண சபையைக் கொண்டு தீர்வுத் திட்டத்தை தயாரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதை அமுல்படுத்துவதற்காக பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அதைச் செய்யாமல் பேசாமல் இருந்தால், தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்டத்துக்கு பதி லடியாக வடக்கு மாகாண சபையைக் கொண்டு தீர்வுத்திட்டத்தை தயாரித்தமையேயன்றி இந்த தீர் வுத்திட்டத்தை எல்லாம் அரசு ஏற்கப்போகிறதா என்ன என்று கூட்டமைப்பே கேட்பதாக நிலைமை மாறிவிடும்.

இத்தகையதோர் நிலைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டுமல்ல; வடக்கு மாகாண சபைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விடும். 

ஆகையால், வடக்கு மாகாண சபை தயாரித்த தீர்வுத்திட்டத்தை இலங்கை அரசு உடனடியாக அமுல்படுத்த வேண்டும். இதை அரசு செய்ய தவறினால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இரா ஜினாமா செய்வோம்; பாராளுமன்றத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வோம்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவியை இராஜி னாமா செய்து பாராளுமன்றத்தில் தமிழ்ப் பிரதி நிதித்துவம் தேவையில்லை நாங்கள் பிரிந்து செல்கிறோம் என்று உலகுக்கு எடுத்துரைப்போம். இப்படியாக அதட்டல்கள் வெருட்டல்கள் செய்யப் பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதைச் செய்யுமா என்பதை தமிழ் மக்கள் அனுமானிக்கத் தெரியாதவர்கள் அல்லர். எதுவாயினும் வடக்கு மாகாண சபை தயாரித்த தீர்வுத்திட்டத்தை அரசு அமுல்படுத்தாவிட்டால் வடக்கு மாகாண சபையினர் தொடர் போராட்டங்களை நடத்துவர் என நம்பலாம்.

இதை அவர்கள் செய்யாவிட்டாலும் அவர்களும் பேரவைக்காக குந்தியிருந்து எழுதியது இந்த தீர்வுத்திட்டம் என்பதாக நிலைமை முடிந்து போகும்.

- வலம்புரி