கொழும்பு மாநகர முதல் பெண் மேயராக பதவியேற்கிறார் ரோஸி !
கொழும்பு மாநகரசபையின் முதல் பெண் மேயராக ரோஸி சேனநாயக்க பதவியேற்கவுள்ளார். கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 1 இலட்சத்து 31 ஆயிரத்து 353 வாக்குகளைப் பெற்று 60 ஆசனங்களை தன்வசப்படுத்தியுள்ளது.
110 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகரசபையில் 60 உறுப்பினர்களை ஐக்கிய தேசியக்கட்சி பெற்றுள்ளமையினால் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. ஆனால் ரோஸி சேனநாயக்கவை மேயராகக் கொண்ட நிர்வாகம் அமைக்கப்படவுள்ளது.
இத் தேர்தலில் பொதுஜன பெரமுன 60 ஆயிரத்து 87 வாக்குகளைப் பெற்று 23 உறுப்பினர்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 31 ஆயிரத்து 421 வாக்குகளைப் பெற்று 12 உறுப்பினர்களையும் பெற்றுள்ளன. அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஒருங்கிணைந்த முற்போக்கு கூட்டணி 27 ஆயிரத்து 168 வாக்குகளைப் பெற்று 10 உறுப்பினர்களை தன்வசப்படுத்தியுள்ளது.
இதில் தொகுதி ரீதியாக வெள்ளவத்தை பாமன்கடை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட பி. பாஸ்கரா வெற்றிபெற்றுள்ளார். மேயர் வேட்பாளராக போட்டியிட்ட சண் குகவரதன் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
இருந்தபோதிலும் விகிதாசார பட்டியல் அடிப்படையில் 9 ஆசனங்களைப் பெற்று மொத்தமாக 10 உறுப்பினர்களை முற்போக்குக்கூட்டணி தனதாக்கிக்கொண்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி 14 ஆயிரத்து 234 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
நவோதய மக்கள் முன்னணியின் தலைவர் எஸ். கே. கிருஷ்ணா தலைமையில் போட்டியிட்ட சுயேச்சைக்குழு 2 ஆனது 4833 வாக்குக்களைப் பெற்று 2 உறுப்பினர்களை பெற்றுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்ட ஜனநாயக மக்கள் காங்கிரஸ் அணி 2853 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் இல ங்கை தேசிய சக்தி 3251 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 2771 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 1380 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
ஐக்கிய தேசியக்கட்சியில் கொட்டாஞ்சேனையில் போட்டியிட்ட மேல்மாகாணசபை உறுப்பினர் ராமின் புதல்வரான ஜோன் ராம் வெற்றிபெற்றுள்ளார். இதேபோன்று காயத்திரி விக்கிரமசிங்க வெற்றிவாகை சூடியுள்ளார்.
வெள்ளவத்தையில் போட்டியிட்ட திருமதி அமிர்தாம்பிகை கோபாலன், பிரணவன் ஆகியோரும் வெற்றிபெற்றுள்ளனர்.
பாமன்கடை மேற்குத் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட ஊடக வியலாளர் உமாசந்திர பிரகாஷ், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் செயலாள ரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான நல்லையா குமரகுருபரன் ஆகியோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
இத் தொகுதியிலேயே ஒருமித்த முற்போக்கு கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்ட பாஸ்கரா வெற்றி பெற்றுள்ளார்.