Breaking News

அரசை எச்சரிக்கும் மாவை



பிணையில் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மீண்டும் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்படுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் எவ்வித காரணங்களும் தெரிவிக்கப்படாத நிலையிலேயே கைது செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகள் முழுமையாக விடுதலை செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் பெயரை வீணடிக்கும் செயற்பாடாகவே தாம் இதனை கருதுவதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் எட்டப்படவுள்ள நிலையில், அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்பிரகாரம், விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் மீண்டும் கைது செய்யப்படுகின்றமை, காணிகள் சுவீகரிக்கப்படுகின்றமை ஆகியன இனப் பிரச்சினை தீர்வுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில், தாம் சர்வதேசத்தை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.