Breaking News

வடக்கில் பயங்கரவாதிகளைப் பார்ப்பதுபோல் எம்மை பார்க்க வேண்டாம்: மக்கள் ஆவேசம்



தேவைக்கு அதிகமாகவுள்ள ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்பதற்கும், பாவனைக்கு உதவாத ஆயுதங்களை அழிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஆயுதங்களை கொள்வனவு செய்த வெளிநாட்டு நிறுவனங்களிடமே எஞ்சிய ஆயுதங்களை மீள ஒப்படைப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் ஆயுதங்களின் பயன்பாடு அவசியமற்று இருப்பதனாலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்துக்கு வந்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த வாரம் வீதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இழந்த அனைத்து உடைமைகளையும் மீள்பெற்றுத் தருவதாக அவர்களிடம் நேரில் சென்று வாக்குறுதி அளிக்குமாறு ஜனாதிபதியும் பிரதமரும் விடுத்த பணிப்புரைக்கமைய நேற்று(வெள்ளிக்கிழமை) அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, சாகல ரத்நாயக்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, ருவன் விஜேவர்தன ஆகியோர் அடங்கிய குழுவினர் சீத்தாவக்க பிரதேச செயலகத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த சந்திப்பினை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொஸ்கம சலாவர இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கு வெடிப்பில் இழக்கப்பட்ட அனைத்து உடைமைகளையும் நீதியான முறையில் மீளப்பெற்றுத் தருவதற்காக ஸ்தாபிக்கப்படவுள்ள விசேட பொறிமுறைக்கு, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வீதிப் போராட்டங்களை கைவிட்டு ஒத்துழைக்க வேண்டுமென அமைச்சர்கள் இதன்போது கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.

ஆயுதக் கிடங்கு வெடிப்புச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 12 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இழக்கப்பட்ட உடமைகளை மீளப் பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட பொறிமுறையொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.

சீத்தாவக்க பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் மக்கள் மிகவும் ஆவேசமான முறையில் நடந்து கொண்டனர். வீடுகளையும் உடைமைகளையும் இழந்து வீதியில் வந்து நின்ற தம்மிடம் இராணுவ அதிகாரிகள் மிகவும் கடுமையாக நடந்துகொண்டதாகவும் அவர்கள் அமைச்சர்களிடம் முறையிட்டனர்.

‘நாம் பயங்கரவாதிகளில்லை. வடக்கில் பயங்கரவாதிகளைப் பார்ப்பதுபோல் எம்மை பார்க்க வேண்டாம். அனைத்தையும் இழந்துள்ள எம்மிடம் மென்மையாக அணுகுங்கள்’ என்றும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.