அரசைக் கவிழ்க்கும் கனவு ஒருபோதும் பலிக்காது
வரவுசெலவுத்திட்டத்தின் பின்னர் தேசிய அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என சிலர் கண்டுவரும் கனவு ஒருபோதும் பலிக்காதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐந்து வருடத்துக்கு தேசிய அரசாங்கம் பலமான முறையில் செயற்படும் என்றும், அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என எவரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். கடந்த 17ஆம் 18ஆம் திகதிகளில் சிங்கப்பூருக்கு மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பில் விளக்கமளித்திருந்த பிரதமர், தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் கூறியிருந்தார்.
தனது சிங்கப்பூர் விஜயத்தின் போது இலங்கையை பிராந்திய பொருட்கள் பரிமாற்றம், வர்த்தக மற்றும் நிதி மையமாக்குவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் மற்றும் கடல், விமானம், நெடுஞ்சாலை, எரிசக்தி மற்றும் தொலைத்தொடர்பாடல் துறைகளின் முன்னேற்றம் தொடர்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலும் சிங்கப்பூர் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்திருந்தோம்.
அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பத்து இலட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் வலுவான மத்திய தரவர்க்கத்தை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், கண்டி, கொழும்பு, ஹம்பாந்தோட்டை பொருளாதார வலய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பிலும், இலங்கையினால் சிங்கப்பூருக்கு இதன்போது எடுத்துரைக்கப்பட்டது என்றும் கூறினார்.
சிங்கப்பூர் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களையும் இலங்கைத் தூதுக்குழு சந்தித்து கலந்துரையாடியதாகவும், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான உதவிகளை நல்குவதாக உறுதியளிக்கப்பட்டது. சிங்கப்பூருடன் கைச்சாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை, இந்தியா மற்றும் சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் அரச துறையின் தரத்தை மேம்படுத்துவதற்கான அவசியம் தொடர்பில் தம்மால் சுட்டிக்காட்டப்பட்டதாகவும், அதற்கான ஒத்துழைப்புகளை வழங்க சிங்கப்பூர் பிரதமர் உறுதியளித்ததாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் கலாசார பரிமாற்ற வேலைத்திட்டங்கள், பெருநகர அபிவிருத்தி, சிங்கப்பூர் சிவில் சேவை கல்லூரியுடனான அரச அதிகாரிகள் திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப, தொழில்சார் கல்வி தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு தம்மால் விடுக்கப்பட்ட அமைப்பையும் சிங்கப்பூர் பிரதமர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
அதேநேரம், விரைவில் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பேசுவதற்காக சீனாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். அதேபோல் ஜப்பானுடனும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பாக மேலும் பேசுவதற்கும் நான் ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவும் உத்தேசித்துள்ளேன். எதிர்வரும் ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் புதுடில்லியில் நடைபெறவுள்ள இந்திய உலக பொருளாதார மாநாட்டின்போது இந்தியப் பிரதமருடனும், ஏனைய அமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட எதிர்பார்க்கிறேன்.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தை நாம் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கையளித்துள்ளோம். வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இலங்கையில் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்காக நாம் வெளிநாடுகளுடன் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை செய்யவில்லை. உள்நாட்டில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்காகவே நாம் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம்.
இலங்கையின் தேசிய அரசாங்கம் உலகத்தின் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது. தேசிய அரசாங்க கோட்பாட்டின் கீழ் அடுத்த ஐந்துவருட காலத்துக்குள் எமது பிரச்சினைகளுக்கு தீர்வைப்பெற்றுக்கொடுக்க நாம் எதிர்பார்க்கிறோம். எதிர்வரும் காலங்களில் இந்த செயற்பாட்டை நாம் மிகவும் வலுவாக முன்கொண்டுசெல்வோம். இந்தக் காலம் முழுவதிலும் தேசிய அரசாங்கம் நடப்பில் இருக்கும். அதுபற்றி எந்த சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை என்றும் கூறினார்.








