வடக்கு கிழக்கில் நீதியை நிலைநிறுத்த தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரம் அவசியம்
யாப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரத்திற்கான ஐ .நா.மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசேட பிரதிநிதி மொனிக்கா பின்ரோ தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்களுக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.
இதன் போது போரில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை காலதாமதமின்றி இடம்பெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அண்மைக்காலமாக வடக்கு கிழக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை, குழு வன்முறைகள், கொள்ளை, பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் தமது கரிசனையை வெளிப்படுத்திய தமிழ் பேரவையின் பிரதிநிதிகள், தமிழ் இனத்தின் அடையாளமான கல்வி, கலாச்சாரம், வாழ்வியல் என்பவற்றை சிதைக்கும் ஒருதொடர்ச்சியான செயற்பாடாகவே இது அமைவதாக தெரிவித்தனர்.
தமிழர் பிரதேசங்களில் சட்டம், ஒழுங்கை செம்மையாக நிலை நிறுத்த ஆட்சியதிகாரம் தமிழர்களிடம் வழங்கப்படக்கூடிய அரசியல் தீர்வு கிடைத்தால் மட்டுமே இவற்றிற்கான ஒருநிரந்தரத்தீர்வு கிடைக்கும் எனவும் தமிழ் மக்கள் பேரைவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.








