யாழ். பல்கலை மோதல் குறித்து விசாரிக்கக் குழு : கலகத்தை தூண்டியோருக்கு தண்டனை
யாழ். பல்கலைக்கழத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணை நடத்துவதெற்கென குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம், மோதலை தூண்டியவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
அத்துடன் விஞ்ஞான பீடம் தொடக்கம் அனைத்துப் பீட கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 20ஆம் திகதிமுதல் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்த துணை வேந்தர், கடந்த வாரம் ஏற்பட்ட மோதலைப் போன்று இனியும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை தமிழ் – சிங்கள மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து அதன் விஞ்ஞானப்பீடம் காலவரையறை இன்றி மூடப்பட்டது.
பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
வழமையாக தமிழர் பாரம்பரிய முறையான மேள தாளத்துடன் இடம்பெறுகின்ற போதிலும், தமிழ் மாணவர்களால் மேளதாள கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் சிங்கள மாணவர்கள் தமது கண்டிய நடனக் கலைஞர்களை அழைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே இருதரப்பினரிடையே மோதல் மூண்டதோடு, பலர் காயமடைந்திருந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பீடத்திற்கு தற்காலிகமாக பூட்டு போடப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பல்கலையின் துணைவேந்தர், நாளை மறுதினம் தொடக்கம் அனைத்துப் பீடங்களது கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பிக்கப்படும் என்ற தகவலை வெளியிட்டார்.








