Breaking News

மே 18 தமிழன அழிப்பு நாள்: கறுப்பு நாளாக கடைப்பிடிக்குமாறும் அழைப்பு



ஸ்ரீலங்கா அரசினால் தமிழ்மக்கள் மீது புரியப்பட்ட இன அழிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரும் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை இரண்டு இடங்களில் இடம்பெறவுள்ளது.

முள்ளிவாய்கால் கிழக்கில் – பி.ப 3.30 மணிக்கும், மட்டக்களப்பு வாகரையில் மாணிக்கபுரம் ஆற்றங்கரையில் மு.ப 10.00 மணிக்கும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

இந்தநிகழ்வுகளில் அனைத்து பொதுமக்களையும் கலந்து கொண்டு உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்திக்காக பிராத்திக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இனஅழிப்பு நடைபெற்ற மே18 ஆம் திகதி கேளிக்கை நிகழ்வுகளையும் மங்களகரமான நிகழ்வுகளையும் தவிர்த்து கறுப்பு நாளாக கடைப்பிடிக்குமாறும் வேண்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை போர்க்காலத்தில் தமிழ் மக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை காரணமாக பெருமளவான மக்கள் பட்டினிச் சாவுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

தமது இரத்த உறவுகள் சந்தித்த அந்தக் துயரத்தை நினைவு கூரும் வகையில் அன்றைய தினம் அறுசுவையற்ற கஞ்சியினை ஒருவேளை உணவாக கடைப்பிடிக்குமாறும் தமிழ்த்தேசிய முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.