Breaking News

சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த வெடிபொருட்களே நாசம் – வலுக்கிறது சந்தேகம்



சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்த வெடிபொருட்களே சலாவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் நாசமாகியதாக, இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி, சிங்கள ஊடகமான “ராவய” செய்தி வெளியிட்டுள்ளது.

போரின் போது, சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள், பயன்படுத்தப்படாமல் இருந்தன. இலங்கை போன்ற சிறிய நாடுகளில் இவற்றை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் வசதிகள் இல்லை.

எனவே இவற்றை கொள்வனவு செய்த நாட்டிடமே அவற்றை திரும்பவும் கையளிக்கப்படவிருந்தது.சீனாவின் நொறிங்கோ நிறுவனம் இந்த வெடிபொருட்களை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு இணங்கியிருந்தது. அதுபற்றிய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பயணமும் இடம்பெற்றிருந்தது.

லங்கா லொஜிஸ்ரிக் அன்ட் ரெக்னொலொஜிஸ் நிறுவனத்தின் ஊடாக, 150 மில்லியன் டொலர் ஆயுதங்களை விற்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்துக்கு கடந்த ஏப்ரல் 7ஆம் நாள் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

சீனாவிடம் திருப்பி விற்கப்படவிருந்த வெடிபொருட்கள் தீவிபத்தில் நாசமாகியதால், பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன என்றும் ராவய செய்தி வெளியிட்டுள்ளது.