‘மகள்கள் விரும்பினால் ராணுவத்தில் சேரலாம்’ ஒபாமா பச்சைக்கொடி
அமெரிக்காவில் போர்ட் லீ ராணுவ முகாமில் நடந்த சி.என்.என். டவுன்ஹால் கூட்டம் ஒன்றில், அந்த நாட்டின் ஜனாதிபதி ஒபாமா நேற்று முன்தினம் கலந்து கொண்டார். அங்கு அவர் பல்வேறு தரப்பட்டவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர், ‘‘உங்கள் மகள்கள் மாலியா (வயது 18), சாஷா (15) இருவரும் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பினால், அனுமதி அளிப்பீர்களா?’’ என கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஒபாமா, ‘‘ஆமாம், நீங்கள் விரும்பினால் சேருங்கள் என்று சொல்வேன். அதே நேரத்தில், அவர்கள் போருக்கு சாத்தியமாகக்கூடிய ஆயத்தங்களில் ஈடுபட வேண்டி வந்தால், நான் பதற்றம் அடைய மாட்டேன் என்று சொன்னால் நான் பொய் சொன்னவன் ஆவேன். உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள்தான். அவர்களை எஞ்சிய வாழ்நாள் முழுவதும் பத்திரமாக பார்த்துக்கொள்ளத்தான் பெற்றோர்கள் நினைப்பார்கள்’’ என பதில் அளித்தார்.
நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் பிள்ளைகளை ராணுவத்தில் சேர அனுமதிப்பேன் என்று ஒபாமா கூறினாலும், பிள்ளைகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளத்தான் பெற்றோர் விரும்புவார்கள் என்ற சராசரி பெற்றோரின் உணர்வை தானும் கொண்டிருப்பதை உணர்த்தியது அனைவரையும் கவர்ந்தது.