Breaking News

சலாவ வெடிவிபத்தினால் 500 கோடி ரூபாவுக்கு மேல் இழப்பு



கொஸ்கம-சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெடிவிபத்தினால், இராணுவத்துக்கு, 500 கோடி ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட இழப்பு ஏற்பட்டுள்ளதாக  இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இனிமேல், அந்தப் பகுதியில் ஆயுதக் கிடங்குகள் அமைக்கப்படாது என்றும், எஞ்சியுள்ள ஆயுதங்கள், வெடிபொருட்கள் சன அடர்த்தி குறைந்த பகுதிகளுக்கு மாற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘தேவைக்கு அதிகமாக இருந்த பெருந்தொகையான ஆட்லடிறி, பல்குழல் பீரங்கிக் குண்டுகள் அழிந்து போனவற்றுள் அடங்கியுள்ளன. இவை வழங்குனரிடமே திருப்பி விற்கப்படவிருந்தவை.

நான் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், பெருமளவில், பயன்படுத்தப்படாத வெடிபொருட்கள் இருந்ததைக் கண்டேன். காலாவதியாக முன்னர், அவற்றை அகற்றி விட்டு, தேசிய பாதுகாப்புக்குத் தேவையான குறைந்தளவு வெடிபொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்து கையிருப்பில் வைத்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைத்தேன்.

மிகுதியாக உள்ள வெடிபொருட்களை வாங்கிய விலையை விடவும் குறைந்த விலைக்கு மீள் விற்பனை செய்வதற்கு கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.