Breaking News

போர்க்குற்ற விசாரணையில் சாட்சியமளிக்க முன்னாள் புலிகள் விருப்பம்

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால நீதிப் பொறிமுறைகளில், சாட்சியமளிக்கத் தயார் என்று, ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

ஜஸ்மின் சூகா தலைமையிலான, தென்னாபிரிக்காவைச் சேர்ந்த, மனித உரிமைகளுக்கான நிறுவகத்துடன் இணைந்து, இலங்கையில் அனைத்துலக உண்மை மற்றும் நீதி திட்டம் மேற்கொண்ட ஆய்வின் போதே, அவர்கள் இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.

நான்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள 75 தமிழர்களிடம், இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில், 54 பேர் முன்னாள் விடுதலைப் புலிகளாவர். ஆய்வில் பங்கேற்றவர்களில் 26 வீதமானோர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆய்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும், 2009 மே மாதம் சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐரோப்பாவுக்குத் தப்பிச் சென்றவர்களாவர். அவர்களில் கால் பங்கினர், முன்னாள் போராளிகளுக்கான இலங்கை அரசாங்கத்தின் புனர்வாழ்வு திட்டத்தைப் பெற்றவர்கள். விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தம்மால் அங்கு தப்பித்து வாழுதல் சாத்தியமற்றது என்று உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் பங்கேற்ற 73 வீதமானோர், சண்டைகள் நிறுத்தப்பட்ட பின்னர், தாம் இலங்கை படைகளால் சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

54 வீதமானோர், தாம் பாலியல் வல்லுறவு அல்லது ஏனைய பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.இவர்களில் 82 வீதமானோர், இலங்கையில் அமைக்கப்படவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். எனினும், தமது அடையாளம் வெளிப்படுத்தப்படக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பலரும், பாலியல் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், அவர்களின் குடும்பத்தினர் பலர் இன்னமும் இலங்கையில் வாழ்வதாலும், தமது அடையாளங்கள் வெளிப்படுத்தப்படக் கூடாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வன்முறைகளில் தமது பங்கு குறித்து முழு உண்மையை வெளிப்படுத்தினாலும், அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கக் கூடாது என்று மூன்றில் இரண்டு பங்கினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

உண்மை ஆணைக்குழு மற்றும் சிறப்பு நீதிமன்றம், என்பனவற்றில் பெரும்பாலும் வெளிநாட்டு ஆணையாளர்கள் அல்லது நீதிபதிகளே இடம்பெற வேண்டும் என்று ஆய்வில் கருத்து வெளியிட்ட அனைவரும் ஒருமித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஆணையாளர்கள் அல்லது நீதிபதிகளில் பெண்களுக்கும் இடமளிக்க வேண்டும் என்று 50 வீதமானோர் கூறியுள்ளனர்.